Thursday, December 12, 2013

“பூரணி” தோற்றம் 17-10-1913-மறைவு-17-11-2013


1913ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் ஒன்றாம் தேதி, ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தார், சம்பூரணமென்கிற எழுத்தாளர், பூரணி. அவர்கள் பெற்றோருக்கு மொத்தம் பத்துக் குழந்தைகள். அப்பா ராமசாமி அய்யர், தமிழ் பண்டிதர். பழநியில் 20 ஆண்டுகள் ஆண்கள் பள்ளியை தன் சொந்த பணத்தில் ஆரம்பித்து நடத்திவந்தார். பின் சொத்துக்கள் அழிந்துவிட்ட நிலையில் அந்தப் பள்ளியை அன்னிபெசண்டிடம் ஒப்படைத்து விட்டார். தாயார் சீதாலட்சுமி அம்மாள். கணவனின் தமிழைக் கேட்டுக் கேட்டு தமிழ் செய்யுள்களுக்குப் பொருள் கூறும் அளவுக்குப் புலமை பெற்றவர்.
ராமசாமி அய்யர் (1864ல் பிறந்தவர் இவர்) எழுதிய தொல்காப்பியத்திற்கான எளிய உரை எங்கள் வீட்டில் 1964 வரை இருந்தது, அப்போது எனக்கு வயது 14, அந்த சமயம் நாங்கள் கணியூரில் வசித்து வந்தோம், கையெழுத்துப் பிரதியாக இருந்தது. என் அம்மா சம்பூர்ண அம்மாவுக்கோ அதை நூலாகக் கொண்டுவர விருப்பம். அக்காலங்களில் அது பெரியவிஷயம். தாத்தாவை நான் பார்த்ததில்லை. ஆனாலும் அவரைப் பற்றி நிறையக் கேட்டிருக்கிறேன். ‘மடித்து வைத்த துணி மடி, வீழ்த்துப் போட்ட துணி விழுப்பு' என்பாராம். கோவில்களுக்கு வேண்டிக்கொள்ளுதல் இறைவனிடம் லஞ்சம் கொடுத்து காரியம் சாதித்துக் கொள்ளுதல் போன்றவை தாத்தா காலத்திலிருந்தே எங்கள் வீட்டில் கிடையாது. பூரணி அம்மாவின் கொள்கைகளும் கருத்துக்களும் இதை ஒட்டியேதான் இருந்தன.
1927ல் தனக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தைத் தமிழில் கவிதை எழுத உபயோகித்தார் அம்மா. நாங்கள் ஒன்பது குழந்தைகள் அம்மாவுக்கு. ஓய்வு நேரம் எப்படிக் கிடைத்ததோ தெரியாது. அப்போது ஆரம்பித்த வாசிப்பும், எழுத்துப் பதிவும் இன்று வரை தொடர்கிறது. 85 ஆண்டுகளாக ஏறக்குறைய எல்லா நிகழ்வுகளையும் தனக்குத் தோன்றிய வடிவில் கவிதையாகவோ, கட்டுரையாகவோ, சிறுகதையாகவோ கண்டவை, கேட்டவை, என பதிவு ச்செய்துள்ளார். நாட்டுப்பற்று, சுதந்திரப் போராட்டம், காந்தி வந்தது, பெண் கல்விக்காக மெனக்கெட்டது, பெண்களுக்காக மாதர் சங்கம் நடத்தியது என்று தொடர்ந்து இயங்கி வந்து கொண்டிருக்கிறார். பாரதி கலைக் கழகத்தில் இணைந்து தனது மகன் கே.வி. ராமசாமியுடன் வீட்டில் கூட்டங்கள் நடத்தியது என, கவிதை பரிசு வாங்கியது என நிறைய நிகழ்வுகள். நவீன இலக்கியவாதிகளாக இருக்கும் இன்றைய எழுத்தாளர்கள் பலரையும் அம்மாவுக்குத் தெரியும், அவர்களின் எழுத்துப் பதிவுகளின் கருத்துக்களையும் உள்ளடக்கியதாக. நேர் பேச்சும் உண்டு.
‘ஸ்பேரோ' (sparrow) அமைப்புக்காக அம்மாவை ‘அம்பை' நேர்காணல் செய்ய வந்திருந்தார். ‘அம்பை' அம்மாவின் பேச்சிலும், எழுத்திலும் ஒரு பொறியைக் கண்டார். தனது நூல் காலச்சுவடு பதிப்பகம் மூலம்தான் முதலில் வர வேண்டும் என்று அம்மா விரும்பினார். ஏற்கனெவே, எஸ்வி.ராமகிருஷ்ணன் மூலம், சுந்தர ராமசாமியைக் கேட்கச் சொல்லியிருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. ‘அம்பை'யின் முயற்சியாலும், முன்னுரையாலும், அம்மாவின் முதல் புத்தகம் (அம்பை அம்மாவின் தன் வரலாறு போடலாம் என்றார். ஆனால் அம்மாவோ தன் கவிதைத்தொகுதி காலச்சுவடு மூலம் வெளிவர வேண்டுமென்று விரும்பினார்.) அவரது 90வது வயதில் -2003ஆம் ஆண்டு- “பூரணி கவிதைகள்” நூல் ‘காலச்சுவடு' வெளியீடாக வந்தது. அம்மாவும் நானும், இன்றுவரை அதை நன்றியுடன் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம். அந்த நூல் பரவலான கவனத்தையும், அதற்கான பணத்தையும் ‘காலச்சுவடு' மூலமாக நிறையவே பெற்றுத் தந்தது. (அதுவே ஒரு தவறான புரிதலுக்கும் காரணமாயிற்று மற்ற உறவினருக்கு. இப்படித்தான் நிறைய பணம் கிடைக்கிறது இலக்கியம் மூலமாக என்ற எண்ணமும் ஏற்பட்டுவிட்டது.) அதற்கு முன்னதாகவே நானும், என் கணவர் நாகராஜனும் அச்சிலும், இண்டெர்நெட் குழுமங்களிலும் அம்மாவின் படைப்புக்களைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்தோம்.
“பூரணி நினைவலைகள்” (அவரது தன்வரலறு) எங்கள் சதுரம் பதிப்பகத்தின் மூலம் கொண்டு வந்தோம். (2005) பின் சில காரணங்களினல், மணிவாசகம் பதிப்பகம் மூலம் அம்மாவின் சிறுகதை தொகுப்பு ‘பூரணி சிறுகதைகள்” (2009) என்னும் தலைப்பில் வெளிவந்தது. அம்மா, தன் பாட்டிகளிடம் கேட்ட சிறுவர் கதைகளையும், தான் வடிவமைத்து தன் குழந்தைகளுக்கும், பெயரர்களுக்கும் சொல்லிய கதைகளையும் இணைத்து என்னிடம் 2008ம் (200 பக்கங்களுக்கு) ஆண்டு நோட்டில் எழுதி கொடுத்தார். அண்மையில் வசந்தா பதிப்பகம் மூலம் அம்மாவின் “செவிவழிக் கதைகள்” நூல் வெளியாகி உள்ளது. அவர் தனது எல்லா படைப்புக்களையும் கால வரிசைப்படி தொகுத்து நோட்டுக்களில் பதிவு செய்து வைத்துள்ளார். 1937ல் பழனியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘சித்தன்' இதழ்களிலும், கோவையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘பாரத ஜோதி' இதழ்களிலும் அம்மாவின் சிறுகதைகள் வெளியாகி உள்ளன.
அக்கால திருமணப் பாடல்களைத் தன் சொந்த வடிவத்தில் பாட்டுக்களாக இயற்றி, தொடங்கி இருக்கிறார் தன் கவிதை வெளிப்பாட்டை. பின் அதே பாடல்களில் தேசியத்தை கருப்பொருளாக்கினார். 1936-38 களில் மகளிருக்கு ஹிந்தி சொல்லிக் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து ஹிந்தியில் படித்துக் கொண்டும் இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன், வாஜ்பேயின் கவிதைத் தொகுதியை வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தேன். படித்துவிட்டு, அந்தக் கவிதைகளை மொழிமாற்றம் செய்து கொடுத்தார். வாஜ்பேயின் கவிதைகள் மரபு சார்ந்தவை எனவே அதை மரபுக் கவிதைகளில்தான் மொழிமாற்றம் செய்ய வேண்டும் என்று அழகாக செய்தார். அம்மாவுக்கு மறதி என்பதே கிடையாது. இன்று அவரின் ஒரு நோட்டு தொலைந்துவிட்டது என்று சொன்னால் அந்த நோட்டில் இருந்தவற்றை வரிசை தப்பாது அனைத்துக் கவிதைகளையும் மறுபடியும் எழுதி கொடுத்துவிடுவார். அதனால், தன் படைப்புக்களில் பத்திரிகை ஆசிரியர்கள் சிறு மாற்றம் செய்திருந்தாலும் உடனே சொல்லிவிடுவார். அந்த சொல்லை தான் உபயோகித்ததற்கான காரணத்தையும் கூறுவார். ‘சென்னை சங்கமம்' நிகழ்ச்சி 4ல் தானும் கலந்து கொள்ள ஆசைப்பட்டார். மேடையேறி கவிதையும் வாசித்தார்.
2004ம் ஆண்டு திருப்பூர் சக்தி இலக்கிய விருதும், 2007ம் ஆண்டு பொற்றாமரை கலை இலக்கிய ஆய்வரங்கம் ஆண்டுவிழாவில் வழங்கிய தங்கப் பதக்கமும் இலக்கிய சேவைக்கான பாராட்டும் பெற்றார். எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசனின் இலக்கிய கூட்டமான ‘அக்கறை'யிலும் பங்கு பெற்று பாராட்டையும் பெற்றிருக்கிறார். கணையாழி, புதிய பார்வை, படித்துறை, அணி என்று இலக்கிய இதழ்களில் பலவற்றிலும் இலக்கிய பங்களிப்பு செய்திருக்கிறார். ‘திண்ணை' இன்டெர்நெட் இதழ்களிலும் அவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன.
நாட்டுப் பற்றும், காந்தி மீது மரியாதையும் விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றோர் மீது பக்தியும் கொண்டவர். எங்களை விவேகானந்தரின் படத்தின் முன்னால் நின்று ‘பொய் சொல்லவில்லை நான் சொல்வது உண்மைதான்' என்று சொல்லச் சொல்லுவார். பொய் சொல்லியிருந்தால் நாங்கள் திரும்பவும் உண்மையை மட்டுமே கூறுவோம் அந்தப் படங்கள் மீது அவ்வளவு பக்தியும் மரியாதையும் எங்களுக்கு உண்டாக்கி இருந்தார்.
17-11-2013 (ஞாயிறு) அதிகாலை 2மணி அளவில் நிறைவாழ்வு வாழ்ந்த எனது தாயார் ‘பூரணி' என்னும் சம்பூர்ணம் அம்மாள் கைலாயப் பதவி அடைந்தார். (இந்தப்புகைப்படம் 2003இல் 'அம்பை' எடுத்தது)

16-மனக்கருவூலத்திலிருந்து

டாக்டர் வர்க்கி அம்மாள்
அவர் கவர்மெண்டு ஆஸ்பத்திரியில் உத்தியோகம் ஏற்று தாராபுரம் வந்தபோது அவருக்கு வயது சுமார் 25க்குள்தான் இருக்கும். கேரளத்தைச் சேர்ந்தவர். நல்ல நிறம். அத்துடன் அழகும் கூட, பிறருடன் நேசமாகப் பழகும் முறையால் தனவந்தர் வீட்டுப் பெண்கள்கூட சர்க்கார் ஆஸ்பத்திரியில் வைத்தியம் பார்க்க விரும்பிவருவார்கள்.வெகு சீக்கிரத்திலேயே அவர் ஊர்க்காரர்களின் அன்புக்கும் மதிப்புக்கும் உரியவராகிவிட்டார்.அவருடைய வீட்டில் அவரிரண்டாவது மகள். மூத்தவளுக்கு விவாகமாகி புருஷன் வீடு சென்றுவிட்டாள். தம்பிகள் இருவர். விதவைத்தாயார்.
அப்போதெல்லாம் (1940கள்) கவர்மெண்டு ஆஸ்பத்திரியில் ஆண்டாக்டர் ஒருவரும் பெண் டாக்டர் ஒருவரும் பணிபுரிவார்கள். ஆண் டாக்டர்  உடன் பணிசெய்யும் பெண் டாக்டரிடம் மிகவும் பண்புடனும் நேசமுடனும் பழகுவார். சில வருடங்கள் சென்றன. அந்த ஆண் டாக்டர் மாற்றலாகி வேறு ஊருக்குச்சென்றுவிட்டார். புதிதாக் ஒரு ஆண் டாக்டர் வந்தார். அவரும் நடுவயதுக்காரர்தான். குடும்பம் குழந்தைகள் எல்லாம் உண்டு. அவருக்கும் கேரளா தான். அவர் வர்க்கி டாக்டரிடம் தரக்குறைவாக நடந்துகொள்வதாகவும் அதனால் இருவருக்கும் சச்சரவு உண்டாவதாக ஊரில் பேச்சு அடிபட்டது. ஆண்டாக்டர் வீட்டின்மீது இரவில் கற்கள் வீசப்பட்டன.
நயம், பயம் எவற்றாலும் வசப்படாத பெண்டாக்டர் மேல் மேலிடத்துக்குப் புகார் எழுதி அவரை வேறு ஊருக்கு மாற்ற அந்த டாக்டர் செயல்பட்டார். ஆனால் ஊர் மக்கள் பெண் டாக்டரை மாற்றக்கூடாது என்று மனுஎழுதிக் கையெழுத்துப்போட்டு அனுப்பியதால் மாற்ரல் உத்திரவு ரத்தாகிவிட்டது. ஆனால் பெண்டாக்டரால் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் வேலை செய்ய முடியவில்லை. ஊரில் வேண்டப்பற்றவர் களிடம் தனது நிலையை அவர் விளக்கினார். ஊர்மக்கள் ‘நீங்கள் எங்கும்போகக்கூடாது. இந்த ஊரிலேயே தனியாக ஆஸ்பத்திரி தொடங்குங்கள். நாங்கள் அதை நல்லமுறையில் கவனித்துக்கொள்வோம்' என்று உறுதி சொன்னதன் பேரில் அவர் ‘ஐடாஸ்கடர்' என்னும் பெயரில் தனி ஆஸ்பத்திரி தொடங்கினார். வேலூரில் ‘ஐடாஸ்கடர்'  என்ற பிரபல டாக்டரிடம் மருத்துவம் கற்ரவர் என்றும் தன் குருவின் பெயரை ஆஸ்பத்திரிக்கு வைத்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
ஆரம்பகாலத்தில் டாக்டரம்மா சாதாரணமான ஒரு வீட்டில்தான் வசித்தார். அப்போதெல்லாம் அவரிடம் கார் கிடையாது. அந்த நாட்களில் அவர் மெலிந்த உடல் கொண்டவராகத்தான் இருந்தார். பின்னர்தான் உடல் பருத்துப் போனார். வைத்தியத்திற்கு தங்கள் வீட்டிற்கு அழைத்துச்செல்ல வசதிக்கெற்ப குதிரை வண்டியோ, வாடகைக்காரோ கொண்டு சென்று அவரைக் கூட்டிவருவார்கள்.  சில வருடங்களுக்குப் பிறகு வர்க்கியம்மாளோடு கடோத்கஜன் போன்ற தோற்றம் கொண்ட ஒருவன் அவரது மருந்துப்பெட்டியைத் தூக்கியபடி வரத்தொடங்கினான். அவன் டாக்டரின் மெய்க்காப்பாளன்போல செயல்ப்பட்டான்.  டாக்டர் அவனை ‘சாரே' என்று அழைத்தலால் எல்லோருக்கும் அவன் ‘சாரே'தான். அவனும் ஒரு மலையாளிதான்.
ஒரு சமயம் டாக்டரம்மாவை பக்கத்து கிராமத்துப் பணக்காரர் தன் மனைவிக்கு பிரசவ வலியென்று சொல்லி கார்வைத்துக் கூட்டிச்சென்றாராம். தன் வீட்டில் ஒரு அறையைக் காட்டி உள்ளே அழைத்துப் போனாராம். முனேற்பாட்டின்படி அறையை வெளியே தாளிட்டுவிட்டு டாக்டரைக் கெடுத்துவிட்டாராம். நடந்ததை வெளியில் சொன்னால் கொலைவிழும் என்று அச்சுறுத்தி அனுப்பினாராம். அதன் பிறகுதான் டாக்டரம்மா தங்கள் ஊரான கேரளத்திலிருந்து இந்த ‘சாரே' வைத் தருவித்து உடன்வைத்துக் கொண்டாராம் இப்படி ஊரில் பேச்சு அடிபட்டது. டாக்டரம்மா கார் வாங்கியபின் ‘சாரே'தான் அதை ஓட்டுபவராகச் செயல்பட்டான்

