Tuesday, October 9, 2007

என்னைப் பற்றி

நான் 17-10-1913இல் பிறந்தேன். அம்மா சீதாலக்ஷ்மி, அப்பா ராமசாமி ஐயர். எங்கள் குடும்பம் மத்தியத்தரக் குடும்பம். தந்தை பொதுநல நோக்கு உடையவராக இருந்ததால் வசதியான குடும்பத்தில் பிறந்தும் கல்வியைப் பரப்பும் விருப்பத்தால் பழநியில் சொந்தமாகப் பள்ளி தொடங்கி இருபது வருட காலம் நடத்தினார். தமது சொத்தையெல்லாம் பள்ளிக்காக செலவுசெய்து தீர்த்து விட்டார். ஆகையால் நாங்கள் அன்ன வஸ்திரக் குறையில்லாமல் வாழ்ந்தோமானாலும், பணக்காரர்களாக இருந்ததில்லை.
என்னுடைய நாலாவது வயதில் பெரியம்மை வார்த்து செத்துப் பிழைத்தேன். ஆனால் பொதுவாகச் சொல்லவேண்டுமென்றால், வியாதி வெக்கை என்று எனக்கு அதிகமான தொந்தரவு இருந்ததில்லை. ஒன்பது பிள்ளைகள் பெற்றாலும் ஆரோக்கியமாகத்தான் இருந்தேன். இன்று வரையிலும் சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற எந்தத் தொந்தரவும் கிடையாது. வயோதிகத் தள்ளாமைதான். தெய்வ நம்பிக்கையும் தியானமும் ஜெபமும் என்னை இப்படி வைத்திருப்பதாக நம்புகிறேன். தவிர, எழுத்தும் படிப்பும் என் சொந்தக் கவலை களால் நான் துவண்டு போகாமல் காப்பதாக எண்ணுகிறேன்.

என் தந்தை திருபுவனம் ஹைஸ்கூலில் உத்தியோகத்தில் இருந்த சமயத்தில் என்னை நாலாம் வகுப்பில் சேர்த்தார். அந்த வருடம் நான் வேறு ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பில் நிறைய மார்க் வாங்கியிருந்தேன். ஆனால், அந்த மாதத்திலேயே அவருக்கு பழநி ஹைஸ்கூலுக்கு மாற்றலாகி விட்டது. பெயர் பதியப் படாமலே ஏறக்குறைய ஒரு மாதம்போல பழநி பள்ளிக்குச் சென்று அமர்ந்திருந்தேன். அந்த வகுப்பு ஆசிரியர் அப்பாவின் நண்பரா கையால் தடை ஏதும் சொல்லவில்லை. ஆனால், ஒருநாள் அவர், 'குழந்தாய், உன் அப்பாவுக்கு உன்னைப் பள்ளியில் சேர்க்கும் உத்தேசம் இல்லை என்று தோன்றுகிறது. நீ அனாவசியமாக வந்து வகுப்பில் உட்காராதே' என்று சொல்லிவிட்டார். வீட்டிற்கு வந்து அப்பாவிடம் கேட்டபோது அம்மாவுக்கு அதில் விருப்பமில்லை பெண்கள் படித்து வேலை செய்வது என்பது நடவாத காரியம் என்று சொன்னதாகச் சொல்லிவிட்டார். பின்பு நானாகவே அம்மாவை நச்சரித்து ஒரு கிருஸ்துவப் பள்ளியில் ஐந்தாவது முடித்தேன். பிறகு எனக்குத் திருமணம் ஆகி விட்டது அப்போது என் வயது 13.

நான் புகுந்த வீடு பெரிய கூட்டுக் குடும்பம். சற்று வசதியான வாழ்க்கை. நிறையக் குடும்பக் கடமைகள். னாலும் பகல் தூக்கமும் பிறரோடு அரட்டையும் இல்லாத குணமுடைய எனக்கு நிறைய எழுதவும் படிக்கவும் நேரம் கிடைத்தது. ஆனால் பிரபலம் அடையும் சூழ்நிலை இல்லையாக இருந்தது. பொதுவாக, பெண்களுக்குள் ஏற்படும் தகராறுகளுக்கு வீட்டுவேலை செய்வதில்தான் பிரச்சனை எழும். நான் அதிகம் உழைக்கிறேன் ;அவள் நழுவுகிறாள் என்பதான புகார்கள்தான் காரணமாக அமையும். உழைப்பையும் ஒரு விளையாட்டுப் போல எதிர்கொண்டால் பிரச்சனை கிடையாது. எனக்கு என்றுமே வேலை செய்வது பிடித்தமான ஒன்று. என் குழந்தையின் உடல் நலம் சரியில்லாமல் இருந்தால்கூட கவலைப்பட்டுக் கொண்டு அங்கேயே உட்கார்ந்திருக்கப் பிடிக்காது. ஓரகத்திகள் யாரையாவது அமர்த்திவிட்டு வேலை செய்ய ஓடி விடுவேன். மாமியார் மாமனார் இல்லாமல் இருந்ததால் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. என் கணவர் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர்.

