சௌடப்ப செட்டியார்
தாராபுரம் போர்டு ஹைஸ்கூலின் ஹெட் மாஸ்டராக சௌடப்ப செட்டியார் பணி புரிந்து வந்தார். மிகவும் நல்ல மனிதர். உத்தியோகத்தில் சிறப்பான பேர் வாங்கிப் பின்நாளில் திரு. நெ.து. சுந்தர வடிவேலுவுக்குப் பின்பு கல்வி இலாகா டைரக்டராகப் பதவி உயர்வு பெற்று அங்கும் நல்ல பேரோடு ஓய்வு பெற்றார். அவர் எங்கள் இல்லத்தின் அருகில்தான் வசித்துவந்தார்.
என் மகள் புவனேஸ்வரி கிருஸ்துவ கான்வென்ட் ஹைஸ்கூலில் படித்து வந்தாள். வளர்த்தி அதிகம் இல்லாத சாதாரணமான சிறிய உடல் கொண்டவள். படிப்பில் கெட்டிக்காரியாக இருந்ததால் ஒரு முறை டபுள் பிரமோஷன் கிடைத்திருந்தது. அவளது வயது அப்போது பதிநான்கு. போர்டு ஹை ஸ்கூலிலேயே மற்ற மாணவர்களுடனமர்ந்து S.S.L.C. பரிட்சை எழுதும் படியாக கான்வென்ட் மாணவிகளுக்கும் அமைந்திருந்தது. அவள் அங்கு சென்று பரிட்சை எழுத காத்திருந்தாள். செட்டியார், “பாப்பா இங்கு பரிட்சை எழுதப் போகிறார்கள். குழந்தை நீ இங்கெல்லாம் வந்து உட்காரக் கூடாது” என்று அன்பாகச் சொன்னார். “சார் நானும் பரிட்சை எழுதத்தான் வந்திருக்கிறேன்” என்று கூறி புவனா தனது ஹால் டிக்கெட்டைக் காட்டவும், அவருக்கு வியப்பாகி, “அட, குட் குட்” என்று அவள் முதுகில் தட்டிக் கொடுத்தார்.
செட்டியாரின் அண்ணா தாராபுரத்தில் தாசில்தார் உத்தியோகம் பார்த்தார். அவர் குடும்பமும் நாங்கள் வசித்த தெருவின் எதிர் சாரியில் சற்று தள்ளி குடி இருந்தது. தாசில்தாரின் மகள் கருணா என் மகள் பிருந்தாவின் சினேகிதி. அவளுக்கு எங்கள் தெருவில் வைத்துத்தான் பின் நாளில் திருமணம் நடந்தது. எங்கள் வீட்டிற்கு நேர் எதிரே ஒரு பெரிய வீடு உண்டு. அதற்குப் பேரே ‘சூப்பரின் டென் டென்ட்' பங்களா என்றாகிவிட்டிருந்தது. அதற்கு அனேகமாக அங்கு ‘சூப்பரின் டென் டென்ட்' களே அடுத்து அடுத்துக் குடியிருந்ததுதான் காரணம். அந்த வீடு யாரும் இல்லாது இருந்ததால் கருணாவின் திருமணம் அங்கு நடந்தது. திருமணத்திற்கு முந்தைய இரவு மாப்பிள்ளை அழைப்பு. ஜோடித்த காரில் மாப்பிள்ளை ஊர்வலம் வந்தது கொண்டிருந்தது. மாப்பிள்ளையை வரவேற்க ஆண்கள் கூட்டம் வீட்டின் வாயிலில் தெருவை அடைத்தபடி காத்திருந்தது. ரிகார்டில் பாடல்கள் முழங்கிக் கொண்டிருந்தன. அந்த சமயம் தேசிய எழுச்சிக் காலம். ஜவஹர்லால் நேருவின் தந்தை காலமாகிவிட அது பற்றியும் சோகப் பாடல்கள் ரிகார்டில் இருந்தன. அன்று மாப்பிள்ளை அழைப்பில் பாடல் ஒலிபரப்பும் பொறுப்பிலிருந்தவன் ‘ஞான பண்டித மோதிலால் நம்மைப் பிரிந்தார்' என்னும் பாடலை போடவும் வீதித் திண்னையில் நின்று கொண்டிருந்த நாங்கள் (பெண்கள்) ‘இதுவென்ன அச்சான்யமாக சோகப் பாட்டு பாடுகிறதே' என்று சொல்லிக் கொண்டோம். என் மகன் ராமசாமி வேகமாக ஓடிப்போய் செட்டியாரின் காதோடு ‘என்ன சார் இந்தப் பாட்டை வைக்கிறானே?' என்று கேட்கவும், அவர் யதார்த்தமாக, ‘என்ன இந்தப் பாட்டுக்கு என்ன?' எனவும் அவன் ‘சார் சுபமாக மாப்பிள்ளை அழைப்பின் போது செத்துப் போனவரைப் பற்றின பாட்டை வைப்பது அபசகுனம் இல்லையா' என்று சொல்லவும், ‘ஆமாம்! பாட்டைபற்றி எங்களுக்கு என்ன தெரியும்? ஓடிப் போய் அதை நிறுத்திவிட்டு பிளேட்டை மாற்று' என்றார். ‘நடையலங்காரம் கண்டேன்' என்ற பாட்டைப் போடவும் மாப்பிள்ளை காரைவிட்டு இறங்கி நடக்கவும் பொறுத்தமாக இருந்தது. செட்டியாருக்கு அசாத்திய சந்தோஷம்.
இவர்கள் ‘ஜேடச் செட்டியார்' பிரிவைச் சேர்ந்தவர்கள். அனேகமாக அந்த இனம் நெசவுத் தொழில் செய்யும். வீட்டில் கன்னடம் பேசுவார்கள். அவர் தொழும் தெய்வம் சவுண்டம்மன். (சாமுண்டீஸ்வரியின் மருவு) மிகுந்த சக்தி வாய்ந்த தெய்வம். கோயில் விழாக்காலங்களில் பக்தர்கள் தங்கள் மார்மீது கத்தியை வீசிக் கொள்வார்கள் என்றும், உதிரம் வெளிப்பட்டால் பூசாரி வீசி அடிக்கும் விபூதி அதை தடுத்து நிறுத்திவிடும் என்றும், அந்த அம்மன் சப்பரத்தில் வீதி உலா புறப்பட்டால் தேங்காய், பழம் என்று நைவேத்தியம் செய்ய எடுத்து வைத்துவிட்டு அதை நிறைவேற்றாமல் இருந்தால் சப்பரம் அந்த இல்லத்தின் முன்பு நகராமல் நின்றுவிடும் என்றும், சொல்வார்கள்.
எங்கள் குடும்பம் தாராபுரத்திற்குப் புதிதாகக் குடிவந்திருந்ததால் வீட்டுப் பெண்களான எங்களுக்கு இதுபற்றியொன்றும் தெரியாது. அதே தினம் கார்த்திகை நட்சத்திரமாதலால் முருகன் வீதி உலா வரும் என்பதற்காக நிவேத்தியம் செய்யும் பொருட்டு தட்டில் தேங்காய் ,பழம் வெற்றிலை போன்ற பொருள்களை எடுத்து சமையல் அறையில் வைத்தோம். முருகனின் உலா இரவு எட்டுமணிக்கு மேல்தான். ஏழுமணி அளவில் சவுண்டம்மன் வீதி உலாவந்தது. நாங்கள் வீதித் திண்னையில் நின்றபடி சாமி பார்த்துக் கொண்டிருந்தோம். சப்பரம் எங்கள் வீட்டின் முன் நின்றுவிட்டது. சப்பரம் தூக்குபவர்கள் ‘நிவேதனத்துக்கு என்று தேங்காய் பழம் வைத்திருந்தால் கொண்டுவாருங்கள்' என்றார்கள். நாங்கள் ‘வாங்கி வைக்கவில்லை' என்று சொல்லவும், சப்பரத்தை தூக்கிக் கொண்டு நடக்கவாரம்பித்தனர். சப்பரம் ஒரு வட்டம் அடித்து விட்டு எங்கள் வீட்டின் முன் மறுபடியும் நின்று விட்டது. ஒரு ஆள் சற்று மிரட்டலாக, ‘சாமியிடம் விளையாடாதீர்கள்' என்றான். என் ஓரகத்தியும் சற்று குரலை உயர்த்தி, ‘நாங்கள் முருகனுக்குத்தான் வைத்திருக்கிறோம் இந்த சாமிக்கு அல்ல' என்றாள்.