Tuesday, December 10, 2013

15-மனக்கருவூலத்திலிருந்து

சைதாப்பேட்டையில் நான் வசித்தபோது நாங்கள் குடியிருந்த வீட்டின் பின்கட்டிற்கு ஒரு குடும்பம் குடிவந்தது. அந்தவீட்டில் வயதான ஒரு அம்மாள் இருந்தார். தன் வயது 85என்று சொன்னார். கணவரை இழந்தவர். ஒரு தினம் என்னிடம் வந்து அமர்ந்துகொண்டு என் கையைப் பிடித்துத் தன் தலையில் மூன்று நான்கு இடங்களைத் தொடும்படி செய்தார். பெரிய நெல்லிக்காய் அளவிற்கு புடைத்து இருந்தது. ‘இது ஏன்?' என்று கேட்டேன், ‘அந்தக்காலத்தில் நான் என்கணவரிடம் வாங்கிய குட்டுக்கள். தொடர்ந்து குட்டுப்பட்டுப் பட்டு புடைப்புகள் நிரந்தரமாகத் தங்கிவிட்டன' என்றார். கணவனிடம் அடிபட்டிராத எனக்கு ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருந்தது. ‘நீங்கள் என்ன குழந்தையா? ஏன் தடை செய்யாமல் ஏற்றுக்கொண்டீர்கள்' எனக் கேட்டேன்.
‘என்ன செய்வது? அவர் ஒரு ஊர்சுத்தி மனிதர். அதைப்பற்றிக்கேட்டால் அடி, உதை, குட்டு என ஆரம்பித்துவிடுவார். வயதாக ஆக எக்கேடும் கெட்டுப்போகட்டும் என்று கேட்பதை விட்டுவிட்டேன். அதன் பிறகுதான் வீட்டிலும் சற்று இருக்கத்தலைப் பட்டார். அதன்மூலம் நாலு குழந்தைகளையும் பெற்றுக்கொண்டேன்' என்று சர்வ சாதாரணமாகச் சொன்னார். எனக்கு இரண்டு மூன்று நாட்கள் வயிற்றில் ஒருவிதமாக சங்கடமாகவும் அந்த அம்மாளைப் பார்க்கும்போதெல்லாம் சங்கடமாகவும் இருந்தது.

-பிளாட்டில் வசித்த காலத்தில் (1990களின் தொடக்கம்)

ரமணன் வாங்கியிருந்த பிளாட்டின் மாடியில் அவன் வீட்டுக்கு நேர் மேல் பகுதியை ஒரு குடும்பம் வாங்கி வசித்துவந்தது. அந்தப் பிளாட்டில் வசித்தவர்களில் ஆறு குடும்பத்தின் ஆண்களும் ‘ராயல் என்ஃபீல்ட் கம்பெனியில்தான் வேலை பார்த்தனர். அந்தக் குடும்பத்து ஆணும் அதில்தான் வேலை செய்தார். மற்ற இருகுடும்பத்து ஆண்கள் வேறு இடத்தில் வேலை செய்தனர்.
மாடியில் வசித்தவர் சற்று அசடு. ஆனால் மனைவி கெட்டிக்காரி. அவளும் வேலைக்குச் செல்பவள். குடும்பத்தைத் திறமையாகக் கொண்டு செலுத்துபவளாக இருந்தாள். விபரம் பற்றாத கணவனை வழிநடத்துபவளாக செயல் பட்டாள். அவர்களுக்கு ஏழுவயதில் ஒரு மகன். பாராட்டவேண்டிய விஷயம் என்றாலும் அந்த ஆணுடன் வேலை செய்யும் மற்ற ஆண்கள் கூடும்போது அந்தப்பெண்ணைப்பற்றி கேவலமாகப்பேசி தூஷிப்பதில் திருப்தி அடைவார்கள். பெண்ணின் திறமையை ஆண்களால் சகிக்க முடியுமா?
பிளாட்டின் மேற்பார்வை வருடம் ஒருவர் என்பதாக தீர்மானமாகியிருந்தது. அந்த வருடம் ரவி என்பவரின் பொறுப்பில் இருந்தது. மாடியில் வசித்தவர்களின் செருப்புகள் படிகளின் ஓரத்தில் விடப்பட்டிருந்தன. இதைச்சாக்காக வைத்து அவர் அந்தப்பெண்ணிடம் எகத்துக்கும் சத்தம்போட்டு சண்டைப்பிடித்தார். அந்தப் பெண் பின்னர் என்னிடம் “வாயாய் வார்த்தையாய் என்னிடம் சொன்னால் எடுக்க மாட்டேனா? ‘ என்று சொல்லி அழுதபோது எனக்குப் பாவமாக இருந்தது. அதே தவறு மற்ற வீட்டுப் படிகளிலும் இருந்தபோதும் அவர் அவர்களுடன் ஏன் சண்டை போடவில்லை? ‘ஏழையைக்கண்டால் மோழையும் பாயும்' என்பதுபோல அப்பாவி அகமுடையானாக இருப்பதால் இந்த மனிதருக்கு இவ்வளவு துணிச்சல்  என்று நான் எண்ணிக் கொண்டேன்.
அந்தப்பெண் இரண்டொரு மாதங்களில் உடல்நலம் குன்றி இறந்து போனாள். சாதுவாக இருந்தாலும் சம்பாதிப்பவனாக இருந்ததால் அந்த ஆளை கல்யாணத் தரகன் பசப்பி அவரின் செலவிலேயே ஒரு ஏழையான முப்பதுக்கும் மேற்பட்ட வயதுடைய பெண்ணை மணமுடித்துக் கொடுத்தார். அந்தப் பெண்ணும் எங்கோ வேலை பார்ப்பதாகச் சொல்லிக்கொண்டனர். அவள் தினமும் இரவில் நேரம் கழித்துத்தான் வீடு திரும்புவாள். மூத்தாளின் மகனை எப்போது பார்த்தாலும் ‘தேவடியா மகனே'' என்று திட்டியும் அடித்தும் கொடுமைப்படுத்துவாள். அவள் கணவர் இது தாங்காமல் முதல் மனைவியின் தாயாரை அழைத்து அவருடன் மகனை அனுப்பிக் கொடுத்துவிட்டார். சில மாதங்களிலேயே அவள் எவனுடனோ ஓடிப் போய்விட்டாள்.

Thursday, December 27, 2012

14-மனக் கருவூலத்திலிருந்து

செடி ஆசை


நான் மிகச் சிறியவளாக, நாலைந்து வயதாக இருக்கும்போது எங்கள் குடும்பம் எதிர்ச்சாரியில் உள்ள ஒரு வீட்டிற்குக் குடி போனது. அந்த வீட்டின் முன்புறம் கொஞ்சம் மண்தரை காலியாகவும், வீட்டின் முன்புறம் அந்தக் காலியிடத்தை வளைத்து சற்று உயரமான சுவரும் மூங்கில் கதவும் இருந்தன. என் தாய் அந்தக் காலியிடத்தில் அவரை, புடலை, பூஷிணி,பறங்கி, பீர்க்கு விதைகளை நட்டு அவற்றுக்கு தினமும் நீர் ஊற்றவும் சில நாட்களில் அவை முளைத்து இலைவிட ஆரம்பித்தன. இது எனக்குப் புதிய செய்தி. தினமும் காலையில் எழுந்தவுடன் செடிகள் அருகே சென்று அமர்ந்து கொண்டு வாஞ்சையுடன் அவற்றைத் தொட்டுத் தொட்டுப் பார்ப்பேன். அவை வளர்வதை ஒரு அதிசயமாகப் பார்த்து மகிழ்வேன். அவற்றுக்கு சிறு சிறு பந்தல் போட்டதும் அவை பந்தலில் ஏறின.

என் அம்மா எந்தச்செடியில் எந்தக்காய் காய்க்கும் என கடையிலிருந்து வாங்கிவரும் காயைக் காட்டி விளக்குவார். வீட்டுச் செடிக்காய் சாப்பிட வேண்டும் என மிகுந்தஆசையோடு இருந்தேன். ஆனால் என் தகப்பனாருக்கு சோழவந்தானென்னும் ஊரில் வேலைகிடைத்து பழநியிலிருந்து புறப்பட நேர்ந்தது. என் ஏமாற்றமும் அழுகையும் என்தாயையும் பாதித்தது. அவர் என்னை சமாதானப்படுத்தி அந்தக் கொடிகளிலிருந்து இளந் தளிர்களைப் பறித்து கூட்டு செய்து உண்ணச்செய்தார். இன்றும் அக் கூட்டு வழக்கமான கீரைக் கூட்டைவிட ருசியாக இருந்ததாகவே தோன்றுகிறது.

பிறகு, நான் வசிக்க நேர்ந்த வீடுகள் எதிலும் செடி போட வசதி இருக்க வில்லை. ஆனால் எனக்கு செடிகளின் மீது அளவற்ற ஆசை. வாசலிலும் கொல்லையிலும் வளரும் குப்பை செடிகளைப் பார்த்து மகிழ்வேன். திருமணம் ஆனபின் கணவன் வீடுவந்து சொந்த வீடு கட்டிய பின் வாசலிலும் கொல்லையிலும் நிறையச் செடிகள் வைத்தேன். மல்லிகைப் பந்தல் நிறைய மல்லிகை மலர் பூத்துக்குலுங்கும். அக்கம் பக்கத்தில் எல்லோருக்கும் கொடுப்பேன். கொல்லையில் பல்விமான காய்கள் ஏராளமாகக் காய்த்தன.

சொந்தவீட்டை விற்றபின் வசித்த எந்த வீட்டிலும் செடி வைக்க முடிந்த தில்லை. சைதாப்பேட்டை புஜங்கராவ் தெருவில் ஏழு குடித்தனத்துக்கு நடுவில் குடியிருந்தபோது கொல்லையில் அடுக்கு மல்லிசெடி ஒன்றை நட்டேன். அது பூக்க ஆரம்பிக்கும் சமயம் வீடு மாற்ற நேர்ந்துவிட்டது. அந்த மல்லிகைப் பூக்களை தொடுத்து அங்கு வசித்த மற்ற வீட்டுக் குழந்தைகள் எங்கள் வீட்டிற்கு என் பேத்தியுடன் விளையாட வந்தன. மனதில் ஒரு மெல்லிய வலி.

நங்கநல்லூரில் பிளாட்(flat) இல் வசித்தபோது (மகனின் சொந்த வீடு) வெளிச்சுவரில் காலியாக இருந்த மண்ணில் என்பேத்தியிடம் வாடிய ‘துலுக்க ஜவந்தி' பூவைக் கசக்கிக் கொடுத்து ‘அந்தக் குழியில் போட்டு தினமும் ஜலம் ஊற்றி வாருங்கள் செடி முளைத்துப் பூக்கும்' என்று சொன்னேன். அவ்வாறே அவர்கள் செய்யவும் செடி முளைத்து பூக்கவும் தொடங்கியது. அது நாள் வரை மற்றவர்களால் திரும்பியும் பார்க்கப்படாத அந்த இடம் கவனம் பெற்றது. மற்ற குடித்தன வீட்டுக் குழந்தைகள் அந்தப் பூக்களைப் பறித்துக்கொண்டு செடிக்கு சொந்தமும் கொண்டாட ஆரம்பித்தனர். பெரியவர்களும் அதற்கு துணைப் போயினர்.
பிளாட்டை விற்றுவிட்டு சிட்லபாக்கத்தில் நிலம் வாங்கி வீடு கட்டிய பிறகு வீட்டை சுற்றி நிறையச் செடிகள். பலவண்ண செம்பருத்தி பூ செடிகள். ரோஜா, நித்திய மல்லி, கனகாம்பரம், நந்தியாவட்டை, துளசி போன்ற செடிகளுடன் தென்னை, கொய்யா, ரஸ்தாளி வாழை, சாதா வாழை என்று எங்கும் பசுமையாக இருந்தது. ஆனால் வருடம் செல்லச் செல்ல பராமரிப்பும் கவனமும் குறைந்து அலட்சியம் மேலிட்டது. பாம்பு நடமாட்டம் அதிகரித்து விட்டது, உதிரும் இலை தழைகளால் நடப்பது இடைஞ்சலாக இருக்கிறது என்று சொல்லி என் மகன் எல்லா மரங்களையும் வெட்டிவிட்டான். இப்போது மிஞ்சுவது ஓரிரு தென்னையும், ஒரு வெள்ளைப்பூ செடியும்தான்.