எனக்கு இலக்கணமோ எதுகை மோனையோ அல்லது சந்தம் பற்றியோ ஆரம்ப காலங்களில் ஏதும் தெரியாது. ஆனால், அடிக்கடி சந்திக்கும் ஒருவரின் பெயர் என்னவென்று தெரியாதபோதும் அடையாளம் எப்படி மனதில் படிந்து விடுமோ அவ்விதமே, கவிதைகளின் லக்ஷணம் என்ன என்பது மனதுக்குத் தெரிந்தது. என்னை அறியாமலே அது ஒழுங்காக அமைந்தது. பின்னர் சென்னை வந்த பிறகு அவைகளைப் பற்றி அறிந்துகொண்டேன்.

நான் 1936 தொடங்கி 1938வரை ஹிந்தி படித்து ராஷ்டிரபாஷா பரிட்சை முடித்தேன். 1937 இல் இருந்தே ஹிந்தி கற்றுக் கொடுக்கவும், பெண்களை பரிட்சைக்குத் தயார் செய்து அனுப்பவும் ஆரம்பித்து விட்டேன். எனக்கு அவ் விதம் அனுப்புவதற்கான முறையான அனுமதி இருக்கவில்லை. ஆகையால், தாராபுரம் உயர்நிலைப் பள்ளி ஹிந்தி ஆசிரியர் மூலமாக அதை செய்தேன். பிரபல மொழிபெயர்ப்பாளர் திருமதி சரஸ்வதி ராம்நாத் சிறுமியாக என்னிடம் தான் ஹிந்தி கற்றுக்கொண்டாள் எனபது இன்றும் பெருமை அளிக்கும் விஷயம்.

அந்தக் காலம் தேசிய ஆர்வம் மிகுந்து இருந்ததால், நாட்டுக்கு ஒரு பொதுமொழி என்று ஹிந்தியை மக்களிடம் பரப்பினார்கள். ஒரு பத்து வருட இடைவெளிக்குப் பின் 1950இல்தான் நான் பிரவேசிகா ராஷ்ரிரபாஷா என்னும் இரண்டு நிலைகளில் தேர்வு பெற்றேன். என் மகள் பிருந்தா (க்ருஷாங்கினி) தன் ஹிந்தி எம்.ஏ. பாடப் புத்தகங்களுடன் சென்னை வந்திருந்தாள். அப்போது கபீர் கவிதைகள் புத்தகம் படித்தேன். அதிலிருந்து கொஞ்சம் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்தேன். திரு வாஜ்பெய் அவர்களின் கவிதை நூலிலிருந்தும் சிலவற்றை தமிழில் மொழிபெயர்த்தேன்.

1937வாக்கில் பழநியிலிருந்து சித்தன் என்னும் பத்திரிகையும், கோவையிலிருந்து பாரதஜோதி என்னும் பத்திரிகையும் வந்து கொண்டு இருந்தன. இரண்டும் அல்பாயுசிலேயே மறைந்தும் போய் விட்டன. அந்த இரண்டிலுமாக என்னுடைய ஐந்து சிறு கதைகள் வெளி வந்தன. அவை: 1) பிராயச்சித்தம் 2) சுவர்ணம் 3) நாட்டியக்காரி 4) சிற்றன்னை கோயில் 5) பொம்மை

தொடர்பு கொள்ள
திருமதி சம்பூர்ணம்(பூரணி)c/o க்ருஷாங்கினி34, சிட்லபாக்கம் 2வது பிரதான சாலை,தாம்பரம் சானடோ ரியம்,சென்னை-600 047தொ.பே.எண்: 2223 1879

No comments: