Wednesday, September 19, 2012

12-மனக் கருவூலத்திலிருந்து

நல்ல/கெட்ட சகுனம்

    நல்ல சகுனம் பார்த்துக் காரியங்களைத் தொடங்குதல் என்பது மனதுக்கு ஒரு அமைதியை, சந்தோஷத்தைத் தருகிறது என்பது உண்மைதான். ஆனால் அபசகுனமாகத் தான் பிறரால் உணரப்படும்போது அந்த மனம் என்னபாடு படுகிறது என்பது அந்த நிலையை அனுபவித்தவருக்குத்தான் தெரியும்.

‘பல்லி' சகுனங்கள்

    முன்பு எப்போதோ ஒரு புத்தகம் படிக்கக் கிடைத்தது. அது பல்லி சாத்திரப் புத்தகம். படிக்க ரசமாக இருந்தது. அதில் ஒரு செய்யுள்:

முன்னாவது வலமாவது
மொழியின் திருவருளாம்
பினாவது இடமாவது
பேசும்குரல் பல்லி
சொன்னால் அதை
உமை கேளென
அரனார் மொழிகுவதால்
பொன்னாவது பொருளாவது
உயிராவது போமே
    இது தவிர, பல்லி விழுதலின் பலன், பல்லி எத்தனை முறை சப்தம் செய்கிறது என்ற எண்ணிக்கைக்குத் தக்க பலன் என்பதுபோன்ற பல விவரங்கள் செய்யுள் வடிவில் இருந்தன. ஒருநாள் என் தலையில் பல்லி விழுந்தது. பலன் பார்த்தேன். ‘தலை கலகம்' என்றும், ‘சிகை மரணம்' என்றும் எழுதியிருந்தது. சிகையில்லாமல் தலை இருக்கமுடியுமா? என்ன நடக்கிறது பார்க்கலாம் என்று காத்திருந்தேன். எதுமே நிகழவில்லை. பல்லிகள் வலப்புறச் சுவரில் அமர்ந் திருக்கும்போது சப்தமிட்டுவிட்டு இடப்புற சுவருக்கு நகர்ந்தும் சப்தமிடுகின்றன. ஒரே நாளில் சில மணி இடைவெளிகளில் சப்தமிடுகிறது. இதில் எதை எடுத்துக் கொள்வது? ஆக, இந்தப் பல்லி ஜோசியம் குழந்தைகள் விளையாட்டு என்று தீர்மானித்துக் கொண்டேன்.

    ஒரு முறை நான் பூக்காரியைக் கூப்பிட்டுப் பூ வாங்கினேன். என் மறுமகள் அந்தப் பூச்சரம் முழுவதையும் சுவாமி படத்திற்கு சாற்றி விட்டாள். நான், ‘நீ ஏன் பூ வைத்துக் கொள்ளவில்லை?' என்று வினவினேன். ‘நீங்கள் விதவைப் பெண்ணிடம் பூ வாங்கினீர்கள். அவள் எதிரில் அதைச் சொல்ல முடியாமல் பேசாதிருந்தேன். சுமங்கலிகள் விதவையிடம் பூவாங்கி வைத்துக் கொள்ளக் கூடாது அல்லவா?' என்று பதில் சொன்னாள் மறுமகள். எனக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. கணவனை இழந்த ஒரு பெண் ஒரு தொழில் செய்துகூடப் பிழைக்க முடியாதா? என்ற எண்னமும், நாம் இவ்வாறான பெண்களிடம் தானே பூ வாங்கி வைத்துக் கொள்கிறோம். நமக்கு ஒன்றும் நேர்ந்து விடவில்லையே! இந்தக் கிழவயதிலும் சுமங்கலியாகத்தானே இருக்கிறோம் என்றும் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

    மகனும் மறுமகளும் சம்பளம் வாங்கி வந்தால் என் கணவரையும் என்னையும் சேர்த்து நிற்கவைத்து தட்டில் சம்பளப் பணத்தை வைத்து எங்களிடம் கொடுத்து நமஸ்காரம்செய்து, பின் அதை வாங்கிக் கொள்வார்கள். என் கணவர் சற்று மூளைக் கலக்கமாக இருந்தார். தட்டில் இருக்கும் பணக் கட்டை எடுத்து எண்ணத் தொடங்கிவிடுவார். கடை முதலாளியாய் இருந்த போது பணம் புழங்கிய பழக்க தோஷம். என் மகன் அவர் கையிலிருந்து அதை வெடுக் என்று பிடுங்கிக் கொள்வான். நான் மனதிற்குள் ‘எண்ணிப்பார்க்க அனுமதித்தால்தான் என்ன? பணத்தைத் தின்றா விடுவார்?' என்று சிரித்துக் கொள்வேன். அவர் காலமான பிறகு அந்த நாடக அரங்கேற்றம் நின்று விட்டது.