Wednesday, December 26, 2012

13-மனக் கருவூலத்திலிருந்து

கவலையாக இருக்கிறது

    படிக்காத பெண்கள் என்றாலும், அக்காலப் பெண்கள் ஆன்மீகம் பற்றி ஒரு தெளிவோடு இருந்தனர். அந்தக் காலத்தில் வெளிப்பார்வைக்கு ஆண் ஆதிக்கமாகத் தோன்றினாலும் மனைவியைக் கலந்து கொள்ளாமல் எதிலும் தன்னிச்சையாக முடிவு எடுத்துவிட மாட்டார்கள். வீட்டோடு இருந்து சமைத்துப் போட்டு, குழந்தைகள் பெற்றதை அக்காலப் பெண்கள் இழிவாக நினைக்க வில்லை. அது தங்களுக்கு பாதுகாப்பான, பத்திரமான இடமாகக் கருதினார்கள். எந்த ஒரு விஷயத்தையும் நல்லதாகவும் எடுத்துக் கொள்ளலாம், கெட்டதாகவும் எண்ணலாம். குடித்தனமோ துரைத்தனமோ எதுவானாலும் அதிகாரம் கையில் இருந்தால் அகந்தையும் சர்வாதிகார மனோபாவமும் சிறிது சிறிதாக வளர்ந்து விடுகிறது. ஆதிகாலத்தில் சமூகத்தில் பெண்களை அதிகம் மதிப்போடுதான் வைத்திருந்தனர் என்று தெரிகிறது. ஆனால், காலக் கிரமத்தில் பெண்களின் அன்பும், இளகிய மனமும், பெற்றெடுத்த குழந்தை களின்மேல் அவர்களுக் கிருந்த பாசமும், தியாக மனோபாவமும், உழைப்பும் ஆண்களுக்குப் பெண்களை அடக்கி ஆளமுடியும் என்ற எண்ணத்தை உண்டாக்கிவிட்டது. பொறுமையும், அன்புமே பெண்களுக்கு விலங்காக மாறி விட்டது.

‘ஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்குக் கொண்டாட்டம்' என்னும் பழமொழிக்கு ஏற்ப, பெண்களை மட்டம் தட்டுவதும், அவர்களின் உழைப்பைக் கண்டு கொள்ளாமல் அலக்ஷியமாகப் பேசுவதும், சாத்திரத்தின் பெயரால் அவர்களின் சுதந்திரத்தையும் ஆசைகளயும் நசுக்குவதும், அவர்களை அடிமைகள் போல பாவிப்பதும் நடைமுறைக்கு வந்தது. அதிகம் சாப்பிட்டால் பெண்ணுக்கு உடல் வலிமை வந்துவிடும் என்னும் பயமும், அவளைத் தொட்டு தனக்கு செலவு அதிகம் ஆகிவிடக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வும்தான் “உண்டி சுருங்கல் பெண்டிற்கழகு” என்று சொல்ல வைத்தது. அவ்வை ஒரு பெண்ணாக இருந்தபோதிலும் சொன்னத்தைச் சொல்லும் ஒரு கிளிப் பிள்ளையாகத்தான் இருந்திருக்கிறாள். கூறாமல் சன்யாசம் கொள்ளச் சொன்னவளுக்கு ஏறுமாறாக இருக்கும் ஆண்களைவிட்டு விலகி சுதந்திரமாக பெண்கள் வாழவேண்டும் என்று சொல்லத் தோன்றவில்லை.

பிள்ளைப் பெறுவதை ஒரு சாக்காக வைத்து, பெண்களைப் பள்ளத்தில் இறக்கி பரிதவிக்க வைப்பதைக் கண்டு மனம் வெறுத்த பெண்கள்தான் இன்று ‘பெண்ணியம்' என்னும் புரட்சிக்கொடி தூக்கியிருக்கின்றனர். இதன் விளைவு எதுவானாலும் ஆகட்டும்; அதனால் ஆண்குலத்துக்கும்தானே கேடு உண்டாகும் என்று துணிந்துவிட்டனர். இப்போதெல்லாம் படிக்காத, உத்தியோகம் பார்க்காத பெண்களைக் காண்பது குறைந்து வருகிறது. ஆனாலும் நெடுநாளயப் பழக்க வழக்கங்கள் மாறாமலேயே இருக்கிறது. ஆபீஸ் போகிறவள் ஆனாலும் அகமுடையானுக்கும், மாமன் மாமிக்கும் செய்ய வேண்டிய கடமைகளைத் தவிர்க்க முடிவதில்லை. ‘ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்' என்பதுபோல, இரண்டுபங்கு வேலைகள் செய்ய நேர்கிறது. உதறவோ எதிர்த்துப் பேசவோ பெண்களால் முடிவதில்லை.

மிகவும் துணிந்த பெண்களோ ‘ஆண் பல பெண்களுடன் உறவுகொள்வது இல்லையா அது போல நாங்களும் வாழ்வோம். நாங்களும் குழந்தை பெற்றுக் கொள்வதை செயற்கை முறையில் தவிர்த்து விட்டு சுதந்திரக் காதலில் ஈடு படுவோம்' என்று கிளம்புகின்றனர். இவையெல்லாம் எங்குபோய் முடியப் போக்¢றது என்று சொல்ல முடியவில்லை பயமாக, கவலையாக இருக்கிறது.

Friday, November 23, 2012

கரும் பலகைகள்-(பூரணி கதைகள்)சிறுகதைத் தொகுதி

கரும் பலகைகள்

அது ஒரு சதுரமான ஹால். ஹாலை ஒட்டி, வலது புறம் சந்து போன்ற ஒரு அறை. எதிர் புறம் ஹாலை ஒட்டி இரு அறைகள். அந்த அறைகளில் வாத்தியாரின் குடும்பம் வாசம். ஹாலின் நான்கு மூலைகளிலும் அங்கங்கு சேர் டேபிள், பெஞ்சுகள், சுவர்களில் கரும்பலகைகள். நான்கு வகுப்புகள் அங்கு நடக்கும். அந்த வாத்தியார்தான் ஹெட் மாஸ்டர். அவரின் மனைவி நான்காம் வகுப்பு ஆசிரியை. ஒன்று, இரண்டு வகுப்புகளுக்கு வெளியிலிருந்து இரண்டு பெண் ஆசிரியைகள் வருவார்கள். சந்து போன்ற நீண்ட அறையில் பாலர் வகுப்பு நடக்கும். அந்த வகுப்பூக்கு ஹெட்மாஸ்டரின் மூத்த மகள் மேரி ஆசிரியை. வயது 22 இருக்கலாம். அது கிரிஸ்துவ மதத்தார் நடத்தும் பள்ளி ஆதலால் ‘பைபிள்' பாடம் புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு என்ற மத போதனைப் படங்களும் உண்டு.

    வாத்தியாருக்கு ஆண் குழந்தை கிடையாது. இரண்டாவது மகள் ஜெசியும் மூன்றவது மகள் ரூபியும் ஹை ஸ்கூலில் படித்து வந்தனர். இரண்டாவது மகள் ஜெசியோடு அடிக்கடி ‘சிவா' என்னும் சக மாணவன் அவர்கள் வீட்டுக்கு வருவான். அந்த வாலிபன் கலகலப்பாக அவர்களோடு பழகுவான். பணக்காரப் பையன்.

    வகுப்பு நேரமாக இருந்தாலும் கூட அவன் வந்து விட்டால் மேரி உள்பட அந்தக் குடும்பமே அவனோடு பேச உட்கார்ந்துவிடும். பாடம் நடக்காது. வாத்தியார் குடும்பம் பொருளாதார வசதி குறைந்த குடும்பம். சிவா அவ்வப்போது  பொருள் உதவி செய்வான் என்று தோன்றியது. சிவா வந்தால் மேரி முகம் பூவாய் மலர்ந்துவிடும்.

    மேரிக்கு கலியாண முயற்சிகள் நடக்கலாயிற்று. முப்பது வயதுடைய தொழிலதிபர் ஒருவர் பெண் கேட்டு வந்தார். முதல் மனைவி ஒரு பெண் குழந்தையை விட்டுவிட்டுச் செத்துப் போய் விட்டதாகவும், ஆனாலும் ஆள் அம்பு நிறைய  இருப்பதால் அந்தக் குழந்தையை மேரி கவனிக்கத் தேவை இல்லை என்றும் சொன்னார்.

வாத்தியார் குடும்பத்திற்கு பூரண திருப்தி. ஆனால் மேரிக்கு விருப்பம் இல்லை. அழத் தொடங்கி விட்டாள். கல்யாண ஏற்பாடுகள் நடக்க ஆரம்பிக்கவும் சிவாவின் வருகை அநேகமாக நின்று விட்டது.

ஒரு நாள் வாத்தியாரம்மாள் பக்கத்து வீட்டுக்காரியிடம் சொல்லிக் கொண்டு இருந்தாள் “நடக்க முடியாததற்கு ஆசைப்பட்டால் முடியுமா? இந்த மாப்பிள்ளைக்கு என்ன குறை? ஏகமான சொத்து. ரூபியின் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறார்'' என்று.

கல்யாணம் சிறப்பாக நடந்தது. சர்ச்சுக்கு நாங்கள் மாணவியர் எல்லோரும் சென்றிருந்தோம். பிறகு என் படிப்பு நின்று, கல்யாணமாகி, நான் கணவன் வீடு சென்று விட்டேன்.

சில வருடங்கள் சென்று நான் பிறந்த வீடு வந்திருந்தேன். என் பள்ளித் தோழி பட்டு என்னைக் காண வந்திருந்தாள். வாத்தியார் குடும்பத்தைப் பற்றி நலம் விசாரித்தேன். பட்டு வருத்தமாகச் சொன்னாள், “பாவம், மேரி செத்துப் போய் விட்டாள். அவள் புருஷன் மிகவும் கெட்டவனாம். மூத்த மனைவியை அவன் தான் கொன்றனாம். மேரியை மிக மிகக் கொடுமைப்படுத்தி, அவள் தங்கை ரூபியையும் கெடுத்து, அடித்து இருவரையும் மிகவும் துன்பப் படுத்தினானாம். ரூபியை அவனுக்குத் தெரியாமல் யாருடனோ பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, தூக்கு மாடிக் கொண்டு செத்துவிட்டாள்''.

இவைகளைக் கேள்விப்பட்டு நான் கலங்கி அப்படியே நின்று விட்டேன்.


Wednesday, September 19, 2012

12-மனக் கருவூலத்திலிருந்து

நல்ல/கெட்ட சகுனம்

    நல்ல சகுனம் பார்த்துக் காரியங்களைத் தொடங்குதல் என்பது மனதுக்கு ஒரு அமைதியை, சந்தோஷத்தைத் தருகிறது என்பது உண்மைதான். ஆனால் அபசகுனமாகத் தான் பிறரால் உணரப்படும்போது அந்த மனம் என்னபாடு படுகிறது என்பது அந்த நிலையை அனுபவித்தவருக்குத்தான் தெரியும்.

‘பல்லி' சகுனங்கள்

    முன்பு எப்போதோ ஒரு புத்தகம் படிக்கக் கிடைத்தது. அது பல்லி சாத்திரப் புத்தகம். படிக்க ரசமாக இருந்தது. அதில் ஒரு செய்யுள்:

முன்னாவது வலமாவது
மொழியின் திருவருளாம்
பினாவது இடமாவது
பேசும்குரல் பல்லி
சொன்னால் அதை
உமை கேளென
அரனார் மொழிகுவதால்
பொன்னாவது பொருளாவது
உயிராவது போமே
    இது தவிர, பல்லி விழுதலின் பலன், பல்லி எத்தனை முறை சப்தம் செய்கிறது என்ற எண்ணிக்கைக்குத் தக்க பலன் என்பதுபோன்ற பல விவரங்கள் செய்யுள் வடிவில் இருந்தன. ஒருநாள் என் தலையில் பல்லி விழுந்தது. பலன் பார்த்தேன். ‘தலை கலகம்' என்றும், ‘சிகை மரணம்' என்றும் எழுதியிருந்தது. சிகையில்லாமல் தலை இருக்கமுடியுமா? என்ன நடக்கிறது பார்க்கலாம் என்று காத்திருந்தேன். எதுமே நிகழவில்லை. பல்லிகள் வலப்புறச் சுவரில் அமர்ந் திருக்கும்போது சப்தமிட்டுவிட்டு இடப்புற சுவருக்கு நகர்ந்தும் சப்தமிடுகின்றன. ஒரே நாளில் சில மணி இடைவெளிகளில் சப்தமிடுகிறது. இதில் எதை எடுத்துக் கொள்வது? ஆக, இந்தப் பல்லி ஜோசியம் குழந்தைகள் விளையாட்டு என்று தீர்மானித்துக் கொண்டேன்.

    ஒரு முறை நான் பூக்காரியைக் கூப்பிட்டுப் பூ வாங்கினேன். என் மறுமகள் அந்தப் பூச்சரம் முழுவதையும் சுவாமி படத்திற்கு சாற்றி விட்டாள். நான், ‘நீ ஏன் பூ வைத்துக் கொள்ளவில்லை?' என்று வினவினேன். ‘நீங்கள் விதவைப் பெண்ணிடம் பூ வாங்கினீர்கள். அவள் எதிரில் அதைச் சொல்ல முடியாமல் பேசாதிருந்தேன். சுமங்கலிகள் விதவையிடம் பூவாங்கி வைத்துக் கொள்ளக் கூடாது அல்லவா?' என்று பதில் சொன்னாள் மறுமகள். எனக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. கணவனை இழந்த ஒரு பெண் ஒரு தொழில் செய்துகூடப் பிழைக்க முடியாதா? என்ற எண்னமும், நாம் இவ்வாறான பெண்களிடம் தானே பூ வாங்கி வைத்துக் கொள்கிறோம். நமக்கு ஒன்றும் நேர்ந்து விடவில்லையே! இந்தக் கிழவயதிலும் சுமங்கலியாகத்தானே இருக்கிறோம் என்றும் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

    மகனும் மறுமகளும் சம்பளம் வாங்கி வந்தால் என் கணவரையும் என்னையும் சேர்த்து நிற்கவைத்து தட்டில் சம்பளப் பணத்தை வைத்து எங்களிடம் கொடுத்து நமஸ்காரம்செய்து, பின் அதை வாங்கிக் கொள்வார்கள். என் கணவர் சற்று மூளைக் கலக்கமாக இருந்தார். தட்டில் இருக்கும் பணக் கட்டை எடுத்து எண்ணத் தொடங்கிவிடுவார். கடை முதலாளியாய் இருந்த போது பணம் புழங்கிய பழக்க தோஷம். என் மகன் அவர் கையிலிருந்து அதை வெடுக் என்று பிடுங்கிக் கொள்வான். நான் மனதிற்குள் ‘எண்ணிப்பார்க்க அனுமதித்தால்தான் என்ன? பணத்தைத் தின்றா விடுவார்?' என்று சிரித்துக் கொள்வேன். அவர் காலமான பிறகு அந்த நாடக அரங்கேற்றம் நின்று விட்டது.

