வேஷம்-சிறுகதை
அது 1942ஆவது வருடம். நான் ஒரு வாடகை வீட்டில் வசிக்க நேர்ந்திருந்தது. சொந்த வீடு இருந்தும் சகோதரர்களுக்குள் சொத்துப் பிரித்தலான பிரச்சினை. பக்கத்து வீட்டில் மெலிந்த, அழகான ஒரு பெண் தன் மூன்று வயதுப் பெண் குழந்தையோடு வசித்து வந்தாள். அவள் கணவன் சப்ளையராக ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்தான். நாட்கூலி.(இரண்டு ரூபாய் என்று நினைக்கிறேன்). அதிலும் கூட அவள் காலோ, அறையோ உண்டியலில் போட்டு விட்டு மிகுதிப்பணத்தில் தான் குடும்பச் செலவு செய்வாள் என்பதாக நான் குடிவந்திருந்த வீட்டின் சொந்தக்காரியும் தாழ் வாரப் பகுதியில் வசிப்பவளுமான பொன்னம்மாள் சொன்னாள். அந்தப் பெண்ணின் கணவன் காலை ஐந்து மணிக்குக் கடைக்குச் சென்றால் இரவு மணி பத்துக்கு மேல் தான் வீடு திரும்புவான். அந்தப் பெண் அடிக்கடி இங்கு வந்து வீட்டுக்காரப் பென்மணியுடன் பேசிக் கொண்டிருப்பாள். தீபாவளி வந்தது. அவள் தனது கணவனுக்குக் கடையில் கொடுத்த சிறு போனஸ் பணத்தில் துணி மணிகள் வாங்கியதை கணவனுக்கு, தனக்கு, குழந்தைக்கு, மமியாருக்கு என்று சொல்லியபடி எங்களிடம் கொண்டுவந்து காட்டினாள்.
“உன் மாமியார் எங்கிருக்கிறார்? மைத்துனரிடமா?” என்று கேட்டேன்.
“இல்லை, என் வீட்டுக்காரர் ஒரே மகன். எங்கள் சொந்தக்காரர் வீட்டில் அவ்ர்களுக்கு உதவியாக இருந்து வருகிறார். தீபாவளிக்கு இங்கு வருவார்கள். ஒரு வாரம் போல் தங்கியிருப்பார்கள்” என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.
மறு நாள் அவள் சிறிய கையடக்கமான தாஜ்மஹால் படம் போட்ட மூடியுடைய ஒரு பெட்டியை வீட்டுக்கார அம்மாளிடம் கொடுத்தபடி அவளிடம் தணிந்த குரலில் ஏதோ சொல்லிவிட்டுச் செல்வதை நான் என் அறையில் இருந்தபடி கவனித்தேன்.
ஊரிலிருந்து அந்தப் பெண்ணின் மாமியார் வந்திருந்தார். அமைதியான, நடுத்தர வயதுடையவராக இருந்தார். தானும் தீபாவளிக்காக எல்லோருக்கும் புத்தாடைகள் எடுத்து வந்திருந்தார். அவை சற்று உயர்ந்த ரகம். குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்தார். மறுமகளை உட்காரவைத்து விதவிதமாகச் சமைத்துப் போட்டார். தீபாவளிக்கு மணக்க மணக்க நெய் இனிப்புகள் செய்தார். இருவரும் ஓயாது பேசி மகிழ்ந்தனர்.
தீபாவளி கழிந்த மூன்றாம் நாள் அந்த அம்மாள் ஊர் செல்வதாக இருந்தது. ஆனால் அன்று அவருக்கு ஜுரம் வந்துவிட்டது. அரசாங்க வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்றனர். மூன்று வாரம் ஆகியும் காய்ச்சல் விட வில்லை. தனியார் வைத்தியசாலையில் காட்ட வசதி அவர்களுக்கு இல்லை. ஆனால் அப்போதெல்லாம் தர்மாஸ்பத்திரியானாலும் சிரத்தையுடன் கவனித்து வைத்தியம் செய்வார்கள். அந்த அம்மாளுக்கு ஊசியில் செலுத்தும் மருந்து தங்களிடம் இல்லை என்றும் வெளியிலிருந்து வாங்கி வரும்படியும் வைத்தியர் சொன்னதும் இவர்கள் கல்ங்கிப் போய்வ்ட்டனர்.
“போனஸ் பணம், மாமியார் கொண்டுவந்த பணம், என்று எல்லாம் செலவாகி விட்டது. இப்போது யாரைப் போய்க் கேட்பது? இவருக்கும் எனக்கும் கடன் கேட்டே பழக்கமில்லை” என்று எரிச்சல் கலந்தபடி அவள் பொன்னம்மாளிடம் கூறிக் கொண்டிருந்தாள். எப்படியோ மருந்து வாங்கி, ஊசி போட்டு, ஒரு வழியாக உடல் குணமாகி, வீடு மீண்டார் அந்தப் பெண்மணி.
ஊருக்குப் போகும் முன்தினம் மகள், குழந்தையுடன் சினிமா சென்றிருந்த சமயம் அந்த அம்மாள் எங்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் சொன்னார், “நான் வருடம் முழுவதும் அவர்கள் வீட்டில் உழைத்து ஓடாகிச் சம்பாதித்த பணம் துணி வாங்கியது போக முழுவதையும் இவளிடம்தான் கொடுக்கிறேன். எப்போதும் தீபாவளி முடிந்த இரண்டொரு நாட்களில் ஊர் திரும்பி விடுவேன். மாட்டுப் பெண்ணும் நல்லபடியாக நடந்து கொள்வாள். இந்தத் தடவை உடம்புக்கு வந்துவிட்டது. இவளுக்கு என்ன எரிச்சல்? சுடுசொல் எப்படி வெளிப்பட்டது தெரியுமா? கஞ்சிக்குப் பால் விடக்கூட மனதாக வில்லை. நான் இனி இங்கு எக்காரணம் பற்றியும் வரப்போவதில்லை. நான் வேலை செய்யும் இடத்தில் தலைவலி என்றால் கூட என்னை வேலை செய்ய விட மாட்டார்கள். நன்றாய் கவனித்துக்கொள்வார்கள்.”
மாமியார் ஊர் சென்ற மறுநாள் மருமகள் பொன்னம்மாளிடமிருந்து உண்டியல் பெட்டியை வாங்கிச் சென்றாள்.
No comments:
Post a Comment