Thursday, November 8, 2007

06-மனக் கருவூலத்திலிருந்து

கால மாற்றம்

ஒரு எழுபது வருடங்களுக்கு முன்னால், இருந்த குடும்பஸ்தர் களுக்கு எட்டு, பத்து என்று குழந்தைகள் பிறந்தன. காரணம் குடும்பக் கட்டுப்பாட்டு முறை தெரியாது என்பது மட்டும் அல்ல. அக்காலத்திலும் அதற்கு சில வேறு விதமான முறைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால், பொதுவாக அந்தக்கால மக்கள் கடவுளையும், பாப புண்ணியத்தையும் நம்பினார்கள். கருக் கலைப்பு மஹா பாபம் என்று கருதினார்கள். ஆனால், செயலும் விளைவும் தவிர்க்க முடியாதது. நமக்கு முன்னோர்கள் விதித்த ஒழுக்க நெரியும், மனக் கட்டுப்பாடும் இல்லாத போது, விளைவை அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்ற நம்பிக்கையோடு, வறுமையிலும்கூட சகிப்புத்தன்மையோடு குழந்தைகளை வளர்த்தினார்கள்.
அந்தக் காலத்தில் ஏதோ ஒரு பத்திரிகையில் ஒரு பாட்டு, ஓகாதலுக்கு வழிவைத்து கருப்பத்துக்கு தடை வைத்துஔ என்பதான தலைப்பில். குழந்தைகள் பெறாமல் மனம்போல் உடலுறவுக்கு வழி கண்டுபிடிக்க வேண்டும் என்னும் பொருள் பற்றி எழுதியிருந்த பாட்டு அது. அன்று அந்தப் பாட்டை எழுதியவர் மீது எனக்கு அசாத்தியமான கோபமும் வெறுப்பும் உண்டானது.
ஆனால், எங்களைப் போன்றோரின் எண்ணத்தால் இன்று நம்நாட்டில் தாங்கமுடியாத ஜனத்தொகை, வறுமை காரணமாக இருக்க நிழல் வேண்டி ஏரிகளில் எல்லாம் குடிசை. அந்த மக்களின்மீது கொஞ்சம் பரிதாபமும், கொஞ்சம் பணம், ஓட்டு முதலிய ஆசையும் கொண்டு அவர்களுக்கு அதற்கு அனுமதியும், நிலப்பட்டாவும் மின்சார வசதியும் அளித்துவிட்டு, இன்று அசுரத் தனமாக வீடுகளை இடித்தல். இருக்க இடமில்லை, குடிக்க நீர் இல்லை, உண்ண உணவில்லை என்று பாமர மக்களின் தவிப்பு.
அன்று கருத்தடையைப் பாபமாகக் கருதிய என் போன்றவர்களே இன்று பேரன் பேத்திகளை முழுமனதோடு தடுத்துக்கொள்ள புத்தி சொல்கிறோம்.
இதே போல்தான், கால மாற்றத்தை உணராமல் கற்பு என்ற போர்வைக் குள் பெண்களை மூடிவைத்து ஆண்களின் சீக்கை வாங்கி அல்லலுர வைப்பதும். ஆண்கள் ஒழுக்கத்துக்குக் கட்டுப்பட மாட்டார்கள் என்னும்போது, பெண்கள் தடுப்பு செய்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும். இதில், கன்னியா சம்சாரியா என்னும் கேள்விக்கே இடமில்லை. சூழ்நிலை பாதகமாக இருந்தால் தற்காப்பு செய்துகொள்வது தப்பல்ல.
 முப்பது வயதிற்கு மேலும் முதிர் கன்னியாக வாழும் அவலம் இன்று பெண்களுக்கு வாய்த்திருக்கிறது. இந்நிலையில், உத்தியோகம் வேறு பார்க்க நேர்கிறது.

05-மனக்கருவூலத்திலிருந்து

முதுமை

'தாயும் பிள்ளையும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறு' என்பது பழ மொழி. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ரத்த பாசமும் அன்பும் உண்டுதான் என்றாலும், அதைவிடச் சற்று தூக்கலானதுதான் தன் நலன் பேணல். ஒவ்வொரு ஜீவனும் தன் வாழ்வின் பொருட்டுத்தான் உலகில் இயங்குகிறது. தனக்கு மிஞ்சிய பிறகுதான் தான தருமம் செய்யமுடியும். ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் திருமணம், குழந்தைப்பேறு, அவர்களுக்குச் செய்யவேண்டிய வளர்த்தல் படிப் பித்தல் போன்ற கடமைகள் எல்லாம் இயற்கையாக இருக்கிறது. ஆனால், அவர்கள் தமது பெற்றோருக்கு முதுமையில் செய்தல் என்பது கடமைக்காகவே அன்றி இயற்கையானது அல்ல என்றே சொல்லத் தோன்றுகிறது. உலகில் அனைத்து ஜீவராசிகளும் வளர்ந்தபின் தனித்துப் போவதுதான் இயற்கையாக உள்ளது.
உண்மையாகச் சிந்திப்போமானால், நம் குழந்தைகளை நாம் வளர்த்தது போல, அவர்கள் தாங்கள் பெற்றவைகளை வளர்த்து ஆளாக்க நினைப்பதுதான் ஞாயம். அதுதான் இயற்கை. ஆனால், மனித குலம் தனக்கென சில விதிமுறை களை வகுத்துக் கொண்டு, தன்னுடையது பிறருடையது என்னும் பாகுபாட்டை உண்டாக்கிக் கொண்டு செயல்படுவதால் ஏழை, செல்வந்தர் என்பன போன்ற பல இருமைகளை ஏற்றுச் செயல்படத் தேவைப்படுகிறது. பொருளாதார வசதி உள்ள சிலர் தமது முதிய காலத்தில் தாம் பெற்ற மக்களின் கையை எதிர் பார்க்காதவர்களாக இருக்க முடிகிறது. பலரால் அவ்வாறு இருக்க முடிவதில்லை.