    சாதாரணமாக சகுனம் பார்ப்பவர்களும் கூட, பெற்ற தாயிடம் சகுனம் பார்க்கக் கூடாது என்பதாக சாத்திரம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வீட்டின் சுபகாரியங்களின் துவக்கத்தில் மஞ்சள் பூசிய இரண்டு தேங்காய் களை விதவையானாலும் தாயாரிடம் கொடுத்து நமஸ்கரித்து வாங்கிக் கொள்வது வழக்கம். ஆனாலும் சகுன நம்பிக்கை உள்ளவர்களுக்கு அவ்விடத்திலும் சகுனம் பார்க்கத் தோன்றிவிடுகிறது.

11-மனக்கருவூலத்திலிருந்து

சைதை நினைவுகள்
   
நான் சைதாப்பேட்டையில் வசித்தபோது குடியிருந்த தெருவுக்கு ‘புஜங்கராவ் தெரு' என்று பெயர். அந்தத் தெரு முடியும் இடத்தில் குறுக்காக ஒரு தெரு போகும். அது தாண்டி புஜங்கராவ் தெரு ஒரு சந்தாகத் தொடரும். அந்த சந்துக்கு ‘சாமியார் தோட்டம்'என்று பெயர் என்பதாக நினைவு. அதில் பெரும்பாலும் ஹரிஜனங்களும், பிராமணர் அல்லாத வேறு சில ஜாதிக் காரர்களும் குடிசைகளிலும் சிறு ஓட்டுவீடுகளிலும் வசித்து வந்தனர்.  புஜங்க ராவ் தெருவில் அனேகமாக பிராமணக் குடியிருப்புகள்தான். மாலை நேரங்களில் அந்த சந்துத்தெரு குழந்தைகள் புஜங்கராவ தெருவுக்கு விளையாட வந்து விடுவார்கள். பிராமணக் குழந்தைகளும் அதில் சேர்ந்து கொள்வார்கள். எனக்குத் தெரிந்து எந்தப் பெரியவரும்  இதை ஆக்ஷேபித்ததோ தடை செய்ததோ கிடையாது.

ஒருநாள் ஒரு சிறுவனுடைய பத்துப் பைசா காசு காணாமல் போய் விட்டது. சிறுவன் பலமாக அழத் தொடங்கினான். எல்லாப் பிள்ளைகளையும் ஒன்று சேர்த்தி நிறுத்தினான் வேலு என்னும் ஒரு சிறுவன். ஒவ்வொரு வரையும் சோதனை போட்டான். கண்ணன் என்னும் பிராமண சிறுவனிடமிருந்து காசு கண்டுபிடிக்கப்பட்டது. சோதனை போட்ட பையன் ‘தூ' என்று காறித் துப்பினான். பின்பு, “ ஏண்டா! பாப்பாரப் பிள்ளையாக இருந்துகிட்டு இப்படி காசு திருடலாமா?” என்று கேட்டான். கண்ணன் வெட்கித் தலைகுனிந்தான். பின்னர் வேலுவிடம் கெஞ்சலாக, “சித்த இருங்கடா நான் இதோ வந்து விடுகிறேன்” என்று சொல்லித் தன் வீட்டுக்கு விரைந்தான். திரும்பி வந்தவனிடம் ஒரு ஐந்து பைசா நாணயம் இருந்தது. அழும் பையனிடம் கொடுத்து “இதையும் வெச்சுக்கோடா! என்னப்பத்தி நீங்க யாரும் யாருகிட்டயும் சொல்லாதீங்கோ நான் ஏதோ கிறுக்குத்தனமா காசை எடுத்துட்டேன்” என்று தாழ்வாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.
    என் வீட்டுத் திண்ணையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, அந்தப் பிள்ளைகளின் கட்டுப்பாடும் ஒற்றுமையும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது.
மற்றொரு நாள்
    அன்றுபோலவே இன்றும் நான் திண்ணையிதான் உட்கார்ந்திருந்தேன். அதே பையன்களின் கூட்டம். வெயிற்காலமாதலால் மாலையானாலும் புழுக்கமாக இருந்தது. வேலு என்னிடம் வந்து, “மாமி ரொம்ப தாகமாயிருக்குது குடிக்கக் கொஞ்சம் தண்ணி தருவீங்களா?” என்று கேட்டான். நான் பெரிய எவர்சில்வர் பாத்திரத்தில் ஜலமும் அதற்குள் ஒரு டம்ளரும் போட்டுக் கொடுத்தேன். வேலு தான் முதலில் குடித்துவிட்டு பின்பு மற்றவர்களுக்கும் கொடுத்தான். எல்லோரையும் கூட்டிவைத்துக் கொண்டு இரகசியமாக ஏதோ சொன்னான். மொத்தப்பசங்களும் அங்கிருந்து ஓடிவிட்டதுகள், என் பாத்திரம் டம்ளர் சகிதம்! எனக்கு ‘திக்' என்று ஆகியது. நேரம் ஓடியது அவர்கள் யாரும் கண்ணிலேயே படவில்லை. பாத்திரம் போனது போனதுதான் என்று எண்ணியவாறு எழுந்து உள்ளே சென்றேன். சற்று நேரத்தில் வீதியில் வேலு வந்து ‘மாமி' என்று குரல் கொடுத்தான். நான் திரும்ப வீட்டு வாயிலுக்கு வந்தவுடன் வேலு ‘கலகல' வென்று சிரித்தபடி பாத்திரத்தைக் கொடுத்தான். பின்பு, “பயந்துடீங்களா? சும்மா உங்ககிட்ட கொஞ்சம் தமாசு செஞ்சேன்” என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டான்.
மீண்டும் ஒரு நாள்
   
தேர்தல் நேரம். அன்று மாலையிலும் சிறுவர்கள் தெருவில் கூடினார்கள். அன்று வேலுவைக் காணோம். அவன் தன் அத்தை வீடு போயிருப்பதாக அவர்கள் பேசிக்கொண்டார்கள். இரண்டு சிறுவர்களின் கையில் சாக்கட்டி இருந்தது. ஒருவன் தார் சாலையில் எழுதினான், “ஏய் அம்பட்டப் பயலே நீ தோத்துத்தான் போவே” இன்னொருவன் “ஏய் மலையாளப் பறப்பயலே நீ தோக்கத்தான் போறே” இருவருக்கும் தகராறு வெடித்தது. ‘நீ கண்டியா அம்பட்ட சாதி எண்டு? நீ கண்டியா பறசாதியெண்டு?' என்பதாக கூட்டம் இரு பிரிவாக சண்டையிடத் தொடங்கியது. எங்கிருந்தோ வந்தான் வேலு. எல்லோரையும் அடக்கினான். பிறகு, சாக்கட்டி எழுத்தையெல்லாம் தன் கால்களால் தேய்த்து அழித்தான். ‘இனி இந்த மாதிரியெல்லாம் எழுதினீங்களோ போலிஸ்காரனைக் கூப்பிட்டு ஒதைக்கச் சொல்வேன்' என்று சத்தம்போட்டான். சிறுவர்கள் எல்லோரும் பிடித்தனர் ஓட்டம்.
வேலைக்காரி
 நாங்கள் குடியிருந்த வீட்டுச் சொந்தக்கரியின் பெயர் பத்மா. அய்யங்கார் குடும்பம். அவளது கணவருக்கு ஏதோ ஒரு கம்பனியில் உத்யோகம்.  ரமணி, பரத் என்று  இரண்டு ஆண் பிள்ளைகள். ரமணி கிரிகெட் ஆட்டத்தில் திறமைசாலி அவனிடம் விளையாட வென்று ஒரு குழுவே இருந்தது. வீட்டுத் தாழ்வாரத்தில் விளையாடுபவர்களின் அனைத்துப் பொருள்களும் குவிந்திருக்கும். அவன் பெரிய அளவில் வருவான் என்று பத்மா நம்பினாள். ஆனால் அது நிகழவில்லை. அவனது ஆட்டத்தில் மயங்கி ஒரு ஐயங்கார் பெண் அவனை காதலித்து, திருமணம் செய்துகொண்டாள்.
    பத்மா விட்டுக்கும் என் வீட்டுக்குமாக சுமார் பதினெட்டு வயது மதிக்கத் தக்க மாத்துவ பிராமணப் பெண் ‘பத்து'ப் பாத்திரம் தேய்க்கும் வேலை செய்து வந்தாள். அழகி, நக்மா சாயலில் உயரமாக இருப்பாள். மிகவும் ஏழைக்குடும்பம். அம்மா, அப்பா, இரண்டு தம்பிகள், ஒரு தங்கை கொண்டது. எங்கள் இருவருக்குமே அவள்மீது ஒரு அனுதாபம். நான் காலையில் காப்பியும் டிபனும் கொடுத்துவிடுவேன். பிற்பகலில் பத்மா அவளை தன் வீட்டில் உட்காரவைத்து சூடாக நெய்யுடன் சாப்பாடு போடுவாள். மாலையில் காபியும் தருவாள். அந்தப் பெண்ணும் நன்றாக வேலை செய்வாள். ஒரு நாள் பத்மா வெளியில் சென்றிருந்த தால் மாலை காபி அந்தப் பெண்ணுக்கு கொடுக்கப்படவில்லை.  மறுநாள் அந்தப் பெண் வேலைக்கு வரவில்லை. நானும் பத்மாவும் அவளுக்கு உடல் நலக் குறைவோ என்று யோசித்து அவள் வீட்டுக்குச் சென்றோம். அந்தப் பெண் போர்த்திப் படுத்திருந்தது. அவளது தந்தை, “அவள் இனிமேல் வேலைக்கு வரமாட்டாள். நீங்கள் அவளுக்குக் காப்பிக்கு சில்லரையாவது கொடுத்துவிட்டுப் போக வேண்டாமா?” என்று சத்தம் போட்டார். பத்மா பதிலுக்கு, “இது என்ன பேச்சு? சாதாரணமாக வேலைகாரிக்கு காலையில் ஒரு காப்பி கொடுப்பது தான் வழக்கம். சம்பளத்தைக் கூட்டித் தருவதால் யாரும் இப்போதெல்லாம் சாப்பாடு (பழையது) கூடத் தருவது வழக்கம் இல்லை. நாங்கள் இருவரும்தான்  பிராமணப்பெண் என்று பரிதாபப் பட்டு கொடுக்கிறோம் வெளியில் போவ தென்றாலும் கொடுத்துவிட்டு போக வேண்டும் என்று சட்டமா? என்று கேட்டாள். அந்தப் பெண்ணின் பெற்றோர் கூச்சலிட்டு சண்டைபோடவும் நாங்கள் அங்கிருந்து வந்துவிட்டோம்.
    மாலையில் அந்தப் பெண் எங்கள் வீட்டுக்கு வந்து அழுதபடி, “எங்கள் வீட்டாருக்கு நான் நல்ல சாப்பாடு சாப்பிடுவது பொறுக்கவில்லை. சாப்பிடாதே சம்பளத்தைக் கூட்டித்தரச்சொல் என்று மிரட்டுகிறார்கள்” என்று சொன்னாள். நாங்கள் இருவரும் அவளுக்குச் சேரவேண்டிய சம்பளப் பணத்தை முழுவதுமாகக் கொடுத்து வேலையிலிருந்து நிறுத்திவிட்டோம். அவள் என்னிடம் அவ்வப்போது கொடுத்துவைத்திருந்த பணம் ரூபாய் இருபதையும் கொடுத்து அனுப்பிவிட்டேன்.
அந்தப் பெண் காசுக்குத் தன் உடலை விற்பவள் என்றும் சாமியார் தோட்டத்து ஆண்கள் அவளது வாடிக்கையாளர்கள் என்றும் பின்னர் தெரியவந்தபோது  மிகவும் அருவெறுப்பாக உணர்ந்தேன்.

Monday, July 23, 2012

கணவன்-சிறுகதை
1967. அப்போது நான் சென்னையில் (திருவான்மியூரில்) என் இரண்டாவது மகனுடன் வசித்து வந்தேன். பெரிய மகள் வடக்கே நாட்டின் எல்லையில் தன் கணவனுடன் வசித்து வந்தாள். ஒரு நாள் மறுமகனிடமிருந்து கடிதம் வந்தது. அதில் என் மகளுக்கு குறைப் பிரசவம் ஆகியிருப்பதால் உதவிக்கு என்னை உடன் புறப்பட்டு வரச் சொல்லி எழுதியிருந்தாள் என் மகள். நான் புறப்பட்டவுடன் தகவல் கொடுத்தால் மறுமகன் டில்லி ரயில் நிலையம் வந்து கூட்டிச் செல்வார் என்றும் சொல்லியிருந்தாள்.

இரண்டொரு நாளில் நான் புறப்பட்டேன். நான் தனித்துப் பயணம் செய்தது கிடையாது; தயக்கமாக இருந்தது. மகனும் மறுமகளும் ரயில் நிலயம் வந்து நான் பயணம் செய்யும் பெட்டியில் யாராவது தமிழ் பேசுபவர்கள் டில்லிவரை செல்பவர் உள்ளனரா எனத் தேடினர். யாரும் இல்லை என்று தெரிந்ததும் எங்களுக்கெல்லாம் மிகவும் தயக்கமாக இருந்தது. அச்சமயம் அந்தப் பெட்டியில் பயணம் செய்யவிருந்த ஒரு வடநாட்டுப் பெண்மணி என் மகனிடம் ஆங்கிலத்தில் பேசி நிலைமையைத் தெரிந்து கொண்டார். பின்பு மகனிடம், “ நீங்கள் தைரியமாக உங்கள் தாயாரை என் பொறுப்பில் விட்டுவிடுங்கள். நான் டில்லி சென்று அங்கிருந்து காஷ்மீர் செல்கிறேன். டில்லியில் உங்கள் தாயாரை அவர் மறுமகன் வந்து அழைத்துச் செல்லும்வரை கூட இருந்து பார்த்துக் கொள்கிறேன்” எனச் சொல்லி தன் பக்கத்தில் என்னை அமர்த்திக் கொண்டார். வண்டி புறப்பட்டது. நான் அந்தப் பெண்மணியுடன் அறை குறை ஹிந்தியில் உரையாடிக்கொண்டிருந்தேன். அவர் தனது சொந்த ஊர் காஷ்மீர் என்றும், உறவினர்களைக் காண வந்திருந்தாகவும் சொன்னார். அமைதியாக மனதுக்குள் ஜபம் செய்தபடி பயணம் செய்தார்.

மறு நாள் இரவில் அந்தப்பெட்டியில் ஒரு வாலிபப் பெண் கைக்குழந்தையோடு ஏறினாள். அந்தப்பெண்ணும் காஷ்மீர்காரியும் சரளமாக ஹிந்தியில் பேசிக்கொண்டே வந்தனர். அந்தக் குழந்தை அக்காளுடையது என்றும் தனக்கு இன்னும் கலியாணம் ஆகவில்லை என்றும் அவள் சொன்னாள்.

சிலமணிநேரம் கழித்து வண்டி ஒரு ஊரில் நின்றபோது கணவனும் மனைவியுமாக இருவர் வண்டியில் ஏறினார்கள். நாங்கள் மூவரும் நீளவாட்டமான இருக்கையில் எதிர் எதிராக அமர்ந்திருந்தோம். அந்த மனிதரும் இளம் வயதுக்காரராகவே தோன்றினார்.தன் மனைவிக்கு ஜன்னலோரம் ஒற்றை இருக்கைகளின் நடுவில் தங்களது பெட்டி, படுக்கைகளை அடுக்கி, அதன் மேல் மெல்லிய மெத்தை விரித்துத் தலையணை வைத்து, பால் வாங்கிப் பருகச்செய்து, அன்போடும் ஆதரவோடும் அவளை உறங்கச்சொல்லிவிட்டுத் தான் மற்றவர்களோடு அமர்ந்தபடி மிக இயல்பாக பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார். அவர் மனைவி உடனே உறங்கிப்போனாள். மௌ¢ளமௌ¢ள எல்லோரும் தூங்க பெட்டியில் பேச்சுச் சத்தம் குறைந்தொழிந்தது.

நான் மருமுறை கண்விழித்தபோது எதிர் இருக்கையில் இருந்த பெண்ணையும் குழந்தையும் காணாமல் இருந்ததோடு, அந்த ஆணையும் காணோம். அவர் மனைவி மட்டும் உறங்கிக் கொண்டிருந்தாள். நான் கலவரமாகி மேல் தட்டில் படுத்திருந்த அந்தக் காஷ்மீர் பெண்மணியைப் பார்த்தேன். சிரித்தபடி அவர் கீழே இறங்கி என்னருகில் வந்து அமர்ந்தார். நான் “ எங்கே அவர்களைக் காணோம்” என்று கேட்டேன். அதற்கு அவர் பூடகமான சிரிப்போடு, அவர்கள் முந்தைய ஸ்டேஷனில் இறங்கி விட்டார்கள். பாவம் இந்தப் பெண்; தூங்கிக்கொண்டேயிருக்கிறாள். அந்த ஆள் ஒரு அயோக்கியன் போல் தெரிகிறதுஎன்றாள். டில்லியில் தங்களை தனது மாமனார் காரில் வந்து அழைத்துப் போவார் என்று அந்த மனிதன் சொன்னது நினைவு வந்ததது.

டில்லி நெருங்கும் போது வீழித்துக் கொண்ட அந்தப் பெண் தன் கணவன் தன்னை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் வழியிலேயே இறங்கிச் சென்றுவிட்ட விஷயம் தெரிந்து கொண்டு அழத்தொடங்கி விட்டாள்.காஷ்மிர் பெண் அவளை சமாதானப்படுத்தி,டில்லி ரயில் நிலையத்தில் என்னை என் மறுமகனிடமும், அவளை அவளது தந்தையிடமும் ஒப்படைத்த பிறகே சென்றாள்.

வேஷம்-சிறுகதை

அது 1942ஆவது வருடம். நான் ஒரு வாடகை வீட்டில் வசிக்க நேர்ந்திருந்தது. சொந்த வீடு இருந்தும் சகோதரர்களுக்குள் சொத்துப் பிரித்தலான பிரச்சினை. பக்கத்து வீட்டில் மெலிந்த, அழகான ஒரு பெண் தன் மூன்று வயதுப் பெண் குழந்தையோடு வசித்து வந்தாள். அவள் கணவன் சப்ளையராக ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்தான். நாட்கூலி.(இரண்டு ரூபாய் என்று நினைக்கிறேன்). அதிலும் கூட அவள் காலோ, அறையோ உண்டியலில் போட்டு விட்டு மிகுதிப்பணத்தில் தான் குடும்பச் செலவு செய்வாள் என்பதாக நான் குடிவந்திருந்த வீட்டின் சொந்தக்காரியும் தாழ் வாரப் பகுதியில் வசிப்பவளுமான பொன்னம்மாள் சொன்னாள். அந்தப் பெண்ணின் கணவன் காலை ஐந்து மணிக்குக் கடைக்குச் சென்றால் இரவு மணி பத்துக்கு மேல் தான் வீடு திரும்புவான். அந்தப் பெண் அடிக்கடி இங்கு வந்து வீட்டுக்காரப் பென்மணியுடன் பேசிக் கொண்டிருப்பாள். தீபாவளி வந்தது. அவள் தனது கணவனுக்குக் கடையில் கொடுத்த சிறு போனஸ் பணத்தில் துணி மணிகள் வாங்கியதை கணவனுக்கு, தனக்கு, குழந்தைக்கு, மமியாருக்கு என்று சொல்லியபடி எங்களிடம் கொண்டுவந்து காட்டினாள்.

“உன் மாமியார் எங்கிருக்கிறார்? மைத்துனரிடமா?” என்று கேட்டேன்.

“இல்லை, என் வீட்டுக்காரர் ஒரே மகன். எங்கள் சொந்தக்காரர் வீட்டில் அவ்ர்களுக்கு உதவியாக இருந்து வருகிறார். தீபாவளிக்கு இங்கு வருவார்கள். ஒரு வாரம் போல் தங்கியிருப்பார்கள்” என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.

மறு நாள் அவள் சிறிய கையடக்கமான தாஜ்மஹால் படம் போட்ட மூடியுடைய ஒரு பெட்டியை வீட்டுக்கார அம்மாளிடம் கொடுத்தபடி அவளிடம் தணிந்த குரலில் ஏதோ சொல்லிவிட்டுச் செல்வதை நான் என் அறையில் இருந்தபடி கவனித்தேன்.

ஊரிலிருந்து அந்தப் பெண்ணின் மாமியார் வந்திருந்தார். அமைதியான, நடுத்தர வயதுடையவராக இருந்தார். தானும் தீபாவளிக்காக எல்லோருக்கும் புத்தாடைகள் எடுத்து வந்திருந்தார். அவை சற்று உயர்ந்த ரகம். குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்தார். மறுமகளை உட்காரவைத்து விதவிதமாகச் சமைத்துப் போட்டார். தீபாவளிக்கு மணக்க மணக்க நெய் இனிப்புகள் செய்தார். இருவரும் ஓயாது பேசி மகிழ்ந்தனர்.

தீபாவளி கழிந்த மூன்றாம் நாள் அந்த அம்மாள் ஊர் செல்வதாக இருந்தது. ஆனால் அன்று அவருக்கு ஜுரம் வந்துவிட்டது. அரசாங்க வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்றனர். மூன்று வாரம் ஆகியும் காய்ச்சல் விட வில்லை. தனியார் வைத்தியசாலையில் காட்ட வசதி அவர்களுக்கு இல்லை. ஆனால் அப்போதெல்லாம் தர்மாஸ்பத்திரியானாலும் சிரத்தையுடன் கவனித்து வைத்தியம் செய்வார்கள். அந்த அம்மாளுக்கு ஊசியில் செலுத்தும் மருந்து தங்களிடம் இல்லை என்றும் வெளியிலிருந்து வாங்கி வரும்படியும் வைத்தியர் சொன்னதும் இவர்கள் கல்ங்கிப் போய்வ்ட்டனர்.

“போனஸ் பணம், மாமியார் கொண்டுவந்த பணம், என்று எல்லாம் செலவாகி விட்டது. இப்போது யாரைப் போய்க் கேட்பது? இவருக்கும் எனக்கும் கடன் கேட்டே பழக்கமில்லை” என்று எரிச்சல் கலந்தபடி அவள் பொன்னம்மாளிடம் கூறிக் கொண்டிருந்தாள். எப்படியோ மருந்து வாங்கி, ஊசி போட்டு, ஒரு வழியாக உடல் குணமாகி, வீடு மீண்டார் அந்தப் பெண்மணி.

ஊருக்குப் போகும் முன்தினம் மகள், குழந்தையுடன் சினிமா சென்றிருந்த சமயம் அந்த அம்மாள் எங்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் சொன்னார்,  “நான் வருடம் முழுவதும் அவர்கள் வீட்டில் உழைத்து ஓடாகிச் சம்பாதித்த பணம் துணி வாங்கியது போக முழுவதையும் இவளிடம்தான் கொடுக்கிறேன். எப்போதும் தீபாவளி முடிந்த இரண்டொரு நாட்களில் ஊர் திரும்பி விடுவேன். மாட்டுப் பெண்ணும் நல்லபடியாக நடந்து கொள்வாள். இந்தத் தடவை உடம்புக்கு வந்துவிட்டது. இவளுக்கு என்ன எரிச்சல்? சுடுசொல் எப்படி வெளிப்பட்டது தெரியுமா? கஞ்சிக்குப் பால் விடக்கூட மனதாக வில்லை. நான் இனி இங்கு எக்காரணம் பற்றியும் வரப்போவதில்லை. நான் வேலை செய்யும் இடத்தில் தலைவலி என்றால் கூட என்னை வேலை செய்ய விட மாட்டார்கள். நன்றாய் கவனித்துக்கொள்வார்கள்.”

மாமியார் ஊர் சென்ற மறுநாள் மருமகள் பொன்னம்மாளிடமிருந்து உண்டியல் பெட்டியை வாங்கிச் சென்றாள்.


Tuesday, November 8, 2011

10-மனக் கருவூலத்திலிருந்து

மனித மனங்கள்

1) சுமார் ஐம்பது வருடங்களுக்குமுன் நான் எனது மூன்றாவது மகன் பாலுவின் கிராமம் சென்றிருந்தேன். அவன் ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியராக அங்கு இருந்தான். அதே ஊரில் வேரொரு ஆசிரியரும் வசித்து வந்தார். அவரும் பிராமணர்தான் என்றாலும், காந்தீயவாதியாக எல்லோருடனும் கலந்து பழகி, அவர்கள் வீட்டில் ஜாதி பாராமல் உணவருந்துபவராக இருந்தார். என் மகனும் எல்லோருடனும் அன்புடன் பழகியபோதும், அவர்கள் வீடுகளில் சாப்பிட மாட்டான். ஜெபம், சந்தி செய்வதை தவறாது பின்பற்றினான்.

அவ்வூர் மணியக்காரர் மகள் குழந்தை பெற்று வீடு கூடிய நாள். கவுண்டரம்மாள் வந்து, என் மகனை புண்ணியாவசனத் தண்னீர் தெளிக்கச் சொல்லி அழைத்தார். நான், “பாலுவுக்கு ஜுரமாக இருக்கிறது. அந்த வாத்தியாரையே ஜலம் தெளிக்கச் சொல்லுங்களேன்” என்றேன். அதற்கு அந்த அம்மாள், “ஐயே! அவுரு எங்க வூட்டுலெல்லாம் சாப்புடுறாரு, அவுரு என்ன சுத்தம்? உங்க மகந்தான் பூசை கீசை எல்லாம் செய்யுறாரு கொஞ்சம் அனுப்பி வையுங்க” என்றார். என் மகனை அந்த அம்மாள் அடிக்கடி கேலி செய்வார், “ஏன் வாத்தியாரே, எங்கவூட்டு சாப்பாடுன்னா ஒங்க நெஞ்சுலே எறங்காதா? சாப்புட்டுத்தான் பாருங்களேன்? நாங்களும் உங்களாட்ட மனுஷங்கதான்!”

2) கலையம்புத்தூர் தெருவின் மேற்கு முடிவில் ஒரு சீமை ஓடு வேய்ந்த வீடு. அந்த வீட்டை ஊர்காரர்கள் ‘சாது சமாஜம்' என்பதாக பெயர் சொல்வார்கள். அவ்வீட்டில் நடுத்தர வயதுடைய தம்பதியர் வசித்து வந்தனர். சனிக் கிழமை இரவு ஏழு மணிக்கு மேல் அந்த வீட்டு நடு ஹாலில் அனைவரும் கூடி பஜனை செய்வது வழக்கமாக நடக்கும். சுவரெங்கும் சுவாமி படங்கள் மாட்டப் பட்டிருக்கும். கூட்டம், பாட்டு, பஜனை, ஜெகந்நாதப் பிரதட்சிணம் என்று குத்து விளக்கைக் கைகளில் ஏந்தியபடி பஜனை செய்பவர்கள் வட்டமாக தாள கதியோடு ஆடிப்பாடுதல், கடைசியாக, எல்லோருக்கும் சுண்டல் வினியோகித்தல் எல்லாம் சம்பிரதாயம் தவறாமல் நடக்கும். குரல் வளம் உள்ளவரெல்லோரும் பாடுவார்கள். வேடிக்கை பார்க்க, சுண்டல் பிரசாதம் சாப்பிட என, கூட்டமும் சேரும்.

