Monday, April 6, 2009

தாய்மை

வேதம் மாமிக்கு தற்சமயம் வயது அறுபதுக்குள் இருக்கும் நான்கு குழந்தைகள் பெற்றாள் என்றாலும், ஒரு மகன்தான் உயிரோடு இருந்தான். மற்ற மூன்று குழந்தைகளும் இரண்டு வயதிற்குள்ளாகவே வயிற்றில் கட்டி வளரும் நோய் வந்து மரணமடைந்து விட்டன. அதனால் குழந்தைகள் பெற்று வளர்ப்பது என்பதே ஒரு பயங்கரமான செயலாக அவள் உணர்ந்தாள். எந்த ஒன்றுக்கும் குற்றத்தை அவள் மேல் சுமத்தும் கணவன். அதனால் எது செய்தால் தவறாகி விடுமோ என்ற தயக்கம் காரணமாகத் தீர்மானம் செய்ய முடியாத ஒரு மனோ நிலை.


நல்ல வேளையாகக் குழந்தை மணி அதிகம் நோய் நொடியின்றி வளரலானான். கணவனுடைய குறை கூறும் சுபாவமும் குறையலாயிற்று. இந்த சமயத்தில் கணவன் நோய்வாய்ப்பட்டு மரணம் அடையத் தவித்துப் போனாள் வேதம் மாமி. குழந்தையோடு பிறந்தகத்தில் தஞ்சம் அடைந்தாள். கணவன் மூலம் கொஞ்சம் நிலபுலங்களும், ரொக்கப் பணமும் அவளுக்குக் கிடைத்ததால் சிரமம் இன்றி காலம் தள்ள முடிந்தது. தாய், அண்ணன், அண்ணன் குடும்பம் இவைகளோடு அவள் குடும்பமும் கலந்தது. அண்ணன் மேற் பார்வையில் பிள்ளை நிறையப் படித்தான். உத்தியோகத்தில் அமர்ந்தான்.
பிள்ளைக்கு வேலை கிடைத்ததும், அவள் தனிக் குடித்தனம் செய்ய ஆரம்பித்தாள். மணியின் ஒவ்வொரு செயலையும் ரசித்தாள். அன்பைப் பொழிந்தாள். மணியும் தாய் மேல் அளவற்ற பாசம் வைத்தான்.
வயதுக்கு ஏற்ப இப்பொழுதெல்லாம் அவன் வாலிபப் பெண்களைக் கண்டால் பரவசப் பட்டுப் போவதும், அவர்களோடு பேச, பழக விழைவதுமான நிலையில் வேதத்துக்கு தன்னை மகன் அலட்சியப் படுத்துகிறானோ என்று தோன்றலாயிற்று. வழி தவறி விடுவானோ என்றும் அஞ்சலானாள். இது பற்றி அண்ணனிடம் லேசாக பிரஸ்தாபித்தாள். அண்ணன் கல கலவென சிரித்து விட்டுச் சொன்னார், 'அவனுக்கு ஒரு நல்ல பெண் பார்த்துக் கல்யாணம் முடித்து விட்டால் போயிற்று. வயசுக் கோளாறு. அப்படித்தான் இருப்பான்'.
மகனுக்குக் கல்யாணம், மருமகள் வரவு, பிள்ளை அவளிடம் சாய்வது, தான் இரண்டாம் பட்சமாகிப் போவது, என்பதாக நினைக்கும் போது மனம் மிகவும் சங்கடப் பட்டது। என்றாலும், இவை எல்லாம் நடந்துதானே ஆக வேண்டும்? என்று சமாதானப் படுத்திக்கொண்டு அண்ணனிடம் பெண் பார்க்கும் படி சொல்லி, மகனின் ஜாதகத்தைக் கொடுத்தாள்।அழகும், குணவதியுமான லீலா என்ற பெண் மருமகளாக வாய்த்தாள். சகோதரியின் மனப் போக்கை அறிந்த அண்ணன், தன் மருமகனைத் தனியே அழைத்து, சில புத்திமதிகள் சொல்லி ஜாக்கிரதையாக நடந்து கொள்ளும்படி எச்சரித்திருந்ததால், மகன் தாயிடம் அளவுக்கு அதிகமான பாசத்தைக் காட்டியும், மனைவியை ரொம்பக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல பாவனை காட்டியும் வந்தான். தனித்திருக்கும் போது தன் கெடுபிடியெல்லாம் தாயாருக்காக நடிப்பபு என்று லீலாவிடம் சொல்லி இருந்ததால், அவளும் மிகவும் பயந்த சுபாவம் உள்ளவளாகக் காட்டிக் கொண்டாள்.

