Thursday, April 29, 2010

07-மனக் கருவூலத்திலிருந்து-அந்தக் காலப் பிரசவம்

 அந்தக் காலப் பிரசவம்
முன்காலத்தில் பஸ்வசதி அதிகம் கிடையாது. தூரத்து ஊர்களுக்குத்தான் பஸ் போக்குவரத்து இருக்கும். அதுவும் குறைவாகவே இருக்கும். கிராமங்கள் தான் அதிகமாக இருக்கும். சற்று பெரிய நகரங்களில்தான் கவர்மெண்டு ஆஸ்பத்திரி இருக்கும். தனியார் ஆஸ்பத்திரி என்பது அறவே கிடையாது. அவசர காலங்களுக்கு நாட்டு வைத்தியம்தான். நாட்டு வைத்தியர்களுக்கும் முறையான பட்டப்படிப்பு என்பது கிடையாது. பரம்பரையான குடும்பங்களால் செய்யப் படும் வைத்தியம்தான். குழந்தைப் பேறுக்கென்று வைத்தியர் நர்ஸ் அதிகம் கிடையாது. கிராமங்களில் குழந்தைப் பேறு வீடுகளில்தான் நடக்கும். அதை அனுபவ வைத்தியமாக சில பெண்கள்தான் அறிந்திருப்பார்கள். அவர்களைத்தான் பேறுகாலத்தில் அழைப்பார்கள். அவர்களிலும்  திறமையானவர் பலர் இருப்பார்கள். பிரசவத்தில் சிக்கல் நேரும் என்று கண்டால்' பிரசவம் சிக்கலானது கவர்மெண்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போங்கள்' என்று கூறி விடுவார்கள்.

அந்த நாட்களில் ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்வது என்பது அவ்வளவு சுலபமல்ல. கட்டை வண்டியிதான் பிரயாணம் செய்யவேண்டும். அதனால் வழியில் ஆபத்து விளைவது அடிக்கடி நிகழும். இதனால் உயிர் சேதங்கள் நிகழ்வது அந்த நாளில் சகஜம். சிக்கலில்லாத பிரசவங்களை கிராமத்துப் பெண்களே செய்துவிடுவார்கள். அவர்கள் மிகுந்த பொறுமையுடனும், அன்புடனும், காசை எதிர்பார்க்காமலும், ஏழை பணக்காரர் என்னும் பேதம் பார்க்காமலும், அது ஒரு புண்ணிய காரியம் என்று செய்வார்கள். வலியெடுத்த பெண்ணிடம் அவர்கள் காட்டிய பரிவும் அன்பும் இந்த நாட்களில் ஆஸ்பத்திரிகளில் இருக்கும் படித்தவர்களிடம் காணமுடிவதில்லை.

வைத்திய வசதிகள் குறைவான அந்த நாட்களில் பிள்ளைப் பெறுவதிலும் பிரசவித்த பெண்ணை பராமரிப்பதிலும் மிகுந்த கவனமும் ஜாக்கிரதையும் உணர்வும் இருக்கும். குழந்தை பிறந்தவுடன் மஞ்சளை அரைத்துத் தேனில் குழைத்து பிரசவித்த பெண்ணுக்கு அரிநெல்லிகையாய் அளவு மூன்று உருண்டைகள் விழுங்கக்கொடுப்பார்கள். வேப்பெண்ணையை சுடவைத்து அதன் கசப்புத் தெரியாமல் இருக்க நாக்கின் மேல் ஒரு வெற்றிலையை வைத்து மூன்று உத்தரிணி அளவு வாயில் ஊற்றுவார்கள். தனியாவையும் சீரகத்தையும் ஊற வைத்து அரைத்து இஞ்சி சுரசத்துடன் கலந்து மூன்று வேளை கொடுப்பார்கள். அடுத்துவரும் நாட்களில் கருப்பட்டிப் பாகில் மருந்துப்பொடி தூவி, நல்லெண்ணெய்யுடன் கொஞ்சம் நெய்யும் தேனும் கலந்து சேர்த்து மருந்து கிளறி காலையிலும் இரவிலும் பெரிய நெல்லிக்காய் அளவு கொடுத்து சாப்பிடச் செய்வார்கள். ஆனால் அது பத்து நாட்கள் வரைதான். பிரசவ மருந்து பொருள்கள் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் வாங்கி இடித்து சலித்துக் கொள்வார்கள். பிரசவித்த பெண் தினமும் ஐந்து வேளை வெற்றிலை மெல்ல வேண்டும். இதுவும் கட்டாயம்.

குழந்தை பிறந்த மறுநாள் முதல் பத்தாவது நாள் வரையிலும் மதியம் பனிரெண்டு மணியளவில் மிளகு சீரக ரஸம் செய்து அன்னத்துடன் சாப்பிடக் கொடுப்பார்கள். அதற்குத் தொட்டுக் கொள்ள அவரை, புடலை, கத்தரி, போன்ற காய்களை பிஞ்சாகப்பொறுக்கி, தேங்காய் சேர்க்காமல், வதக்கி, நல் எண்ணையில் தாளித்து கொடுப்பார்கள். காலையில் காப்பி, பகல் பத்து மணியளவில் கஞ்சி, மாலியில் காப்பி, இரவில் கஞ்சி என்று தினமும் கொடுப்பார்கள். பத்தாவது நாள் இரவில் பாலன்னம் தருவார்கள். பதினோராம் நாளில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி இரண்டு வேளையும் பால், தயிர், நெய் சகிதம் சாப்பாடு போடுவார்கள். ஆனாலும் பத்தியமான காய்களைத்தான் கொடுப்பார்கள். பூண்டும் உணவில் இடம் பெறும். எண்ணெய்க் குளியலும், பால், தயிர் மற்றும் நெய் சேர்த்தலும் மூன்று மாதங்கள் தொடரும்.

மிதமான சூடுள்ள வெந்நீரை சற்று எட்ட நின்றவாறு பிரசித்தவளின் வயிற்றில் அடித்து ஊற்றுவார்கள்.புளியந்தழை புண் ஆற்றும் என்பதால் அவற்றை உருவிவந்து வெந்நீரில் கொதிக்க வைத்து ஒரு சுத்தமான துணியில் போட்டு சிறு மூட்டையாய் கட்டி உடல் பொறுக்கும் சூட்டில் பிரசவித்த அங்கத்தில் ஒத்தடம் கொடுப்பார்கள். அதனால் எரிச்சல் அடங்கும்; புண் இருந்தாலும் ஆறிவிடும்.

பழைய சிற்றாமணக்கு விதைகளை விலைக்கு வாங்கி வீட்டிலேயே முறைப்படி சுத்தமான விளக்கெண்ணெய் தயாரித்து வைத்துக்கொண்டு, குழந்தைக்கு தாய்ப் பாலுடன் இரண்டு மூன்று சொட்டுக்களை கலந்து தினமும் காலையில் சங்கில் புகட்டுவார்கள். குழந்தையின் உச்சியிலும் தடவுவார்கள். நன்கு முற்றிய தேங்காயிலிருந்து ஆட்டிய எண்ணெய்யை கொண்டு குழந்தையின் கண்களில் எண்ணெய் கட்டிவிட்டுத்தான் குழந்தையை என்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவார்கள். கண் மையும் முறைப்படி வீட்டிலேயேதான் செய்து தாய்க்கும் குழந்தைக்கும் உபயோகிப்பார்கள்.