பத்து வீடு தள்ளி மற்றொரு வீட்டிலும் பஜனை நடக்கும். அங்கு சுவரில் பெரியஅளவில் பாரதியார் படமும், தேசபக்தர்கள் படங்களும் மாட்டியிருக்கும். அந்த வீட்டை ‘பாரதி பஜனை மடம்' என்று சொல்லுவார்கள். தேசபக்தி உள்ள வாலிப, வயோதிகர்களின் கூட்டம் சேரும். தேச பக்தியும், தெய்வ பக்தியும் கலந்த பாரதியாரின் பாடல்கள் உணர்ச்சி பொங்கப் பாடப்படும். இங்கும், சுண்டல் வினியோகம் நடைபெறும். அந்த நேரத்தில் மற்ற எல்லா வீடுகளும் ஜன சந்தடியற்று, அமைதியாகத் தூங்குவதுபோலத் தோற்றமளிக்கும்.

3) என் தாய் மரணப் படுக்கையில் இருந்த சமயத்தில், அண்ணா கேட்டார், “அம்மா, உனக்கு பிராயச்சித்தத்துக்கு ஏற்பாடு பண்ணட்டுமா? (பாவ மன்னிப்பு போன்ற சடங்கு அது)” அம்மா பதில் சொன்னாள், “எனக்கு எதற்கடா பிராயச் சித்தம்? நான் என்னை அறியாமல் உடலால் ஏதேனும் பாபம் செய்திருந்தால் அது நெருப்பில் போடும் போது உடலோடு சேர்ந்து எரிந்து விடும். மனதறிந்து செய்த பாபத்தை அனுபவித்துத்தான் தீரவேண்டும். பிராயச்சித்தம் செய்து ஏமாற்ற முடியாது. உனக்கு சடங்கு செய்வது கௌரவப் பிரச்சினை என்று தோன்றினால் நான் தடுக்கவில்லை.” அண்ணா அம்மாவின் விருப்பத்தை அனுசரித்து பேசாமல் சடங்கை நிறுத்தி விட்டார்.

4) நான் சைதாப்பேட்டையில் சந்துபோன்ற ஒரு வீட்டில் குடியிருந்தேன். ஒரு நாள், வீட்டின் சொந்தக்காரர் வசிக்கும் பகுதியிலிருந்த அடிக்கும் பம்ப்பிலிருந்து குடிஜலம் பிடித்துக் கொண்டிருந்தேன். அந்த வீட்டின் தாழ்வாரப்பகுதியில் குடியிருந்த அம்மாள் தூணில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தார். சுமார் 5-1/2 மணி நேரமான அந்த வேளையில் அந்த அம்மாளின் மறுமகள் -புதிதாக மணமுடித்து கணவன் வீடு வந்திருந்தவள் ஆசிரியையாக வேலை செய்பவள்- வீடுவந்து சேர்ந்தாள். உடனே மாமியார் சொல்கிறார், “காபி கலந்து குடிக்க அவசரப் படாதே, தீபம் வைக்கும் நேரமாகும் முன் வீட்டைப் பெருக்கிவிட்டுப் பிறகு காப்பி குடி.” எனக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அந்த அம்மாள் வீட்டில்தானே இருக்கிறார்? வீடு பெருக்கக் கூடாதா? கணவனோ, மகனோ வேலை முடிந்து வீடு வந்தால் காப்பி கலந்து தருவார்தானே? அந்தப் பெண்ணுக்கு இவர் காப்பி கலந்து தராவிட்டாலும் அவளே செய்து கொள்வதையும் தாமதப்படுத்தும் என்ன குரூர குணம்? பெண்கள் படித்து உத்தியோகம் செய்தாலும் வீட்டுப் பொறுப்பும் விடாதா?
5-(மிளகாய்) அபிஷேகம்
இது ஒரு இருநூறு வருஷத்துக்கு முந்திய கதை. நாற்பது வயதை கடந்த வேதாம்பாள் என்னும் பெயருடைய ஒரு மாது இருந்தாள். அவளுடைய கணவன், சற்று அசமஞ்சமாக இருந்து வந்தான். புக்ககத்தில் மாமியார் கொடுமை கொஞ்சம் அதிகமாக இருந்தது. மைத்துனன் அவர்களுக்குச் சேர வேண்டிய வயல் நெல்லைக் கொடுக்காமல் சண்டித்தனம் செய்து வந்தான். நான்கு குழந்தை களோடும், அசட்டு அகமுடையானோடும், துன்புறுத்தும் மாமியாரோடும், படாத கஷ்டங்கள் பட்டதால் ஒரு நாள் கிராமத்துப் பெரிய மனிதர்களை எல்லாம் போய் பார்த்து முறையிட்டாள். பெரிய மனிதர்கள் பஞ்சாயத்துக் கூட்டி, அவளுடைய மைத்துனனைக் கண்டித்து, அவளுக்கு ஞாயம் கிடைக்கச் செய்தனர்.

‘ஊரைக் கூட்டி ஞாயம் கேட்கிறயா?' என்று அவளுடைய மாமியார் அவளை அடிக்க, அவளும் மாமியாரைத் திருப்பி அடிக்க, நடுவில் வந்த அவளுடைய கணவனை மைத்துனன் முகத்தில் அறைய, கணவனுடைய கண் பழுதாகி விட்டது. வேதாம்பாளுக்குக் கோபமும், ஆத்திரமும் அதிகமாகி விட்டது. ‘மள மள' வென்று தன் வீடு சென்று, மிளகாய் வற்றலை எடுத்து ஜலத்தில் ஊறப் போட்டாள். அதை நன்கு அறைத்துக்கொண்டு ஒரு பாத்திரத்தில் போட்டு ஜலம் விட்டுக் கரைத்தாள். அதை எடுத்துச் சென்று வாய்க்கால் மேட்டில் அரச மரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகர் தலையில் அபிஷேகம் செய்தாள். “ஏ, சண்டாளப் பிள்ளையாரே, உனக்கு எத்தனை குடம் ஜலம் விட்டு அபிஷேகம் செய்திருப்பேன்? நீ எனக்கு என்ன நல்லது செய்தாய்? குளிரக் குளிர அபிஷேகத்தை ஏற்றுக்கொண்டு, எனக்கு நீ கொதிக்கக் கொதிக்கத் துன்பங்கள் தந்தாய். இப்போது, என் கணவனைக் குருடாக்கி விட்டு வேடிக்கை பார்க்கிறாய். எரியட்டும், உன் உடலும் நன்றாய் எரியட்டும். நீயும் அவஸ்தைப் படு'' என்று கூச்சல் போட்டு விட்டு, வாய்க்காலை ஒட்டியிருந்த தோட்டக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாள்.

Sunday, November 6, 2011

Ai Tiruvanmiyur Temple-1968

Posted by Picasa

at home-10-12-2001

Posted by Picasa
தேவையா?


போக்குவரத்துப்
பாதைகளும்
நாக்கு வறளாமல்
நல்ல குடிநீரும்
நாட்டுமக்களுக்கு நல்குவது
அரசாங்கத்தின் கடமை;
இதைப்போய் ஏன்
விளம்பரப்படுத்துகிறார்கள் டி.வி.யில்?
கிராமங்கள் அன்னியநாடா
தர்மம் செய்கிறார்களா அதற்கு?

**********************************


மாற்றங்கள்


அடுக்களையைப்
புகலிடமாகக்கொண்டு
அன்று
ஆண் பார்வையின் கீழ்
வாழ்ந்தாள் பெண்.
தவறை வௌ¤ப்படுத்தாத
ஆண் உடல்,
குற்றத்தில் சிக்கிக்கொள்ளும்
பெண்தேகம்.
அகப்பட்டுக் கொள்வதால்
அடி, உதை, அடிமைசாசனம், வீட்டுக்கைதி.
இன்று நடக்குமா?

பொருள் ஈட்டுவதிலும்
பெறாமல் தடுத்துக் கொள்வதிலும்
திறமை பெற்றுவிட்ட பிறகு
அவளூக்கு
நன்நடத்தைக் காவலனாகத்
தன்னைத்தானே நியமித்துக் கொள்வது
சாத்தியப்படுமா ஆண்களுக்கு?

Saturday, October 29, 2011

Neeraja(grand daughter)Poorani-Krishangini

Posted by Picasa

09-மனக் கருவூலத்திலிருந்து-நரபலி

நரபலி

அந்த மூன்று சகோதரர்களும் வடக்கு நோக்கி நடந்து கொண்டிருந்தனர். பெரியவனுக்கு சுமார் 18 வயதும், சிறியவர்களுக்கு இரண்டு இரண்டு வயது குறைவாகவும் இருக்கலாம். அந்தக் காலத்தில் நடந்து பயணிப்பதுதான் பெரும் பாலும் நிகழும். பணமும் வசதியும் உள்ளவர்கள் மாட்டு வண்டி, குதிரை வண்டி போன்றவற்றிலும், செல்வந்தர் பல்லக்கு சவாரியும் செய்து பயணித்தனர். பல்லக்கு சுமப்பவர்கள் அவர்கள் வீட்டுடன் இருந்தனர். வழியெங்கும் சாலை ஓரங்களில் இரு புறமும் மரங்களும், அடுத்து அடுத்து குளங்களும், அன்ன சத்திரங்களும், மடங்களும் ஆட்சி செய்த மன்னர்களால் பராமரிக்கப்பட்டு பயணிகளுக்கு உதவின. ஆதலால், காசியிலிருந்து இராமேஸ்வரம் வரைகூட மக்கள் கால் நடையாக யாத்திரை செய்வது அப்போதைய வழக்கமாக இருந்தது.

அந்த மூன்று சகோதர்களும் நடந்தே கல்கத்தா வந்து சேர்ந்திருந்தனர். பாஷை தெரியாத ஊரில் தெருக்களில் சுற்றிக்கொண்டு இருந்தனர். அது சமயம் மன்னன் நகர் ஊர்வலம் வந்து கொண்டிருந்தான். அந்த மூன்று பேரையும் பார்த்தவுடன் களையுடன் காணப்படும் இவர்களை காளிக்கு பலிகொடுத்தால் நமக்கு நன்மைகள் கிட்டும் என்று யோசித்து, ஒரு ஆளை அனுப்பி அவர்களைத் தனது அரண்மனைக்கு அழைத்துவந்து, விருந்து, உபசாரங்கள் செய்து அங்கேயே தங்கச் செய்தான். மூவரும் நல்ல சாப்பாடும் போஷாக்கும் கிடைத்ததால் நிகு நிகு வென்று அழகு கூடியிருந்தனர்.

அவர்களுக்கு உணவளித்து அவர்களை கவனித்துக்கொண்டிருந்த மூதாட்டி அந்தச் சிறுவர்கள் காளிக்கு பலியாகப் போவதை எண்ணி மிகவும் மனவருத்தம் கொண்டாள். ஒருநாள் அரசன் நகரில் இல்லாத நேரத்தில் மிகுந்த கவனத்துடன் அவள் சிறுவர்களிடம் வந்தாள். தன்னை யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு சைகைகளும் ஜாடைகளும் செய்து அவர்களுக்கு வரயிருக்கும் ஆபத்தைப் பற்றி அவர்களிடம் விளக்கினாள். பின்னர் மூவரையும் ஒரு அறைக்குக் கூட்டிச் சென்று, தரையோடு தரையாக இருந்த ஒரு கதவைத் திறந்து, அது ஊருக்கு வெளியே கொண்டு விடும் சுரங்க வழி என்பதை புரியவைத்து அவர்களை ஓடித் தப்பிக்கும்படி சொல்லி அனுப்பி வைத்தாள். மூவரும் குழப்பத்துடன் கீழே இறங்கி மறைந்தனர். போகும் வழியில் பல அறைகள் இருந்தன. அவற்றில் பொன்னும், மணிகளும் ஏராளமாக கொட்டிக் கிடந்தன. அம் மூவரும் தங்கள் மேல் துண்டில் முடிந்த அளவு அவற்றை அள்ளி முடிந்து கொண்டு, நகரிலிருந்து வெளியேறி தப்பித்து, தெற்கு நோக்கிப் பயணப்பட்டனர்.

ஆனால், அவர்கள் தங்கள் ஊரை அடைந்தபோது அவர்களில் கடைசி தம்பி அவர்களுடன் இருக்கவில்லை. மற்ற இருவரும் தங்களுக்கு நேரவிருந்த ஆபத்தைப் பற்றிச்சொல்லி, அதிலிருந்து மீண்டவிதம் பற்றியும், கூறினார்கள். வரும் வழியில் தம்பி ஒரு கிணற்றில் இறங்கி நீர் அருந்தியபோது கால் வழுக்கி விழுந்து இறந்து விட்டதாகவும் சொன்னார்கள். பெற்றோர், இருவராவது மீண்டனரே என்று சமாதானம் அடைந்து விட்டனர். சிறுவர்கள் கொண்டு வந்திருந்த செல்வத்தைக் கொண்டு நிலம் நீச்சு என்று வாங்கி ஊரையே வளைத்துக் கொண்டனர்.
ஆனால், ஊர் மக்கள் அந்தச் சிறுவர்கள் சொல்வது உண்மையல்ல என்றும், தம்பியை பலிகொடுக்கவென்று விற்றுவிட்டு பணத்துடன் திரும்பி இருப்பார்கள் என்றும் கிசுகிசுப்பாக ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.

Wednesday, October 26, 2011

08-மனக் கருவூலத்திலிருந்து

சௌடப்ப செட்டியார்

தாராபுரம் போர்டு ஹைஸ்கூலின் ஹெட் மாஸ்டராக சௌடப்ப செட்டியார் பணி புரிந்து வந்தார். மிகவும் நல்ல மனிதர். உத்தியோகத்தில் சிறப்பான பேர் வாங்கிப் பின்நாளில் திரு. நெ.து. சுந்தர வடிவேலுவுக்குப் பின்பு கல்வி இலாகா டைரக்டராகப் பதவி உயர்வு பெற்று அங்கும் நல்ல பேரோடு ஓய்வு பெற்றார். அவர் எங்கள் இல்லத்தின் அருகில்தான் வசித்துவந்தார்.

