மனித மனங்கள்
1) சுமார் ஐம்பது வருடங்களுக்குமுன் நான் எனது மூன்றாவது மகன் பாலுவின் கிராமம் சென்றிருந்தேன். அவன் ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியராக அங்கு இருந்தான். அதே ஊரில் வேரொரு ஆசிரியரும் வசித்து வந்தார். அவரும் பிராமணர்தான் என்றாலும், காந்தீயவாதியாக எல்லோருடனும் கலந்து பழகி, அவர்கள் வீட்டில் ஜாதி பாராமல் உணவருந்துபவராக இருந்தார். என் மகனும் எல்லோருடனும் அன்புடன் பழகியபோதும், அவர்கள் வீடுகளில் சாப்பிட மாட்டான். ஜெபம், சந்தி செய்வதை தவறாது பின்பற்றினான்.
அவ்வூர் மணியக்காரர் மகள் குழந்தை பெற்று வீடு கூடிய நாள். கவுண்டரம்மாள் வந்து, என் மகனை புண்ணியாவசனத் தண்னீர் தெளிக்கச் சொல்லி அழைத்தார். நான், “பாலுவுக்கு ஜுரமாக இருக்கிறது. அந்த வாத்தியாரையே ஜலம் தெளிக்கச் சொல்லுங்களேன்” என்றேன். அதற்கு அந்த அம்மாள், “ஐயே! அவுரு எங்க வூட்டுலெல்லாம் சாப்புடுறாரு, அவுரு என்ன சுத்தம்? உங்க மகந்தான் பூசை கீசை எல்லாம் செய்யுறாரு கொஞ்சம் அனுப்பி வையுங்க” என்றார். என் மகனை அந்த அம்மாள் அடிக்கடி கேலி செய்வார், “ஏன் வாத்தியாரே, எங்கவூட்டு சாப்பாடுன்னா ஒங்க நெஞ்சுலே எறங்காதா? சாப்புட்டுத்தான் பாருங்களேன்? நாங்களும் உங்களாட்ட மனுஷங்கதான்!”
2) கலையம்புத்தூர் தெருவின் மேற்கு முடிவில் ஒரு சீமை ஓடு வேய்ந்த வீடு. அந்த வீட்டை ஊர்காரர்கள் ‘சாது சமாஜம்' என்பதாக பெயர் சொல்வார்கள். அவ்வீட்டில் நடுத்தர வயதுடைய தம்பதியர் வசித்து வந்தனர். சனிக் கிழமை இரவு ஏழு மணிக்கு மேல் அந்த வீட்டு நடு ஹாலில் அனைவரும் கூடி பஜனை செய்வது வழக்கமாக நடக்கும். சுவரெங்கும் சுவாமி படங்கள் மாட்டப் பட்டிருக்கும். கூட்டம், பாட்டு, பஜனை, ஜெகந்நாதப் பிரதட்சிணம் என்று குத்து விளக்கைக் கைகளில் ஏந்தியபடி பஜனை செய்பவர்கள் வட்டமாக தாள கதியோடு ஆடிப்பாடுதல், கடைசியாக, எல்லோருக்கும் சுண்டல் வினியோகித்தல் எல்லாம் சம்பிரதாயம் தவறாமல் நடக்கும். குரல் வளம் உள்ளவரெல்லோரும் பாடுவார்கள். வேடிக்கை பார்க்க, சுண்டல் பிரசாதம் சாப்பிட என, கூட்டமும் சேரும்.
பத்து வீடு தள்ளி மற்றொரு வீட்டிலும் பஜனை நடக்கும். அங்கு சுவரில் பெரியஅளவில் பாரதியார் படமும், தேசபக்தர்கள் படங்களும் மாட்டியிருக்கும். அந்த வீட்டை ‘பாரதி பஜனை மடம்' என்று சொல்லுவார்கள். தேசபக்தி உள்ள வாலிப, வயோதிகர்களின் கூட்டம் சேரும். தேச பக்தியும், தெய்வ பக்தியும் கலந்த பாரதியாரின் பாடல்கள் உணர்ச்சி பொங்கப் பாடப்படும். இங்கும், சுண்டல் வினியோகம் நடைபெறும். அந்த நேரத்தில் மற்ற எல்லா வீடுகளும் ஜன சந்தடியற்று, அமைதியாகத் தூங்குவதுபோலத் தோற்றமளிக்கும்.
3) என் தாய் மரணப் படுக்கையில் இருந்த சமயத்தில், அண்ணா கேட்டார், “அம்மா, உனக்கு பிராயச்சித்தத்துக்கு ஏற்பாடு பண்ணட்டுமா? (பாவ மன்னிப்பு போன்ற சடங்கு அது)” அம்மா பதில் சொன்னாள், “எனக்கு எதற்கடா பிராயச் சித்தம்? நான் என்னை அறியாமல் உடலால் ஏதேனும் பாபம் செய்திருந்தால் அது நெருப்பில் போடும் போது உடலோடு சேர்ந்து எரிந்து விடும். மனதறிந்து செய்த பாபத்தை அனுபவித்துத்தான் தீரவேண்டும். பிராயச்சித்தம் செய்து ஏமாற்ற முடியாது. உனக்கு சடங்கு செய்வது கௌரவப் பிரச்சினை என்று தோன்றினால் நான் தடுக்கவில்லை.” அண்ணா அம்மாவின் விருப்பத்தை அனுசரித்து பேசாமல் சடங்கை நிறுத்தி விட்டார்.