அந்தச் சப்பரம் தூக்கி அழுதபடி சொன்னான், ‘ஐயோ இதை முன்பே சொல்லியிருக்கக்கூடாதா? இந்த சாமி, நிவேதனம் வாங்காமல் விடாது. முருகனையும் உலா வர விடாது. எங்கள் தோளில் இரத்தம் கசிகிறது' என்றான். நாங்கள் நிவேதனத் தட்டை உள்ளேயிருந்து எடுத்து வந்தோம். நிவேதனம் முடிந்ததும் அம்மன் புறப்பட்டுப் போய்விட்டது. வீட்டு வேலைக்காரி சொன்னாள், ‘இந்த சாமிக்கு எல்லாம் தெரியும். சென்ற முறை கருப்பு சட்டைக்காரர்கள் இரகசியமாக ஒரு குடியில்லாத வீட்டில் தேங்காய் பழத்தட்டை வைத்து வீட்டை பூட்டிவிட்டுப் போய்விட்டார்கள். உலா வந்த சப்பரம் அங்கு நின்று விட்டது. வீட்டின் ஓட்டைப் பிரிக்கவும் தொடங்கியது. ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த அவர்கள் ஓடிவந்து வீட்டின் பூட்டை திறந்து தட்டை சாமிமுன் நடுங்கியபடி வைத்தனர். தொடர்ந்து சிறிது நாட்கள் அவர்கள் உன் மத்தம் பிடித்தவர்கள்போல அலைந்து, பின் தெளிந்தனர்'
செட்டியார் மனைவியின் பெயர் ‘தனலட்சுமி அம்மாள்'. அடக்கமாக அழகாக இருப்பார். G.M.S. (கோபால்டு மோட்டார் செர்விஸ்) பஸ் சர்விஸ் அவரது பிறந்த வீட்டாரால் நடத்தப் பட்டது. அவரும் அதில் ஒரு பங்குதாரர். அந்த நாளில் இந்த பஸ் நிறுவனமும் S.M.S. (சௌடாம்பிகா மோட்டார் செர்விஸ்) நிறுவனமும் பிரபலமாகவும், வர்த்தகப் போட்டியுடனும் செயற் பட்டன. S.M.S. முதலாளி ராமசந்திரனின் மனைவி மனோன்மணியம்மாள் கொழுத்த பணக்காரி. எங்கள் மாதர் சங்கத்தில் தனலட்சுமி அம்மாள் உப தலைவராகவும், மனோன்மணி அம்மாள் பொருலாளராகவும் செயற்பட்டனர். இருவருக்கிடையிலும் தொழிற்போட்டி இருக்கும். நன்கொடை விஷயத்தில் மனோன்மணியை விட தனலட்சுமி சற்று குறைவாகத்தான் கொடுப்பார்.
ஒரு முறை மாதர் சங்கத்தின் கலை நிகழ்ச்சிக்கு டிக்கெட் விற்க கிராமம் கிராமமாக செல்வதற்கு மனோன்மணி அம்மாள் தனது சொந்த வேனை எடுத்து வந்தார். பெட்ரோலும் அவரே போட்டுக்கொண்டார். மனோன்மணி, சீதா, விசாலம் மாமி (S.V.ராமகிருஷ்ணனின் தாய்), மீனா, நான் ஐவரும் அதில் புறப் பட்டுச் சென்றோம். மனோன்மணியம்மாள் ‘ நாமெல்லோரும் டிக்கெட் விற்க M.L.A. பழனியம்மாள் வீட்டிற்குப் போகப் போகிறோம். யாருக்காவது அதில் விருப்பம் இல்லையென்றால் நின்று கொள்ளுங்கள்' என்று சொன்னார். M.L.A. பழனியம்மாள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை (ஹரிஜன்) சேர்ந்தவர். நாங்கள் யாரும் அதற்கு மறுப்பு சொல்லவில்லை.
அது ஒரு கிராமம். அவர் வீடு ஓடு வேய்ந்தது. வீட்டைச் சுற்றி நிறைய நிலம். தென்னை மரங்கள். குப்பை கூளமற்று கன சுத்தமாக இருந்தது. அவர் எங்களையெல்லாம் வரவேற்று, மடக்கு நாற்காலி கொண்டுவந்து போடச் சொல்லி அமரச்செய்தார். அவரது தந்தை அதற்குள் இளநீர் வெட்டிவரச் செய்து எல்லோருக்கும் கொடுத்து உபசரித்தார். மனோன்மணி அம்மாள் அவரிடம் ஒரு டிக்கெட் புத்தகத்தைக் கொடுத்து விற்றுத் தர கேட்டுக் கொண்டார். பின்னர் நாங்கள் தாரை திரும்பினோம்.
No comments:
Post a Comment