என் மகள் புவனேஸ்வரி கிருஸ்துவ கான்வென்ட் ஹைஸ்கூலில் படித்து வந்தாள். வளர்த்தி அதிகம் இல்லாத சாதாரணமான சிறிய உடல் கொண்டவள். படிப்பில் கெட்டிக்காரியாக இருந்ததால் ஒரு முறை டபுள் பிரமோஷன் கிடைத்திருந்தது. அவளது வயது அப்போது பதிநான்கு. போர்டு ஹை ஸ்கூலிலேயே மற்ற மாணவர்களுடனமர்ந்து S.S.L.C. பரிட்சை எழுதும் படியாக கான்வென்ட் மாணவிகளுக்கும் அமைந்திருந்தது. அவள் அங்கு சென்று பரிட்சை எழுத காத்திருந்தாள். செட்டியார், “பாப்பா இங்கு பரிட்சை எழுதப் போகிறார்கள். குழந்தை நீ இங்கெல்லாம் வந்து உட்காரக் கூடாது” என்று அன்பாகச் சொன்னார். “சார் நானும் பரிட்சை எழுதத்தான் வந்திருக்கிறேன்” என்று கூறி புவனா தனது ஹால் டிக்கெட்டைக் காட்டவும், அவருக்கு வியப்பாகி, “அட, குட் குட்” என்று அவள் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

செட்டியாரின் அண்ணா தாராபுரத்தில் தாசில்தார் உத்தியோகம் பார்த்தார். அவர் குடும்பமும் நாங்கள் வசித்த தெருவின் எதிர் சாரியில் சற்று தள்ளி குடி இருந்தது. தாசில்தாரின் மகள் கருணா என் மகள் பிருந்தாவின் சினேகிதி. அவளுக்கு எங்கள் தெருவில் வைத்துத்தான் பின் நாளில் திருமணம் நடந்தது. எங்கள் வீட்டிற்கு நேர் எதிரே ஒரு பெரிய வீடு உண்டு. அதற்குப் பேரே ‘சூப்பரின் டென் டென்ட்' பங்களா என்றாகிவிட்டிருந்தது. அதற்கு அனேகமாக அங்கு ‘சூப்பரின் டென் டென்ட்' களே அடுத்து அடுத்துக் குடியிருந்ததுதான் காரணம். அந்த வீடு யாரும் இல்லாது இருந்ததால் கருணாவின் திருமணம் அங்கு நடந்தது. திருமணத்திற்கு முந்தைய இரவு மாப்பிள்ளை அழைப்பு. ஜோடித்த காரில் மாப்பிள்ளை ஊர்வலம் வந்தது கொண்டிருந்தது. மாப்பிள்ளையை வரவேற்க ஆண்கள் கூட்டம் வீட்டின் வாயிலில் தெருவை அடைத்தபடி காத்திருந்தது. ரிகார்டில் பாடல்கள் முழங்கிக் கொண்டிருந்தன. அந்த சமயம் தேசிய எழுச்சிக் காலம். ஜவஹர்லால் நேருவின் தந்தை காலமாகிவிட அது பற்றியும் சோகப் பாடல்கள் ரிகார்டில் இருந்தன. அன்று மாப்பிள்ளை அழைப்பில் பாடல் ஒலிபரப்பும் பொறுப்பிலிருந்தவன் ‘ஞான பண்டித மோதிலால் நம்மைப் பிரிந்தார்' என்னும் பாடலை போடவும் வீதித் திண்னையில் நின்று கொண்டிருந்த நாங்கள் (பெண்கள்) ‘இதுவென்ன அச்சான்யமாக சோகப் பாட்டு பாடுகிறதே' என்று சொல்லிக் கொண்டோம். என் மகன் ராமசாமி வேகமாக ஓடிப்போய் செட்டியாரின் காதோடு ‘என்ன சார் இந்தப் பாட்டை வைக்கிறானே?' என்று கேட்கவும், அவர் யதார்த்தமாக, ‘என்ன இந்தப் பாட்டுக்கு என்ன?' எனவும் அவன் ‘சார் சுபமாக மாப்பிள்ளை அழைப்பின் போது செத்துப் போனவரைப் பற்றின பாட்டை வைப்பது அபசகுனம் இல்லையா' என்று சொல்லவும், ‘ஆமாம்! பாட்டைபற்றி எங்களுக்கு என்ன தெரியும்? ஓடிப் போய் அதை நிறுத்திவிட்டு பிளேட்டை மாற்று' என்றார். ‘நடையலங்காரம் கண்டேன்' என்ற பாட்டைப் போடவும் மாப்பிள்ளை காரைவிட்டு இறங்கி நடக்கவும் பொறுத்தமாக இருந்தது. செட்டியாருக்கு அசாத்திய சந்தோஷம்.

இவர்கள் ‘ஜேடச் செட்டியார்' பிரிவைச் சேர்ந்தவர்கள். அனேகமாக அந்த இனம் நெசவுத் தொழில் செய்யும். வீட்டில் கன்னடம் பேசுவார்கள். அவர் தொழும் தெய்வம் சவுண்டம்மன். (சாமுண்டீஸ்வரியின் மருவு) மிகுந்த சக்தி வாய்ந்த தெய்வம். கோயில் விழாக்காலங்களில் பக்தர்கள் தங்கள் மார்மீது கத்தியை வீசிக் கொள்வார்கள் என்றும், உதிரம் வெளிப்பட்டால் பூசாரி வீசி அடிக்கும் விபூதி அதை தடுத்து நிறுத்திவிடும் என்றும், அந்த அம்மன் சப்பரத்தில் வீதி உலா புறப்பட்டால் தேங்காய், பழம் என்று நைவேத்தியம் செய்ய எடுத்து வைத்துவிட்டு அதை நிறைவேற்றாமல் இருந்தால் சப்பரம் அந்த இல்லத்தின் முன்பு நகராமல் நின்றுவிடும் என்றும், சொல்வார்கள்.

எங்கள் குடும்பம் தாராபுரத்திற்குப் புதிதாகக் குடிவந்திருந்ததால் வீட்டுப் பெண்களான எங்களுக்கு இதுபற்றியொன்றும் தெரியாது. அதே தினம் கார்த்திகை நட்சத்திரமாதலால் முருகன் வீதி உலா வரும் என்பதற்காக நிவேத்தியம் செய்யும் பொருட்டு தட்டில் தேங்காய் ,பழம் வெற்றிலை போன்ற பொருள்களை எடுத்து சமையல் அறையில் வைத்தோம். முருகனின் உலா இரவு எட்டுமணிக்கு மேல்தான். ஏழுமணி அளவில் சவுண்டம்மன் வீதி உலாவந்தது. நாங்கள் வீதித் திண்னையில் நின்றபடி சாமி பார்த்துக் கொண்டிருந்தோம். சப்பரம் எங்கள் வீட்டின் முன் நின்றுவிட்டது. சப்பரம் தூக்குபவர்கள் ‘நிவேதனத்துக்கு என்று தேங்காய் பழம் வைத்திருந்தால் கொண்டுவாருங்கள்' என்றார்கள். நாங்கள் ‘வாங்கி வைக்கவில்லை' என்று சொல்லவும், சப்பரத்தை தூக்கிக் கொண்டு நடக்கவாரம்பித்தனர். சப்பரம் ஒரு வட்டம் அடித்து விட்டு எங்கள் வீட்டின் முன் மறுபடியும் நின்று விட்டது. ஒரு ஆள் சற்று மிரட்டலாக, ‘சாமியிடம் விளையாடாதீர்கள்' என்றான். என் ஓரகத்தியும் சற்று குரலை உயர்த்தி, ‘நாங்கள் முருகனுக்குத்தான் வைத்திருக்கிறோம் இந்த சாமிக்கு அல்ல' என்றாள்.

அந்தச் சப்பரம் தூக்கி அழுதபடி சொன்னான், ‘ஐயோ இதை முன்பே சொல்லியிருக்கக்கூடாதா? இந்த சாமி, நிவேதனம் வாங்காமல் விடாது. முருகனையும் உலா வர விடாது. எங்கள் தோளில் இரத்தம் கசிகிறது' என்றான். நாங்கள் நிவேதனத் தட்டை உள்ளேயிருந்து எடுத்து வந்தோம். நிவேதனம் முடிந்ததும் அம்மன் புறப்பட்டுப் போய்விட்டது. வீட்டு வேலைக்காரி சொன்னாள், ‘இந்த சாமிக்கு எல்லாம் தெரியும். சென்ற முறை கருப்பு சட்டைக்காரர்கள் இரகசியமாக ஒரு குடியில்லாத வீட்டில் தேங்காய் பழத்தட்டை வைத்து வீட்டை பூட்டிவிட்டுப் போய்விட்டார்கள். உலா வந்த சப்பரம் அங்கு நின்று விட்டது. வீட்டின் ஓட்டைப் பிரிக்கவும் தொடங்கியது. ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த அவர்கள் ஓடிவந்து வீட்டின் பூட்டை திறந்து தட்டை சாமிமுன் நடுங்கியபடி வைத்தனர். தொடர்ந்து சிறிது நாட்கள் அவர்கள் உன் மத்தம் பிடித்தவர்கள்போல அலைந்து, பின் தெளிந்தனர்'

செட்டியார் மனைவியின் பெயர் ‘தனலட்சுமி அம்மாள்'. அடக்கமாக அழகாக இருப்பார். G.M.S. (கோபால்டு மோட்டார் செர்விஸ்) பஸ் சர்விஸ் அவரது பிறந்த வீட்டாரால் நடத்தப் பட்டது. அவரும் அதில் ஒரு பங்குதாரர். அந்த நாளில் இந்த பஸ் நிறுவனமும் S.M.S. (சௌடாம்பிகா மோட்டார் செர்விஸ்) நிறுவனமும் பிரபலமாகவும், வர்த்தகப் போட்டியுடனும் செயற் பட்டன. S.M.S. முதலாளி ராமசந்திரனின் மனைவி மனோன்மணியம்மாள் கொழுத்த பணக்காரி. எங்கள் மாதர் சங்கத்தில் தனலட்சுமி அம்மாள் உப தலைவராகவும், மனோன்மணி அம்மாள் பொருலாளராகவும் செயற்பட்டனர். இருவருக்கிடையிலும் தொழிற்போட்டி இருக்கும். நன்கொடை விஷயத்தில் மனோன்மணியை விட தனலட்சுமி சற்று குறைவாகத்தான் கொடுப்பார்.

ஒரு முறை மாதர் சங்கத்தின் கலை நிகழ்ச்சிக்கு டிக்கெட் விற்க கிராமம் கிராமமாக செல்வதற்கு மனோன்மணி அம்மாள் தனது சொந்த வேனை எடுத்து வந்தார். பெட்ரோலும் அவரே போட்டுக்கொண்டார். மனோன்மணி, சீதா, விசாலம் மாமி (S.V.ராமகிருஷ்ணனின் தாய்), மீனா, நான் ஐவரும் அதில் புறப் பட்டுச் சென்றோம். மனோன்மணியம்மாள் ‘ நாமெல்லோரும் டிக்கெட் விற்க M.L.A. பழனியம்மாள் வீட்டிற்குப் போகப் போகிறோம். யாருக்காவது அதில் விருப்பம் இல்லையென்றால் நின்று கொள்ளுங்கள்' என்று சொன்னார். M.L.A. பழனியம்மாள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை (ஹரிஜன்) சேர்ந்தவர். நாங்கள் யாரும் அதற்கு மறுப்பு சொல்லவில்லை.

அது ஒரு கிராமம். அவர் வீடு ஓடு வேய்ந்தது. வீட்டைச் சுற்றி நிறைய நிலம். தென்னை மரங்கள். குப்பை கூளமற்று கன சுத்தமாக இருந்தது. அவர் எங்களையெல்லாம் வரவேற்று, மடக்கு நாற்காலி கொண்டுவந்து போடச் சொல்லி அமரச்செய்தார். அவரது தந்தை அதற்குள் இளநீர் வெட்டிவரச் செய்து எல்லோருக்கும் கொடுத்து உபசரித்தார். மனோன்மணி அம்மாள் அவரிடம் ஒரு டிக்கெட் புத்தகத்தைக் கொடுத்து விற்றுத் தர கேட்டுக் கொண்டார். பின்னர் நாங்கள் தாரை திரும்பினோம்.

Thursday, April 29, 2010

07-மனக் கருவூலத்திலிருந்து-அந்தக் காலப் பிரசவம்

 அந்தக் காலப் பிரசவம்
முன்காலத்தில் பஸ்வசதி அதிகம் கிடையாது. தூரத்து ஊர்களுக்குத்தான் பஸ் போக்குவரத்து இருக்கும். அதுவும் குறைவாகவே இருக்கும். கிராமங்கள் தான் அதிகமாக இருக்கும். சற்று பெரிய நகரங்களில்தான் கவர்மெண்டு ஆஸ்பத்திரி இருக்கும். தனியார் ஆஸ்பத்திரி என்பது அறவே கிடையாது. அவசர காலங்களுக்கு நாட்டு வைத்தியம்தான். நாட்டு வைத்தியர்களுக்கும் முறையான பட்டப்படிப்பு என்பது கிடையாது. பரம்பரையான குடும்பங்களால் செய்யப் படும் வைத்தியம்தான். குழந்தைப் பேறுக்கென்று வைத்தியர் நர்ஸ் அதிகம் கிடையாது. கிராமங்களில் குழந்தைப் பேறு வீடுகளில்தான் நடக்கும். அதை அனுபவ வைத்தியமாக சில பெண்கள்தான் அறிந்திருப்பார்கள். அவர்களைத்தான் பேறுகாலத்தில் அழைப்பார்கள். அவர்களிலும்  திறமையானவர் பலர் இருப்பார்கள். பிரசவத்தில் சிக்கல் நேரும் என்று கண்டால்' பிரசவம் சிக்கலானது கவர்மெண்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போங்கள்' என்று கூறி விடுவார்கள்.

அந்த நாட்களில் ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்வது என்பது அவ்வளவு சுலபமல்ல. கட்டை வண்டியிதான் பிரயாணம் செய்யவேண்டும். அதனால் வழியில் ஆபத்து விளைவது அடிக்கடி நிகழும். இதனால் உயிர் சேதங்கள் நிகழ்வது அந்த நாளில் சகஜம். சிக்கலில்லாத பிரசவங்களை கிராமத்துப் பெண்களே செய்துவிடுவார்கள். அவர்கள் மிகுந்த பொறுமையுடனும், அன்புடனும், காசை எதிர்பார்க்காமலும், ஏழை பணக்காரர் என்னும் பேதம் பார்க்காமலும், அது ஒரு புண்ணிய காரியம் என்று செய்வார்கள். வலியெடுத்த பெண்ணிடம் அவர்கள் காட்டிய பரிவும் அன்பும் இந்த நாட்களில் ஆஸ்பத்திரிகளில் இருக்கும் படித்தவர்களிடம் காணமுடிவதில்லை.