    சாதாரணமாக சகுனம் பார்ப்பவர்களும் கூட, பெற்ற தாயிடம் சகுனம் பார்க்கக் கூடாது என்பதாக சாத்திரம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வீட்டின் சுபகாரியங்களின் துவக்கத்தில் மஞ்சள் பூசிய இரண்டு தேங்காய் களை விதவையானாலும் தாயாரிடம் கொடுத்து நமஸ்கரித்து வாங்கிக் கொள்வது வழக்கம். ஆனாலும் சகுன நம்பிக்கை உள்ளவர்களுக்கு அவ்விடத்திலும் சகுனம் பார்க்கத் தோன்றிவிடுகிறது.

11-மனக்கருவூலத்திலிருந்து

சைதை நினைவுகள்
   
நான் சைதாப்பேட்டையில் வசித்தபோது குடியிருந்த தெருவுக்கு ‘புஜங்கராவ் தெரு' என்று பெயர். அந்தத் தெரு முடியும் இடத்தில் குறுக்காக ஒரு தெரு போகும். அது தாண்டி புஜங்கராவ் தெரு ஒரு சந்தாகத் தொடரும். அந்த சந்துக்கு ‘சாமியார் தோட்டம்'என்று பெயர் என்பதாக நினைவு. அதில் பெரும்பாலும் ஹரிஜனங்களும், பிராமணர் அல்லாத வேறு சில ஜாதிக் காரர்களும் குடிசைகளிலும் சிறு ஓட்டுவீடுகளிலும் வசித்து வந்தனர்.  புஜங்க ராவ் தெருவில் அனேகமாக பிராமணக் குடியிருப்புகள்தான். மாலை நேரங்களில் அந்த சந்துத்தெரு குழந்தைகள் புஜங்கராவ தெருவுக்கு விளையாட வந்து விடுவார்கள். பிராமணக் குழந்தைகளும் அதில் சேர்ந்து கொள்வார்கள். எனக்குத் தெரிந்து எந்தப் பெரியவரும்  இதை ஆக்ஷேபித்ததோ தடை செய்ததோ கிடையாது.