4) நான் சைதாப்பேட்டையில் சந்துபோன்ற ஒரு வீட்டில் குடியிருந்தேன். ஒரு நாள், வீட்டின் சொந்தக்காரர் வசிக்கும் பகுதியிலிருந்த அடிக்கும் பம்ப்பிலிருந்து குடிஜலம் பிடித்துக் கொண்டிருந்தேன். அந்த வீட்டின் தாழ்வாரப்பகுதியில் குடியிருந்த அம்மாள் தூணில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தார். சுமார் 5-1/2 மணி நேரமான அந்த வேளையில் அந்த அம்மாளின் மறுமகள் -புதிதாக மணமுடித்து கணவன் வீடு வந்திருந்தவள் ஆசிரியையாக வேலை செய்பவள்- வீடுவந்து சேர்ந்தாள். உடனே மாமியார் சொல்கிறார், “காபி கலந்து குடிக்க அவசரப் படாதே, தீபம் வைக்கும் நேரமாகும் முன் வீட்டைப் பெருக்கிவிட்டுப் பிறகு காப்பி குடி.” எனக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அந்த அம்மாள் வீட்டில்தானே இருக்கிறார்? வீடு பெருக்கக் கூடாதா? கணவனோ, மகனோ வேலை முடிந்து வீடு வந்தால் காப்பி கலந்து தருவார்தானே? அந்தப் பெண்ணுக்கு இவர் காப்பி கலந்து தராவிட்டாலும் அவளே செய்து கொள்வதையும் தாமதப்படுத்தும் என்ன குரூர குணம்? பெண்கள் படித்து உத்தியோகம் செய்தாலும் வீட்டுப் பொறுப்பும் விடாதா?
5-(மிளகாய்) அபிஷேகம்
இது ஒரு இருநூறு வருஷத்துக்கு
முந்திய கதை. நாற்பது வயதை கடந்த வேதாம்பாள் என்னும் பெயருடைய ஒரு மாது
இருந்தாள். அவளுடைய கணவன், சற்று அசமஞ்சமாக இருந்து வந்தான். புக்ககத்தில்
மாமியார் கொடுமை கொஞ்சம் அதிகமாக இருந்தது. மைத்துனன் அவர்களுக்குச் சேர
வேண்டிய வயல் நெல்லைக் கொடுக்காமல் சண்டித்தனம் செய்து வந்தான். நான்கு
குழந்தை களோடும், அசட்டு அகமுடையானோடும், துன்புறுத்தும் மாமியாரோடும்,
படாத கஷ்டங்கள் பட்டதால் ஒரு நாள் கிராமத்துப் பெரிய மனிதர்களை எல்லாம்
போய் பார்த்து முறையிட்டாள். பெரிய மனிதர்கள் பஞ்சாயத்துக் கூட்டி, அவளுடைய
மைத்துனனைக் கண்டித்து, அவளுக்கு ஞாயம் கிடைக்கச் செய்தனர்.
‘ஊரைக்
கூட்டி ஞாயம் கேட்கிறயா?' என்று அவளுடைய மாமியார் அவளை அடிக்க, அவளும்
மாமியாரைத் திருப்பி அடிக்க, நடுவில் வந்த அவளுடைய கணவனை மைத்துனன்
முகத்தில் அறைய, கணவனுடைய கண் பழுதாகி விட்டது. வேதாம்பாளுக்குக் கோபமும்,
ஆத்திரமும் அதிகமாகி விட்டது. ‘மள மள' வென்று தன் வீடு சென்று, மிளகாய்
வற்றலை எடுத்து ஜலத்தில் ஊறப் போட்டாள். அதை நன்கு அறைத்துக்கொண்டு ஒரு
பாத்திரத்தில் போட்டு ஜலம் விட்டுக் கரைத்தாள். அதை எடுத்துச் சென்று
வாய்க்கால் மேட்டில் அரச மரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகர் தலையில்
அபிஷேகம் செய்தாள். “ஏ, சண்டாளப் பிள்ளையாரே, உனக்கு எத்தனை குடம் ஜலம்
விட்டு அபிஷேகம் செய்திருப்பேன்? நீ எனக்கு என்ன நல்லது செய்தாய்? குளிரக்
குளிர அபிஷேகத்தை ஏற்றுக்கொண்டு, எனக்கு நீ கொதிக்கக் கொதிக்கத் துன்பங்கள்
தந்தாய். இப்போது, என் கணவனைக் குருடாக்கி விட்டு வேடிக்கை பார்க்கிறாய்.
எரியட்டும், உன் உடலும் நன்றாய் எரியட்டும். நீயும் அவஸ்தைப் படு'' என்று
கூச்சல் போட்டு விட்டு, வாய்க்காலை ஒட்டியிருந்த தோட்டக் கிணற்றில்
குதித்து தற்கொலை செய்து கொண்டாள்.
No comments:
Post a Comment