வைத்திய வசதிகள் குறைவான அந்த நாட்களில் பிள்ளைப் பெறுவதிலும் பிரசவித்த பெண்ணை பராமரிப்பதிலும் மிகுந்த கவனமும் ஜாக்கிரதையும் உணர்வும் இருக்கும். குழந்தை பிறந்தவுடன் மஞ்சளை அரைத்துத் தேனில் குழைத்து பிரசவித்த பெண்ணுக்கு அரிநெல்லிகையாய் அளவு மூன்று உருண்டைகள் விழுங்கக்கொடுப்பார்கள். வேப்பெண்ணையை சுடவைத்து அதன் கசப்புத் தெரியாமல் இருக்க நாக்கின் மேல் ஒரு வெற்றிலையை வைத்து மூன்று உத்தரிணி அளவு வாயில் ஊற்றுவார்கள். தனியாவையும் சீரகத்தையும் ஊற வைத்து அரைத்து இஞ்சி சுரசத்துடன் கலந்து மூன்று வேளை கொடுப்பார்கள். அடுத்துவரும் நாட்களில் கருப்பட்டிப் பாகில் மருந்துப்பொடி தூவி, நல்லெண்ணெய்யுடன் கொஞ்சம் நெய்யும் தேனும் கலந்து சேர்த்து மருந்து கிளறி காலையிலும் இரவிலும் பெரிய நெல்லிக்காய் அளவு கொடுத்து சாப்பிடச் செய்வார்கள். ஆனால் அது பத்து நாட்கள் வரைதான். பிரசவ மருந்து பொருள்கள் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் வாங்கி இடித்து சலித்துக் கொள்வார்கள். பிரசவித்த பெண் தினமும் ஐந்து வேளை வெற்றிலை மெல்ல வேண்டும். இதுவும் கட்டாயம்.

குழந்தை பிறந்த மறுநாள் முதல் பத்தாவது நாள் வரையிலும் மதியம் பனிரெண்டு மணியளவில் மிளகு சீரக ரஸம் செய்து அன்னத்துடன் சாப்பிடக் கொடுப்பார்கள். அதற்குத் தொட்டுக் கொள்ள அவரை, புடலை, கத்தரி, போன்ற காய்களை பிஞ்சாகப்பொறுக்கி, தேங்காய் சேர்க்காமல், வதக்கி, நல் எண்ணையில் தாளித்து கொடுப்பார்கள். காலையில் காப்பி, பகல் பத்து மணியளவில் கஞ்சி, மாலியில் காப்பி, இரவில் கஞ்சி என்று தினமும் கொடுப்பார்கள். பத்தாவது நாள் இரவில் பாலன்னம் தருவார்கள். பதினோராம் நாளில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி இரண்டு வேளையும் பால், தயிர், நெய் சகிதம் சாப்பாடு போடுவார்கள். ஆனாலும் பத்தியமான காய்களைத்தான் கொடுப்பார்கள். பூண்டும் உணவில் இடம் பெறும். எண்ணெய்க் குளியலும், பால், தயிர் மற்றும் நெய் சேர்த்தலும் மூன்று மாதங்கள் தொடரும்.

மிதமான சூடுள்ள வெந்நீரை சற்று எட்ட நின்றவாறு பிரசித்தவளின் வயிற்றில் அடித்து ஊற்றுவார்கள்.புளியந்தழை புண் ஆற்றும் என்பதால் அவற்றை உருவிவந்து வெந்நீரில் கொதிக்க வைத்து ஒரு சுத்தமான துணியில் போட்டு சிறு மூட்டையாய் கட்டி உடல் பொறுக்கும் சூட்டில் பிரசவித்த அங்கத்தில் ஒத்தடம் கொடுப்பார்கள். அதனால் எரிச்சல் அடங்கும்; புண் இருந்தாலும் ஆறிவிடும்.

பழைய சிற்றாமணக்கு விதைகளை விலைக்கு வாங்கி வீட்டிலேயே முறைப்படி சுத்தமான விளக்கெண்ணெய் தயாரித்து வைத்துக்கொண்டு, குழந்தைக்கு தாய்ப் பாலுடன் இரண்டு மூன்று சொட்டுக்களை கலந்து தினமும் காலையில் சங்கில் புகட்டுவார்கள். குழந்தையின் உச்சியிலும் தடவுவார்கள். நன்கு முற்றிய தேங்காயிலிருந்து ஆட்டிய எண்ணெய்யை கொண்டு குழந்தையின் கண்களில் எண்ணெய் கட்டிவிட்டுத்தான் குழந்தையை என்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவார்கள். கண் மையும் முறைப்படி வீட்டிலேயேதான் செய்து தாய்க்கும் குழந்தைக்கும் உபயோகிப்பார்கள்.

Monday, April 6, 2009

தாய்மை

வேதம் மாமிக்கு தற்சமயம் வயது அறுபதுக்குள் இருக்கும் நான்கு குழந்தைகள் பெற்றாள் என்றாலும், ஒரு மகன்தான் உயிரோடு இருந்தான். மற்ற மூன்று குழந்தைகளும் இரண்டு வயதிற்குள்ளாகவே வயிற்றில் கட்டி வளரும் நோய் வந்து மரணமடைந்து விட்டன. அதனால் குழந்தைகள் பெற்று வளர்ப்பது என்பதே ஒரு பயங்கரமான செயலாக அவள் உணர்ந்தாள். எந்த ஒன்றுக்கும் குற்றத்தை அவள் மேல் சுமத்தும் கணவன். அதனால் எது செய்தால் தவறாகி விடுமோ என்ற தயக்கம் காரணமாகத் தீர்மானம் செய்ய முடியாத ஒரு மனோ நிலை.


நல்ல வேளையாகக் குழந்தை மணி அதிகம் நோய் நொடியின்றி வளரலானான். கணவனுடைய குறை கூறும் சுபாவமும் குறையலாயிற்று. இந்த சமயத்தில் கணவன் நோய்வாய்ப்பட்டு மரணம் அடையத் தவித்துப் போனாள் வேதம் மாமி. குழந்தையோடு பிறந்தகத்தில் தஞ்சம் அடைந்தாள். கணவன் மூலம் கொஞ்சம் நிலபுலங்களும், ரொக்கப் பணமும் அவளுக்குக் கிடைத்ததால் சிரமம் இன்றி காலம் தள்ள முடிந்தது. தாய், அண்ணன், அண்ணன் குடும்பம் இவைகளோடு அவள் குடும்பமும் கலந்தது. அண்ணன் மேற் பார்வையில் பிள்ளை நிறையப் படித்தான். உத்தியோகத்தில் அமர்ந்தான்.
பிள்ளைக்கு வேலை கிடைத்ததும், அவள் தனிக் குடித்தனம் செய்ய ஆரம்பித்தாள். மணியின் ஒவ்வொரு செயலையும் ரசித்தாள். அன்பைப் பொழிந்தாள். மணியும் தாய் மேல் அளவற்ற பாசம் வைத்தான்.
வயதுக்கு ஏற்ப இப்பொழுதெல்லாம் அவன் வாலிபப் பெண்களைக் கண்டால் பரவசப் பட்டுப் போவதும், அவர்களோடு பேச, பழக விழைவதுமான நிலையில் வேதத்துக்கு தன்னை மகன் அலட்சியப் படுத்துகிறானோ என்று தோன்றலாயிற்று. வழி தவறி விடுவானோ என்றும் அஞ்சலானாள். இது பற்றி அண்ணனிடம் லேசாக பிரஸ்தாபித்தாள். அண்ணன் கல கலவென சிரித்து விட்டுச் சொன்னார், 'அவனுக்கு ஒரு நல்ல பெண் பார்த்துக் கல்யாணம் முடித்து விட்டால் போயிற்று. வயசுக் கோளாறு. அப்படித்தான் இருப்பான்'.
மகனுக்குக் கல்யாணம், மருமகள் வரவு, பிள்ளை அவளிடம் சாய்வது, தான் இரண்டாம் பட்சமாகிப் போவது, என்பதாக நினைக்கும் போது மனம் மிகவும் சங்கடப் பட்டது। என்றாலும், இவை எல்லாம் நடந்துதானே ஆக வேண்டும்? என்று சமாதானப் படுத்திக்கொண்டு அண்ணனிடம் பெண் பார்க்கும் படி சொல்லி, மகனின் ஜாதகத்தைக் கொடுத்தாள்।அழகும், குணவதியுமான லீலா என்ற பெண் மருமகளாக வாய்த்தாள். சகோதரியின் மனப் போக்கை அறிந்த அண்ணன், தன் மருமகனைத் தனியே அழைத்து, சில புத்திமதிகள் சொல்லி ஜாக்கிரதையாக நடந்து கொள்ளும்படி எச்சரித்திருந்ததால், மகன் தாயிடம் அளவுக்கு அதிகமான பாசத்தைக் காட்டியும், மனைவியை ரொம்பக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல பாவனை காட்டியும் வந்தான். தனித்திருக்கும் போது தன் கெடுபிடியெல்லாம் தாயாருக்காக நடிப்பபு என்று லீலாவிடம் சொல்லி இருந்ததால், அவளும் மிகவும் பயந்த சுபாவம் உள்ளவளாகக் காட்டிக் கொண்டாள்.

இந்நிலை வேதத்துக்கு மருமகளைக் காரணமின்றியே குறை கூறவும், சிடு சிடுக்கவுமான சுபாவத்தைக் கொடுத்தது। தன் செயல் அவளுக்கே தவறு என்று தெரிந்ததால், அவளுடைய குற்றமுள்ள நெஞ்சு, தன் மருமகள் தன்னைப் பற்றி புருஷனிடம் இரவு படுத்த பிறகு ஏதவது குறை கூறுவாளோ எனும் அச்சத்தை உண்டாக்கியது. விளைவு, வேதம் இரவில் அவர்கள் படுத்திருக்கும் அறையின் மூடிய கதவின் மர வாசல்படியில் தலையை வைத்துப் படுத்தபடியே தம்பதிகளின் பேச்சை ஒட்டுக் கேட்க வைத்தது. இவளைப் பற்றி குறைகள் காதில் விழுந்ததோ விழவில்லையோ, அவர்கள் சரச சல்லாப ஓசைகளைக் கேட்டதென்னவோ நிச்சயம்.

'பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்' என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு நாள் வேதம் அங்கு படுத்தபடியே தன்னை அறியாமல் தூங்கிப் போய் விட்டாள். சிறு நீர் கழிக்க எழுந்து வந்து கதவைத் திறந்த மருமகள் தன் மாமியாரைக் கண்டு திடுக்கிட்டாள். கணவனை எழுப்பிக் காண்பித்தாள். தாயின் இந்தச் செய்கை அவ்விருவருக்கும் திகைப்பையும், வெறுப்பையும் உண்டாக்கியது. மகன் தன் தாயாரை எழுப்பி "ஏன் இங்கு வந்து படுத்திருக்கிறாய்?" என்று கேட்டான். வேதத்துக்குக் கையும் களவுமாகத் தான் பிடிபட்டுவிட்டோம் என்னும் உண்மை புலப்பட்டது. சட்டென்று சமாளித்துக் கொண்டு "ஏனோ, எனக்கு பயமாக இருந்ததுடா, அதனால்தான் இங்கு வந்து படுத்தேன்" என்றள். "பயமாக இருந்தால் கதவைத் தட்டி என்னை எழுப்புவதுதானே" என்று கேட்டுவிட்டு, தங்கள் இருவரின் படுக்கைகளையும் தாயின் படுக்கைக்குப் பக்கத்தில் விரித்துக் கொண்டு தாயை ஆதரவாகக் கட்டிக் கொண்டு மகன் தூங்க வைத்தான்। வேதம் மனதுக்குள் மிகவும் அவமானமாக உணர்ந்தாள்.

மறுநாள், மகன் மூலம் மாமாவிற்கு எல்லா விஷயங்களும் தெரிந்தது. அதன் காரணமும் விளங்கியது. அன்று மாலை, தன் தாயை அழைத்துக் கொண்டு தங்கையின் வீட்டிற்கு வந்தார். "வேதம், நான் எல்லாவற்றையும் கேள்விப் பட்டேன். வாஸ்தவம்தான். நீ தனித்துப் படுத்துத் தூங்கியே பழக்கப் படாதவள். இனி நம் அம்மா உன்னுடனேயே, உனக்குத் துணையாக இருப்பாள். இனி நீ அவர்கள் படுக்கும் அறையின் படியில் தலைவைத்துப் படுக்க வேண்டாம்" என்று சொல்லிவிட்டுச் சென்றார். வேதம் வாயடைத்து நின்று கொண்டிருந்தாள்.

Wednesday, April 1, 2009

கவிதைகள்

அகலிகை

பிரஸவிக்கும் பசுவை வலம்வந்து
அரசனின் நிபந்தனைக்கேற்ப
அதற்குப் பொருள் கற்பித்து
அகலிகையை மணந்தான் முனிவன்;
முனிசாபத்துக்கு அஞ்சிய அரசன்
மணமுடித்துக் கொடுத்தான் மகளை.
உள்ளமும் விருப்பமும்
பெண்களுக்கும் உண்டு என்ற
எண்ணமே இருவருக்கும் இல்லை!



ஆசை கருகி ஆஸ்ரம வாழ்க்கையும்
அகமுடையான் சேவையும்
அகலிகைக்கு அமைந்தது- நிர்பந்தமாக;
ஆனாலும் என்ன?
அவள் அறியாக் குற்றத்துக்கு
கல்லாய் சபிக்கப் பட்டாள்.
+++++++++++++++++++++++++++++++++++









சீதையின் புலம்பல்

வில் வளைக்கும் மன்னருக்கே பெண் தருவேன் நான்என்று
சொல் முழக்கி சுயம்வரம் வைத்தார் தந்தை;
என் வயதோ பன்னிரெண்டு
என்ன கண்டேன் மணம் பற்றி?

ராமனைக் கரம்பற்றி ஸாகேதம் சென்றது
நான் ஒருத்தி மட்டுமா
மற்ற மூன்று சகோதரிகளும் கூட
ஒட்டுமொத்தமாய் தசரதபுத்திரர்களோடு திருமணம்.

மாமியார்களின் மௌனயுத்தம்
மாமனாருக்கோ கைகேயி இஷ்டம்
வனவாசம் சிறைவாசம்
என் வாழ்வே சர்வ நாசம்
என் தங்கை ஊர்மிளைதான்
என்ன சுகப்பட்டாள் கணவனிடம்
கணவன் வனம் போதல் அறிந்தவுடன் அவள் மூர்ச்சை
நெடுந்தூக்க வியாதியிலே
நினைவின்றிப் பிணம் போல
ஆண்டு பல நகர்ந்தாலும்
அவள் உறக்கம் தெளியவில்லை.


***********************************************