ஒருநாள் ஒரு சிறுவனுடைய பத்துப் பைசா காசு காணாமல் போய் விட்டது. சிறுவன் பலமாக அழத் தொடங்கினான். எல்லாப் பிள்ளைகளையும் ஒன்று சேர்த்தி நிறுத்தினான் வேலு என்னும் ஒரு சிறுவன். ஒவ்வொரு வரையும் சோதனை போட்டான். கண்ணன் என்னும் பிராமண சிறுவனிடமிருந்து காசு கண்டுபிடிக்கப்பட்டது. சோதனை போட்ட பையன் ‘தூ' என்று காறித் துப்பினான். பின்பு, “ ஏண்டா! பாப்பாரப் பிள்ளையாக இருந்துகிட்டு இப்படி காசு திருடலாமா?” என்று கேட்டான். கண்ணன் வெட்கித் தலைகுனிந்தான். பின்னர் வேலுவிடம் கெஞ்சலாக, “சித்த இருங்கடா நான் இதோ வந்து விடுகிறேன்” என்று சொல்லித் தன் வீட்டுக்கு விரைந்தான். திரும்பி வந்தவனிடம் ஒரு ஐந்து பைசா நாணயம் இருந்தது. அழும் பையனிடம் கொடுத்து “இதையும் வெச்சுக்கோடா! என்னப்பத்தி நீங்க யாரும் யாருகிட்டயும் சொல்லாதீங்கோ நான் ஏதோ கிறுக்குத்தனமா காசை எடுத்துட்டேன்” என்று தாழ்வாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.
    என் வீட்டுத் திண்ணையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, அந்தப் பிள்ளைகளின் கட்டுப்பாடும் ஒற்றுமையும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது.
மற்றொரு நாள்
    அன்றுபோலவே இன்றும் நான் திண்ணையிதான் உட்கார்ந்திருந்தேன். அதே பையன்களின் கூட்டம். வெயிற்காலமாதலால் மாலையானாலும் புழுக்கமாக இருந்தது. வேலு என்னிடம் வந்து, “மாமி ரொம்ப தாகமாயிருக்குது குடிக்கக் கொஞ்சம் தண்ணி தருவீங்களா?” என்று கேட்டான். நான் பெரிய எவர்சில்வர் பாத்திரத்தில் ஜலமும் அதற்குள் ஒரு டம்ளரும் போட்டுக் கொடுத்தேன். வேலு தான் முதலில் குடித்துவிட்டு பின்பு மற்றவர்களுக்கும் கொடுத்தான். எல்லோரையும் கூட்டிவைத்துக் கொண்டு இரகசியமாக ஏதோ சொன்னான். மொத்தப்பசங்களும் அங்கிருந்து ஓடிவிட்டதுகள், என் பாத்திரம் டம்ளர் சகிதம்! எனக்கு ‘திக்' என்று ஆகியது. நேரம் ஓடியது அவர்கள் யாரும் கண்ணிலேயே படவில்லை. பாத்திரம் போனது போனதுதான் என்று எண்ணியவாறு எழுந்து உள்ளே சென்றேன். சற்று நேரத்தில் வீதியில் வேலு வந்து ‘மாமி' என்று குரல் கொடுத்தான். நான் திரும்ப வீட்டு வாயிலுக்கு வந்தவுடன் வேலு ‘கலகல' வென்று சிரித்தபடி பாத்திரத்தைக் கொடுத்தான். பின்பு, “பயந்துடீங்களா? சும்மா உங்ககிட்ட கொஞ்சம் தமாசு செஞ்சேன்” என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டான்.
மீண்டும் ஒரு நாள்
   