வாய்விட்டுச் சொல்ல மனித நாகரீகம் இடம் தராவிட்டாலும் மனதில் சற்று பாரம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் பொருளாதார உரிமையற்ற வயோதிகப் பெண்களுக்கு இந்த நிலை மிகுந்த சிரமத்தைக் கொடுக்கிறது. முன் அறிமுகமாகாத ஆணாக இருந்தாலும் மணமானபின்பு கணவன் என்ற உரிமையில் தனது சம்பாத்யத்தை செலவு செய்வதில் சிரமம் இருப்பதில்லை. ஆனால், பத்து மாதம் சுமந்து பெற்று, வளர்த்தியிருந்தாலும் ஒரு தாய்க்கு மகனின் வருமானம் அன்னியமானதே. அதில் உரிமை பாராட்ட முடியாது. அதேபோல, குடும்பத்தில் மூத்தவளாக அவர்களோடு வாழ்ந்துவந்தாலும் சற்று அன்னியமாகி விடுகிறாள். விவேகியாக இருந்தால் உரசல் ஓசைப்படுத்துவது இல்லை. சராசரியான இடங்களில் ஒலியெழுப்பி அபஸ்வரத்தை உண்டாக்கி விடுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளிலிருந்து தப்பிப்பதற்கு அந்த நபர் கலை, இலக்கியம், இசை, ஆன்மீகம் போன்ற எதிலாவது ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டிருந்தால் நெருக்கடியைச் சமாளிக்க உதவிகரமாக இருக்கிறது. சராசரியாக வாழப் பழக்கப் பட்டவர்கள் அந்தத் தருணங்களில் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். தன்னை ஒரு அகதிபோல் உணர்ந்து அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.

இக்கால தர்மம் பணம் தேடல், சுயநலம் பேணல், என்னும் ஒரு சூழலில் சிக்குண்டு இருக்கிறது. மனித மனங்கள் இயந்திரத் தனமாக மாறி வருகின்றன. சூழ்நிலைகளின் கட்டாயத்தினால் பெண்களும் படிப்பையும் சுய சம்பாத்யத்தையும் விரும்பு கிறார்கள். ஆனாலும் இல்லத்தை பராமரிப்பது, வீட்டுக் கடமைகள் போன்றவற்றிலிருந்து விடுபடமுடிவதில்லை. விடிவதற்கு முன் எழுந்து, 'கிரைண்டர்' போன்ற பல மின் கருவிகளின் உதவியுடன் தானும் ஒரு இயந்திரமாக மாறி செயல்பட்டால்தான் அவளால் காரியாலயம் செல்லமுடியும் என்ற சூழ்நிலையில், மனதில் அமைதி, நேசம், அன்பு எல்லாம் வெளிப்பட முடியாமல் போய் விடுகிறது. ஆணும் பெண்னும் ஆய்ந்து ஓய்ந்து காரியாலயத் திலிருந்து திரும்பும் நேரத்தில் அவர்களுக்குள் சோர்வும் அலுப்பும் இருப்பதால் வீடு மௌனத்தில் ஆழ்ந்து கலகலப்பு இன்றி தோற்றமளிக்கிறது.

இதுபோன்ற பல மாற்றங்களால்தான் இந்தியாவிலும் முதியோர் இல்லம் பெருகி வருகிறது.

Thursday, October 18, 2007

04-மனக் கருவூலத்திலிருந்து

வீடு பெறுதல்
-----------------
வெட்ட வெளியில் வெறும் தரையில் மனிதன் வாழமுடியாது. வெயில், மழை, குளிர் போன்றவை களிலிருந்து தப்ப வீடு அவசியம். அந்த வீட்டை வெட்டவெளியில் தரையின் மீதுதான் கட்டியாக வேண்டும். சுவர் எழுப்பிக் கூரை வேய்ந்தாலும் அவைகளின்மீது வாழமுடியாது. அவற்றின் உள்ளே உள்ள தரைதான் உபயோகமாக அமையும். பின்னப்படாத இடம் மைதானம்; பின்னப் பட்ட இடம் வீடு. ஆக, பயன்படுதல் என்பது தரைதான்.
வெற்று வெளி போன்றது பரமாத்மா. ஏகமானது. ஐம்பூதத்தாலான உடலுக்குள் பின்னப் பட்டிருப்பது ஜீவாத்மா. ஜீவனற்ற உடல் செயலற்ற பிணம். மண்ணாலான பூமி ஒன்றேயானாலும் அதன் மண் துகள்களை அள்ளலாம், மறுபடி தரையில் போடலாம். சத்தியமான "நான்ஔ என்னும் ஒன்றுதான் பரமாத்மா. அது உடலால் பின்னப்படும்போது "ஜீவன்ஔ என்னும் பெயர் பெறுகிறது. உடல் வீழும்போது பரமனில் கலக்கிறது. மனதில் பதிந்துள்ள எண்ணப் பதிவுகள் மறு உடலில் புகுகிறது. செயலும் விளைவும் தொடர் கின்றன. ஜனன மரணம் அமைகிறது.
இளநீராக இருக்கும்போது ஓட்டோடு கலந்து ஒட்டியிருந்த தேங்காய் முற்றிக் கொப்பரையாக மாறிவிட்ட பிறகு ஓட்டிலிருந்து பிரிபட்டு விடுகிறது. ஓடு உடைபட்ட கொப்பரையை முளைக்க வைக்க முடியாது. அதுபோலப் பிறவி கள் மூலம் முற்றிப் பக்குவப்பட்ட ஜீவன் மரணத்துக்குப் பின் மறு பிறப்பு எய்துவதில்லை. இளநி கொப்பரையாவதும், ஜீவன் பரமன் ஆவதும் இயற்கை செய்விக்கும் கூத்து. அதற்கென்று ஒரு கால அளவு இருக்கிறது. இதை மாற்ற ஈசனாலும் முடியாது. பக்தனாகவே இருந்து கடவுளிடம் மோக்ஷம் தா என்று யாசித்தாலும் உரிய காலம் வரும்வரை ஒன்றும் நடக்காது.
ஒரு சிஸுவுக்கு வயது ஏற ஏற உடல் மாற்றம் வாலிபம், வயோதிகம் என்று எல்லாம் இயற்கையாக நிகழ்கிறது. உடல் வளர்ச்சிபெற பசி என்ற ஒன்று தோன்றி சாப்பிடச் செய்கிறது. பசித்த குழந்தைக்குப் பெற்றோர் அன்னம் இடுவ தோடு அவர்கள் கடமை தீர்ந்து விடுகிறது. உடலை இயற்கை வளர்க் கிறது. அதுபோல ஜீவ வளர்ச்சியிலும் பக்தி, அறிவு, ஆராய்ச்சி என்பன போன்ற பசி ஏற்படுகிறது. அப்போது நமக்குள் நாம் அறியாத ஒன்று இருந்து நமக்குப் பெற்றோர் போல வழிகாட்டுகிறது. இதிலும் இயற்கைதான் நம்மைப் பக்குவப் படுத்துகிறது.
ஒரு தானியத்தை வறுத்துப் பொடித்து உணவாக மாற்றுவதென்றால், முதலில் அடுப்பை எரியவிட்டு, வாணலியை அதன்மேல் ஏற்றி, தானியத்தை வாணலியில் இட்டு, ஓயாமல் அதைச் சட்டுவத்தால் கிளறிவிடல் தேவைப் படுகிறது. அப்படிச் செய்யாவிட்டால் அடிப் பகுதி கருகியும், மேல்பகுதி வறு படாமலும் வீணாகிவிடும். இதேபோல்தான் இயற்கை நம்மை இன்ப துன்பங் களில் புறட்டிப் பக்குவப் படுத்துகிறது. இயற்கையானது பகல்-இரவு, சுகம்-துக்கம் போன்று எல்லாவற்றிலும் இருமையை வைத்து எதிர்விளைவுகளை உண்டாக்கி பக்குவப்படுத்துகிறது. நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லையே ஒழிய வாழ்க்கையின் விளைவுகள் எல்லாமே ஏதோ ஒரு காரண காரியத் தொடர்ச்சியாகத்தான் நடந்துவருகிறது
.

உடை

உணவு இல்லாமல் இரண்டொரு நாள் வாழ்ந்துவிட முடியும்; ஆனால் உடை அணியாமல் இருக்க முடியாது. வயதுக்கு ஏற்பவும், கால நிலைகளுக்கு ஏற்பவும் உடை தயார்செய்து அணிகிறோம். குழந்தைகளுக்கும் அணிவிக் கிறோம். உடல் வளர்ச்சி அடையும்போது உடை கிழியாதபோதும் அதை ஒதுக்கி விட்டு வேறு வாங்கி அணிகிறோம். சரீரத்தில் அணியும் உடைக்கு ஒப்பானது தான் இந்த சரீரமெனும் உடையும் என்று நம் முன்னோர்கள் விளக்குகின்றனர். உடல் என்பது ஜீவன் அணிந்திருக்கும் உடைதான். ஜீவனும் தன் சரீரமாகிய உடையை அடிக்கடி மாற்றிக்கொள்கிறது.
சிசு ஒன்று வளர வளர அதன் உடையும் அளவிலும் தரத்திலும் மாற்ற மடைகிறது. அதே போல, மனித ஜீவனும் அறிவிலும் அனுபவத்திலும் வளர்ச்சி அடையும்போது உடலை மாற்றிக்கொள்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நாம் அறியமுடியாதபடி ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு பகலும் உடல் வளர்ச்சி அடைகிறது. நாம் பெற்றுப் பெயரிட்ட குழந்தை வருடங்கள் செல்லச் செல்ல வளர்ந்து வாலிபமாகிறது. சிசுவான நம் குழந்தைதான் அது என்று உணர்ந்து கொள்கிறோமே ஒழிய சிசு தோற்றம் காணாமற் போய்விடுகிறது.
உயிர்களுக்கு உறக்கம் என்பது இரவில் தினசரி நிகழ்கிறது. மரணமும் ஒரு உறக்கம்தான். உயிர் வேறு உடல் பெற்றுக் கொள்கிறது. சிசு வளர்ச்சி புரிந்து கொள்ளும் மாற்றம். உயிர் வளர்ச்சி என்பது புரிந்துகொள்ள முடியாத ஒரு மாற்றம். இந்த வளர்ச்சி புழு, பூச்சி என்னும் உயிர்களாக ஆரம்பித்து, மன, அறிவு வளர்ந்து வளர்ந்து (பல ஜன்மத் தொடரில்) பிரும்ம நிலை வரையிலும் உயர்வு அடைவதாக நம் முன்னோர் சொல்கிறார்கள்.
1) தூக்கம் விழிப்புத் தொடரின் மூலம் உடலும் மனமும் வளர்ச்சி அடைகிறது.
2) மரண ஜனனத் தொடர்ச்சி மூலம் மனமும் அறிவும் வளர்ச்சி அடைகிறது.
3) அதன்பிறகு அறிவு எல்லையற்றதாக உயரும்போது மனம் நாசம் அடைகிறது.
ஆக, காற்புள்ளி, அரைப்புள்ளி, முற்ருப் புள்ளியாகத் தொடர்ந்து கதைகள் முடிவடைந்து விடுவதுபோல, தூக்கம் என்ற அரைப்புள்ளியும், மரணம் என்னும் முற்றுப் புள்ளியும் மோக்ஷம் அல்லது விடுதலை என்னும் முடிவில் கொண்டு போய் விடுகிறது.

Tuesday, October 16, 2007

03-மனக் கருவூலத்திலிருந்து

சாக்ஷி
ஒரு ஊரில் ஒரு கோமுட்டி செட்டி இருந்தான். அவன் மிகவும் நேர்மையான வன். திருப்பதி வெங்கடாசலபதியிடம் பக்தி கொண்டவன். அவனுக்கு ஒரு முறை கொஞ்சம் பணத் தேவை உண்டாயிற்று. அந்த ஊரில் வட்டிக்குப் பணம் கொடுப்பவனிடம் கடன் வாங்கினான். கடன் வாங்கும் போது அங்கு ஒருவன் சாக்ஷியாக நின்றிருந்தான். சில மாதங்களில் அவன் வாங்கிய கடனைத் திருப்பி அடைத்துவிட்டான். ஆனால் அப்போதும் சாக்ஷி வைத்துக் கொள்ளவேண்டும் என்பது அவனுக்குத் தோன்றவில்லை. கடன் கொடுத்தவன் அதைப் பயன்படுத்திக் கொண்டான். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து விட்டான்.
செட்டி அதிர்ந்து போனான். நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. கடன் கொடுத்ததை தக்க சாக்ஷியோடு உறுதிப்படுத்தினான் வட்டிக் கடைக்காரன். செட்டியை நீதிபதி விசாரித்தபோது அவன் அழுதுகொண்டே கடனைத் திருப்பிச் செலுத்தி விட்டதாகச் சொன்னான். அது உண்மையாக இருக்கக்கூடும் என்றே நீதிபதிக்குத் தோன்றியது. அவர் செட்டியிடம் கேட்டார், "நீர் கடனைத் திருப்பிக் கொடுத்தபோது அங்கு யாராவது சாக்ஷியாக இருந்தார்களா?" செட்டி, "சாக்ஷியா? வெங்கடாசலபதிதான் சாக்ஷி" என்று கண்ணீர் விட்டபடி கூறினான்
கோர்ட்டார் அது ஒரு மனிதன் என்று எண்ணிவிட்டார். உடனே 'வெங்கடா சலபதி!' என்று மூன்று முறை உரத்த குரலில் அழைக்கப் பட்டது. ஒரு உயரமான மனிதன் நெற்றியில் பெரிய நாமத்தோடும், பஞ்சகச்ச வேட்டி யோடும், மேலே மஞ்சள் அங்கவஸ்திரதோடும் சாக்ஷிக் கூண்டில் வந்து நின்றான். அவனைப் பார்த்த செட்டிக்கு ஆச்சர்யமாக இருந்தது. அந்த மனிதனை செட்டி இது வரை பார்த்ததே இல்லை. செட்டி கடனைத் திருப்பிக் கொடுத்தபோது தான் சாக்ஷியாக அங்கு இருந்ததாக அவன் சொல்லிவிட்டு கூண்டைவிட்டு அகன்று போனான்.
தீர்ப்பு செட்டி பக்கம் ஆனது. நீதி மன்றத்தை விட்டு வெளியில் வந்த செட்டி எங்கு தேடியும் தனக்கு சாக்ஷி சொன்ன மனிதனை கண்டுபிடிக்க முடியவில்லை.
வேண்டுதல்
----------------
தர்மசீலை என்று ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு அன்பான நல்ல கணவனும், தரவான மாமன் மாமியும், வளமான வாழ்வும் அமைந்திருந்தன. அவர்கள் திருப்பதியில் வசித்து வந்தனர். ஆனால் வருடங்கள் பல ஆன போதும் அவளுக்குப் பிள்ளைப் பாக்கியம் கிடைக்க வில்லை. எத்தனையோ வேண்டுதல்கள், மருந்து மாத்திரைகள் என்று செலவு செய்தும் பலனில்லை.
நாட்கள் செல்லச் செல்ல கணவனின் அன்பும் மற்றவரின் ஆதரவும் குறையலாயின. அவளை மலடி என குறை சொல்லத் தொடங்கி விட்டனர். இந்த 'மலடி' என்ற சொல் அவளை மிகவும் பாதித்துவிட்டது. அவள் மிகவும் உருக்கமாக "வெங்கடாசலபதியே என் மலட்டுக்குறை தீரும்படி எனக்கு ஒரு குழந்தையைக் கொடுத்து அருள். எனக்கு குழந்தையைக் கொஞ்சும் பாக்கியம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அந்தக் குழந்தையை உன் தேர் வீதியில் பவனி வரும்போது தேர்சக்கரத்தின் முன்னால் பலி கொடுத்துவிடுகிறேன்" என்று வேண்டிக் கொண்டாள்.
விரைவில் அவள் கர்ப்பம் தரித்தாள். வீட்டில் அவளுக்கு ஏக உபசரிப்பு, மரியாதை. அவளும் அதீதமான மகிழ்ச்சியில் இருந்தாள். தன் பிரார்த்தனை பற்றி அவள் பெரிதாக நினைக்க வில்லை. அனேகமாக மறந்தேபோனாள். உரிய காலத்தில் அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு ஆறு அல்லது ஏழு மாதங்கள் ஆன சமயம் தேர் திருவிழா வந்துவிட்டது. தேர் வீதியில் அவள் வீட்டின் முன்பு வந்து நின்றுவிட்டது. எத்தனையோ முயன்றும் அதை மேலே இழுக்க முடியவில்லை. யானை பின்புறமாக தேரை மோதியும் அது அசைய வில்லை. நாளெல்லாம் அங்கேயே நின்றது. இது ஊர் மக்களுக்கு அதிசயமாகவும் கலவரமாகவும் இருந்தது. ஒருவருகொருவர் அதுபற்றி பேசிக் கொண்டனர்.
தருமசீலை ஒரு முடிவுக்கு வந்தாள். தன் குழந்தையைத் தோளில் சாய்த்த படி வீதியில் இறங்கினாள். சட்டென்று தேர் சக்கரத்தின் முன்பு குழந்தையைக் கிடத்தித் தானும் படுத்துவிட்டாள். அதே சமயம் ஒரு பயங்கரமான புயல் வீசத் தொடங்கியது. தேரின் பின்புறம் நின்றிருந்த யானை விரைந்துவந்து தேரை பக்க வாட்டில் ஒரு உந்து உந்தியது. தேர் தடம் மாறி நகர்ந்து கொஞ்சம் விலகி ஓடத்தொடங்கியது. புயலும் நின்றுவிட்டது. குழந்தையும் தாயும் எவ்வித சேதாரமுமின்றிப் பிழைத்துக் கொண்டனர்.

Tuesday, October 9, 2007

02-மனக் கருவூலத்திலிருந்து

பக்தி
-----
மனித இனம் எல்லாம் ஒரு எல்லைக்கு உட்பட்ட அறிவோடும் ஆற்றலோடும் இருக்கிறது. அதைக் கொண்டுதான் தன் வாழ்க்கையைப் பகுத்து வாழவேண்டி யிருக்கிறது.சுத்தமான கண்ணாடியில் தெரிவதும் கட்டாந்தரையில் தெரிவதும் ஒரு பொருளின் பிரதிபலிப்பான நிழல்தான் என்றாலும் தரையில் விழும் நிழலில் நம் ஜாடை தெளிவற்று மொத்தையாக இருக்கிறது. ஆனால் உயர்ந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் (ஏறக்குறைய) தத்ரூபமாகத் தெரிகிறது. அதுகூட வலம் இடமாக மாற்றித்தான் தெரியும்.
மனித இனம் எல்லாமே ஒரே மாதிரி விகாசமாக இருப்பதில்லை. தெளிவு, சுமாரான தெளிவு, அறியாமை மிகுந்து குறைந்த அறிவு என்று சராசரியாக மூன்றுவிதம் காணப்படுகிறது. இதைத்தான் "சத்வ, ரஜோ, தமோ" குணங்கள் என்று வேதாந்திகள் சொல்லுகிறார்கள். அவரவர் குணங்களுக்குத் தக்கபடி உலகையும் மக்களையும் வாழ்க்கையையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப வாழ்கிறார்கள்.
பல சமயங்களில் மனிதன் தனக்கு மீறிய ஒரு சக்தி தன்னையும் உலகையும் ட்டி வைப்பதை உணருகிறான். அப்போது அவன் தன்னையும் அறியாமல் அதற்குத் தலை வணங்குகிறான், பயப்படுகிறான். தன் கைமீறிப் போகும் பல சம்பவங்களின்போது அந்த சக்தியிடம் யாசிக்கிறான். இதைத்தான் நாம் 'பக்தி' என்று சொல்லுகிறோம். இந்த 'பக்தி'யை நம் முன்னோர்கள் இரண்டு விதமாகப் பிரித்திருக்கிறார்கள்.
அ) காம்ய பக்தி
ஆ) நிஷ்காம்ய பக்தி.
'காம்ய பக்தி'யில் நாம் நமது நலன்களுக்காக பக்தி செய்கிறோம் (நோய் தீர வேண்டும், செல்வச் செழிப்போடு இருக்கவேண்டும், பரிட்சையில் தேர்வடைய வேண்டும் என்பதுபோல). 'நிஷ்காம்ய பக்தி' செய்பவர்கள் 'பக்தி'க்காகவே பக்தி செய்வார்கள். அவர்களுக்கு அச்செய்கையில் ஒரு இன்பம் கிடைக்கும். ஒரு குடிகாரன் எப்படிக் குடும்பம், குழந்தை என்பன போன்றவற்றைக்கூட விரும்பாமல் குடியில் ஆழ்கிறானோ அதுபோல உண்மையான் 'நிஷ்காம்ய' பக்தர்கள் பக்தியில் ஈடுபட்டு உலகையே துறக்கின்றனர்.
பிரார்த்தனையும் வேண்டுதலும்
---------------------------------
நம் பெரியோர்கள் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள், 'நீ கடவுளை பிரார்த்திப் பாயானால் நீ விரும்பும் யாவும் கைகூடும்' என்று. இது ஓரளவு உண்மைதான் என்றாலும் முழுவதுமாக ஏற்கமுடியாது. யோசித்துப் பார்த்தால் அப்படி எல்லோருக்கும் எல்லாக் காலங்களிலும் நடந்துவிடுவதில்லை. கடவுள் அப்படி நடத்திக் கொடுப்பதாய் இருந்தால் கவுளின் ஸ்தானம் வேலைக் காரனின் நிலைக்கு வந்துவிடும்.
எதற்கும் ஒரு தகுதியும் தேவைப்படுகிறது. ஆக, எவருடைய பிரார்த்தனைக் குத்தான் செவி சாய்க்கலாம் என்பது அவரின் (கடவுளின்) விருப்பத்தைப் பொருத்த விஷயம். லாட்டரி சீட்டு வாங்கினால் பரிசு விழும் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும் அது எல்லோருக்குமே விழுந்து விடாது. அப்படி நடக்கவும் முடியாது. ஆனால் பிரார்த்திப்பது அன்றி மனிதன் வேறு ஒன்றும் செய்யவும் முடியாது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பிரார்த்திப்பது மட்டும் அல்லாமல் அறிவுபூர்வமான சுய முயற்சிகளும் இருக்க வேண்டும். செயல் என்றால் அதற்குக் கண்டிப்பாக விளைவும் உண்டு.
வேண்டுதல் செய்து கொள்பவர்கள், "பகவானே, நீ எனக்கு இதைச் செய்து கொடு, நான் உனக்கு இன்ன காணிக்கை கொடுக்கிறேன்" என்று வேண்டிக் கொள்வார்கள். உண்மையில் சொல்லப் போனால் எல்லாமே கடவுளுடைய பொருள் ஆனதால் அவருக்குக் கொடுக்க மனிதனுக்கென்று தனியாக ஒன்றும் இல்லை. னால் வேண்டிக்கொண்டபடி செய்யா விட்டால் அவன் சோதனைக்கு உள்ளாக்குகிறான். வேண்டுதலை நிறைவேற்றியே தீர வேண்டும்.
நான் இனி பிரார்த்தனையால் பயன் அடைந்த கதை ஒன்றையும் வேண்டுதலால் சோதிக்கப் பட்ட கதை ஒன்றையும் சொல்கிறேன். இவை இரண்டுமே இந்தக் கலிகாலத்தில் உண்மையாக நடந்த சம்பவங்கள்தாம்.