தேர்தல் நேரம். அன்று மாலையிலும் சிறுவர்கள் தெருவில் கூடினார்கள். அன்று வேலுவைக் காணோம். அவன் தன் அத்தை வீடு போயிருப்பதாக அவர்கள் பேசிக்கொண்டார்கள். இரண்டு சிறுவர்களின் கையில் சாக்கட்டி இருந்தது. ஒருவன் தார் சாலையில் எழுதினான், “ஏய் அம்பட்டப் பயலே நீ தோத்துத்தான் போவே” இன்னொருவன் “ஏய் மலையாளப் பறப்பயலே நீ தோக்கத்தான் போறே” இருவருக்கும் தகராறு வெடித்தது. ‘நீ கண்டியா அம்பட்ட சாதி எண்டு? நீ கண்டியா பறசாதியெண்டு?' என்பதாக கூட்டம் இரு பிரிவாக சண்டையிடத் தொடங்கியது. எங்கிருந்தோ வந்தான் வேலு. எல்லோரையும் அடக்கினான். பிறகு, சாக்கட்டி எழுத்தையெல்லாம் தன் கால்களால் தேய்த்து அழித்தான். ‘இனி இந்த மாதிரியெல்லாம் எழுதினீங்களோ போலிஸ்காரனைக் கூப்பிட்டு ஒதைக்கச் சொல்வேன்' என்று சத்தம்போட்டான். சிறுவர்கள் எல்லோரும் பிடித்தனர் ஓட்டம்.
வேலைக்காரி
 நாங்கள் குடியிருந்த வீட்டுச் சொந்தக்கரியின் பெயர் பத்மா. அய்யங்கார் குடும்பம். அவளது கணவருக்கு ஏதோ ஒரு கம்பனியில் உத்யோகம்.  ரமணி, பரத் என்று  இரண்டு ஆண் பிள்ளைகள். ரமணி கிரிகெட் ஆட்டத்தில் திறமைசாலி அவனிடம் விளையாட வென்று ஒரு குழுவே இருந்தது. வீட்டுத் தாழ்வாரத்தில் விளையாடுபவர்களின் அனைத்துப் பொருள்களும் குவிந்திருக்கும். அவன் பெரிய அளவில் வருவான் என்று பத்மா நம்பினாள். ஆனால் அது நிகழவில்லை. அவனது ஆட்டத்தில் மயங்கி ஒரு ஐயங்கார் பெண் அவனை காதலித்து, திருமணம் செய்துகொண்டாள்.
    பத்மா விட்டுக்கும் என் வீட்டுக்குமாக சுமார் பதினெட்டு வயது மதிக்கத் தக்க மாத்துவ பிராமணப் பெண் ‘பத்து'ப் பாத்திரம் தேய்க்கும் வேலை செய்து வந்தாள். அழகி, நக்மா சாயலில் உயரமாக இருப்பாள். மிகவும் ஏழைக்குடும்பம். அம்மா, அப்பா, இரண்டு தம்பிகள், ஒரு தங்கை கொண்டது. எங்கள் இருவருக்குமே அவள்மீது ஒரு அனுதாபம். நான் காலையில் காப்பியும் டிபனும் கொடுத்துவிடுவேன். பிற்பகலில் பத்மா அவளை தன் வீட்டில் உட்காரவைத்து சூடாக நெய்யுடன் சாப்பாடு போடுவாள். மாலையில் காபியும் தருவாள். அந்தப் பெண்ணும் நன்றாக வேலை செய்வாள். ஒரு நாள் பத்மா வெளியில் சென்றிருந்த தால் மாலை காபி அந்தப் பெண்ணுக்கு கொடுக்கப்படவில்லை.  மறுநாள் அந்தப் பெண் வேலைக்கு வரவில்லை. நானும் பத்மாவும் அவளுக்கு உடல் நலக் குறைவோ என்று யோசித்து அவள் வீட்டுக்குச் சென்றோம். அந்தப் பெண் போர்த்திப் படுத்திருந்தது. அவளது தந்தை, “அவள் இனிமேல் வேலைக்கு வரமாட்டாள். நீங்கள் அவளுக்குக் காப்பிக்கு சில்லரையாவது கொடுத்துவிட்டுப் போக வேண்டாமா?” என்று சத்தம் போட்டார். பத்மா பதிலுக்கு, “இது என்ன பேச்சு? சாதாரணமாக வேலைகாரிக்கு காலையில் ஒரு காப்பி கொடுப்பது தான் வழக்கம். சம்பளத்தைக் கூட்டித் தருவதால் யாரும் இப்போதெல்லாம் சாப்பாடு (பழையது) கூடத் தருவது வழக்கம் இல்லை. நாங்கள் இருவரும்தான்  பிராமணப்பெண் என்று பரிதாபப் பட்டு கொடுக்கிறோம் வெளியில் போவ தென்றாலும் கொடுத்துவிட்டு போக வேண்டும் என்று சட்டமா? என்று கேட்டாள். அந்தப் பெண்ணின் பெற்றோர் கூச்சலிட்டு சண்டைபோடவும் நாங்கள் அங்கிருந்து வந்துவிட்டோம்.
    மாலையில் அந்தப் பெண் எங்கள் வீட்டுக்கு வந்து அழுதபடி, “எங்கள் வீட்டாருக்கு நான் நல்ல சாப்பாடு சாப்பிடுவது பொறுக்கவில்லை. சாப்பிடாதே சம்பளத்தைக் கூட்டித்தரச்சொல் என்று மிரட்டுகிறார்கள்” என்று சொன்னாள். நாங்கள் இருவரும் அவளுக்குச் சேரவேண்டிய சம்பளப் பணத்தை முழுவதுமாகக் கொடுத்து வேலையிலிருந்து நிறுத்திவிட்டோம். அவள் என்னிடம் அவ்வப்போது கொடுத்துவைத்திருந்த பணம் ரூபாய் இருபதையும் கொடுத்து அனுப்பிவிட்டேன்.
அந்தப் பெண் காசுக்குத் தன் உடலை விற்பவள் என்றும் சாமியார் தோட்டத்து ஆண்கள் அவளது வாடிக்கையாளர்கள் என்றும் பின்னர் தெரியவந்தபோது  மிகவும் அருவெறுப்பாக உணர்ந்தேன்.