என்னைப் பற்றி

நான் 17-10-1913இல் பிறந்தேன். அம்மா சீதாலக்ஷ்மி, அப்பா ராமசாமி ஐயர். எங்கள் குடும்பம் மத்தியத்தரக் குடும்பம். தந்தை பொதுநல நோக்கு உடையவராக இருந்ததால் வசதியான குடும்பத்தில் பிறந்தும் கல்வியைப் பரப்பும் விருப்பத்தால் பழநியில் சொந்தமாகப் பள்ளி தொடங்கி இருபது வருட காலம் நடத்தினார். தமது சொத்தையெல்லாம் பள்ளிக்காக செலவுசெய்து தீர்த்து விட்டார். ஆகையால் நாங்கள் அன்ன வஸ்திரக் குறையில்லாமல் வாழ்ந்தோமானாலும், பணக்காரர்களாக இருந்ததில்லை.
என்னுடைய நாலாவது வயதில் பெரியம்மை வார்த்து செத்துப் பிழைத்தேன். ஆனால் பொதுவாகச் சொல்லவேண்டுமென்றால், வியாதி வெக்கை என்று எனக்கு அதிகமான தொந்தரவு இருந்ததில்லை. ஒன்பது பிள்ளைகள் பெற்றாலும் ஆரோக்கியமாகத்தான் இருந்தேன். இன்று வரையிலும் சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற எந்தத் தொந்தரவும் கிடையாது. வயோதிகத் தள்ளாமைதான். தெய்வ நம்பிக்கையும் தியானமும் ஜெபமும் என்னை இப்படி வைத்திருப்பதாக நம்புகிறேன். தவிர, எழுத்தும் படிப்பும் என் சொந்தக் கவலை களால் நான் துவண்டு போகாமல் காப்பதாக எண்ணுகிறேன்.

என் தந்தை திருபுவனம் ஹைஸ்கூலில் உத்தியோகத்தில் இருந்த சமயத்தில் என்னை நாலாம் வகுப்பில் சேர்த்தார். அந்த வருடம் நான் வேறு ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பில் நிறைய மார்க் வாங்கியிருந்தேன். ஆனால், அந்த மாதத்திலேயே அவருக்கு பழநி ஹைஸ்கூலுக்கு மாற்றலாகி விட்டது. பெயர் பதியப் படாமலே ஏறக்குறைய ஒரு மாதம்போல பழநி பள்ளிக்குச் சென்று அமர்ந்திருந்தேன். அந்த வகுப்பு ஆசிரியர் அப்பாவின் நண்பரா கையால் தடை ஏதும் சொல்லவில்லை. ஆனால், ஒருநாள் அவர், 'குழந்தாய், உன் அப்பாவுக்கு உன்னைப் பள்ளியில் சேர்க்கும் உத்தேசம் இல்லை என்று தோன்றுகிறது. நீ அனாவசியமாக வந்து வகுப்பில் உட்காராதே' என்று சொல்லிவிட்டார். வீட்டிற்கு வந்து அப்பாவிடம் கேட்டபோது அம்மாவுக்கு அதில் விருப்பமில்லை பெண்கள் படித்து வேலை செய்வது என்பது நடவாத காரியம் என்று சொன்னதாகச் சொல்லிவிட்டார். பின்பு நானாகவே அம்மாவை நச்சரித்து ஒரு கிருஸ்துவப் பள்ளியில் ஐந்தாவது முடித்தேன். பிறகு எனக்குத் திருமணம் ஆகி விட்டது அப்போது என் வயது 13.

நான் புகுந்த வீடு பெரிய கூட்டுக் குடும்பம். சற்று வசதியான வாழ்க்கை. நிறையக் குடும்பக் கடமைகள். னாலும் பகல் தூக்கமும் பிறரோடு அரட்டையும் இல்லாத குணமுடைய எனக்கு நிறைய எழுதவும் படிக்கவும் நேரம் கிடைத்தது. ஆனால் பிரபலம் அடையும் சூழ்நிலை இல்லையாக இருந்தது. பொதுவாக, பெண்களுக்குள் ஏற்படும் தகராறுகளுக்கு வீட்டுவேலை செய்வதில்தான் பிரச்சனை எழும். நான் அதிகம் உழைக்கிறேன் ;அவள் நழுவுகிறாள் என்பதான புகார்கள்தான் காரணமாக அமையும். உழைப்பையும் ஒரு விளையாட்டுப் போல எதிர்கொண்டால் பிரச்சனை கிடையாது. எனக்கு என்றுமே வேலை செய்வது பிடித்தமான ஒன்று. என் குழந்தையின் உடல் நலம் சரியில்லாமல் இருந்தால்கூட கவலைப்பட்டுக் கொண்டு அங்கேயே உட்கார்ந்திருக்கப் பிடிக்காது. ஓரகத்திகள் யாரையாவது அமர்த்திவிட்டு வேலை செய்ய ஓடி விடுவேன். மாமியார் மாமனார் இல்லாமல் இருந்ததால் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. என் கணவர் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர்.

எனக்கு இலக்கணமோ எதுகை மோனையோ அல்லது சந்தம் பற்றியோ ஆரம்ப காலங்களில் ஏதும் தெரியாது. ஆனால், அடிக்கடி சந்திக்கும் ஒருவரின் பெயர் என்னவென்று தெரியாதபோதும் அடையாளம் எப்படி மனதில் படிந்து விடுமோ அவ்விதமே, கவிதைகளின் லக்ஷணம் என்ன என்பது மனதுக்குத் தெரிந்தது. என்னை அறியாமலே அது ஒழுங்காக அமைந்தது. பின்னர் சென்னை வந்த பிறகு அவைகளைப் பற்றி அறிந்துகொண்டேன்.

நான் 1936 தொடங்கி 1938வரை ஹிந்தி படித்து ராஷ்டிரபாஷா பரிட்சை முடித்தேன். 1937 இல் இருந்தே ஹிந்தி கற்றுக் கொடுக்கவும், பெண்களை பரிட்சைக்குத் தயார் செய்து அனுப்பவும் ஆரம்பித்து விட்டேன். எனக்கு அவ் விதம் அனுப்புவதற்கான முறையான அனுமதி இருக்கவில்லை. ஆகையால், தாராபுரம் உயர்நிலைப் பள்ளி ஹிந்தி ஆசிரியர் மூலமாக அதை செய்தேன். பிரபல மொழிபெயர்ப்பாளர் திருமதி சரஸ்வதி ராம்நாத் சிறுமியாக என்னிடம் தான் ஹிந்தி கற்றுக்கொண்டாள் எனபது இன்றும் பெருமை அளிக்கும் விஷயம்.

அந்தக் காலம் தேசிய ஆர்வம் மிகுந்து இருந்ததால், நாட்டுக்கு ஒரு பொதுமொழி என்று ஹிந்தியை மக்களிடம் பரப்பினார்கள். ஒரு பத்து வருட இடைவெளிக்குப் பின் 1950இல்தான் நான் பிரவேசிகா ராஷ்ரிரபாஷா என்னும் இரண்டு நிலைகளில் தேர்வு பெற்றேன். என் மகள் பிருந்தா (க்ருஷாங்கினி) தன் ஹிந்தி எம்.ஏ. பாடப் புத்தகங்களுடன் சென்னை வந்திருந்தாள். அப்போது கபீர் கவிதைகள் புத்தகம் படித்தேன். அதிலிருந்து கொஞ்சம் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்தேன். திரு வாஜ்பெய் அவர்களின் கவிதை நூலிலிருந்தும் சிலவற்றை தமிழில் மொழிபெயர்த்தேன்.

1937வாக்கில் பழநியிலிருந்து சித்தன் என்னும் பத்திரிகையும், கோவையிலிருந்து பாரதஜோதி என்னும் பத்திரிகையும் வந்து கொண்டு இருந்தன. இரண்டும் அல்பாயுசிலேயே மறைந்தும் போய் விட்டன. அந்த இரண்டிலுமாக என்னுடைய ஐந்து சிறு கதைகள் வெளி வந்தன. அவை: 1) பிராயச்சித்தம் 2) சுவர்ணம் 3) நாட்டியக்காரி 4) சிற்றன்னை கோயில் 5) பொம்மை

தொடர்பு கொள்ள
திருமதி சம்பூர்ணம்(பூரணி)c/o க்ருஷாங்கினி34, சிட்லபாக்கம் 2வது பிரதான சாலை,தாம்பரம் சானடோ ரியம்,சென்னை-600 047தொ.பே.எண்: 2223 1879

Saturday, October 6, 2007

01-மனக் கருவூலத்திலிருந்து

சாமியும் பூதமும்
மனிதர்கள் பேசும்போது சில சமயங்களில் கேட்டதுண்டு, "சாமியாவது பூத மாவது! ஒன்றும் கிடையாது" என்று. இதிலிருந்து தெரிவது சாமி வேறு பூதம் வேறு என்பதுதான். சாமி என்பது தெய்வீகத்தையும், பூதம் என்பது பௌதீ கத்தையும் குறிக்கிறது. பௌதீகம் தெய்வீகமாக முடியாது.
தெய்வம் என்னும் சொல் சத்தியத்தைக் குறிக்கும். சத்தியம், நிஜம், எல்லாம் ஒரே அர்த்தத்தில் உபயோகப்படுகிறது. அது ஒன்றாகத்தான் இருக்குமே யன்றி பலவாக இருக்க முடியாது. கையால் தெய்வங்கள் பல என நினைப்பது தவறு.
சத்தியம் உணரப்படும் பொருளே தவிர அறியப்படும் பொருள் அன்று. உண்மையில் 'நான்' என்பது ஒரே வஸ்துதான். அது 'நாம்' என்னும் பன்மை அல்ல. ஆனால், 'நான், நீ, அவன்' என்று பலவாறாக இருக்கிறோமே அது எப்படி? என்று கேட்கலாம் அது இயற்கையின் செயலான பௌதீகத்தினால் தான்.
சூரியன் எப்படி உஷ்ணமும் ஒளியும் உடையதாக இருக்கிறதோ அதுபோல சத்தியத்திடமிருந்து அறிவும், ஆற்றலும் வெளிப்படுகிறது. இயற்கையானது அந்த அறிவையும் ற்றலையும் கைபற்றி, பஞ்ச பூதங்களான மண், நெருப்பு, நீர், காற்று, காயங்களை உண்டாக்கி, அவைகளின் மூலம் பௌதீக உலகையும் படைக்கிறது. அந்த பௌதீக உலகில் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவராசிகளுக் கெல்லாம் 'மனம்' என்னும் நுண்ணிய அமைப்பையும் உண்டுபண்ணுகிறது. அந்த ஜீவராசி களின் பல மனங்களிலும் ஏகமான 'நான்' என்னும் சத்தியத்தின் பிரதிபலிப்பாக அறிவும் ஆற்றலும் பிரதிபலிக்கின்றன.
முகம் பார்க்கும் கண்ணாடியை சூரியன் முன் சாய்வாகக் காட்டினால் அதற்குள்ளிருந்து சூரிய ஒளியும் உஷ்ணமும் பிரதிபலிப்பதுபோல உயிர்களின் மனங்களின் அமைப்புக்கேற்ப சத்தியத்தின் அறிவும் ற்றலும் பிரதிபலிக்கின்றன. அவை பல 'நான்'களாக உருவெடுக்கின்றன.
உடலும் உயிரும்
--------------------
உயிரை ஜீவன் என்றும் ஜீவாத்மா என்றும் சொல்கிறார்கள், சத்தியமான பிரும்மத்தைப் 'பரமன்' என்றும் சொல்கிறார்கள். உடலோடு கூடிய உயிர் ஜீவாத்மா எனப்படுகிறது. உடலற்ற உயிரைக் காணவோ அறியவோ முடியாது. நாம் மனிதர்களைப் பற்றிச் சொல்லும்போது, 'அவன் கருப்பு; இவள் குட்டை' என்று குறிப்பிடுகிறோம். உண்மையில் கருப்பாகவோ குட்டையா கவோ இருப்பது உடலேயன்றி ஜீவனல்ல. நரை ,திரை, மூப்பு, சாவு முதலிய எல்லா விவகாரங்களும் உடலைப் பொருத்ததே; உயிருக்கு எவ்வித மாற்ற மும் கிடையாது.
ஒரு வீட்டைக் கட்டிய ஒருவனிடம் 'இது யார் வீடு?' என்று கேட்கிறோம் என்பதாக வைத்துக்கொள். அவன் 'இது என்வீடு' என்று சொல்வானே தவிர 'நான் வீடு' என்று உரைக்க மாட்டான். அதுபோல நாமும் 'இது என் உடம்பு' என்று கூறுவோமேயன்றி 'நான் உடம்பு' என்று சொல்ல மாட்டோம். இப்படி சொல்லிக் கொண்டே போவோமானால் 'என் உடம்பு, என் மனசு, என் அறிவு, என் உயிர்' என்பதாக 'நான்' என்ற ஒரு பொருளுக்குச் சொந்தமாக்கப் படுகிறது. அந்த 'நான்' யார்?
இதுதான் ஸ்ரீ ரமண மஹரிஷியின் உபதேச சாரமும் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேசமுமாகும். இந்த உடலை 'நான்' என்று மயங்குவதைத்தான் "தேகாத்ம புத்தி" என்று வேதாந்தத்தில் சொல்லப்படுகிறது (உடலை நான் என்று தவறாக நினப்பது). மின்சாரம் செயல்பட வேணுமென்றால் 'பல்பு, டி.வி., பேன்,' போன்ற பொருள்களும், அவற்றை இயக்கும் ஸ்விச்சும் தேவைப்படுகிறது. உடலும் உயிரும் இணைந்தாலன்றி ஒரு செயலும் நடைபெறாது. இது பூச்சி முதல் பிரும்மா முடிய எல்லோருக்கும் பொது.