இந்நிலை வேதத்துக்கு மருமகளைக் காரணமின்றியே குறை கூறவும், சிடு சிடுக்கவுமான சுபாவத்தைக் கொடுத்தது। தன் செயல் அவளுக்கே தவறு என்று தெரிந்ததால், அவளுடைய குற்றமுள்ள நெஞ்சு, தன் மருமகள் தன்னைப் பற்றி புருஷனிடம் இரவு படுத்த பிறகு ஏதவது குறை கூறுவாளோ எனும் அச்சத்தை உண்டாக்கியது. விளைவு, வேதம் இரவில் அவர்கள் படுத்திருக்கும் அறையின் மூடிய கதவின் மர வாசல்படியில் தலையை வைத்துப் படுத்தபடியே தம்பதிகளின் பேச்சை ஒட்டுக் கேட்க வைத்தது. இவளைப் பற்றி குறைகள் காதில் விழுந்ததோ விழவில்லையோ, அவர்கள் சரச சல்லாப ஓசைகளைக் கேட்டதென்னவோ நிச்சயம்.

'பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்' என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு நாள் வேதம் அங்கு படுத்தபடியே தன்னை அறியாமல் தூங்கிப் போய் விட்டாள். சிறு நீர் கழிக்க எழுந்து வந்து கதவைத் திறந்த மருமகள் தன் மாமியாரைக் கண்டு திடுக்கிட்டாள். கணவனை எழுப்பிக் காண்பித்தாள். தாயின் இந்தச் செய்கை அவ்விருவருக்கும் திகைப்பையும், வெறுப்பையும் உண்டாக்கியது. மகன் தன் தாயாரை எழுப்பி "ஏன் இங்கு வந்து படுத்திருக்கிறாய்?" என்று கேட்டான். வேதத்துக்குக் கையும் களவுமாகத் தான் பிடிபட்டுவிட்டோம் என்னும் உண்மை புலப்பட்டது. சட்டென்று சமாளித்துக் கொண்டு "ஏனோ, எனக்கு பயமாக இருந்ததுடா, அதனால்தான் இங்கு வந்து படுத்தேன்" என்றள். "பயமாக இருந்தால் கதவைத் தட்டி என்னை எழுப்புவதுதானே" என்று கேட்டுவிட்டு, தங்கள் இருவரின் படுக்கைகளையும் தாயின் படுக்கைக்குப் பக்கத்தில் விரித்துக் கொண்டு தாயை ஆதரவாகக் கட்டிக் கொண்டு மகன் தூங்க வைத்தான்। வேதம் மனதுக்குள் மிகவும் அவமானமாக உணர்ந்தாள்.

மறுநாள், மகன் மூலம் மாமாவிற்கு எல்லா விஷயங்களும் தெரிந்தது. அதன் காரணமும் விளங்கியது. அன்று மாலை, தன் தாயை அழைத்துக் கொண்டு தங்கையின் வீட்டிற்கு வந்தார். "வேதம், நான் எல்லாவற்றையும் கேள்விப் பட்டேன். வாஸ்தவம்தான். நீ தனித்துப் படுத்துத் தூங்கியே பழக்கப் படாதவள். இனி நம் அம்மா உன்னுடனேயே, உனக்குத் துணையாக இருப்பாள். இனி நீ அவர்கள் படுக்கும் அறையின் படியில் தலைவைத்துப் படுக்க வேண்டாம்" என்று சொல்லிவிட்டுச் சென்றார். வேதம் வாயடைத்து நின்று கொண்டிருந்தாள்.

Wednesday, April 1, 2009

கவிதைகள்

அகலிகை

பிரஸவிக்கும் பசுவை வலம்வந்து
அரசனின் நிபந்தனைக்கேற்ப
அதற்குப் பொருள் கற்பித்து
அகலிகையை மணந்தான் முனிவன்;
முனிசாபத்துக்கு அஞ்சிய அரசன்
மணமுடித்துக் கொடுத்தான் மகளை.
உள்ளமும் விருப்பமும்
பெண்களுக்கும் உண்டு என்ற
எண்ணமே இருவருக்கும் இல்லை!



ஆசை கருகி ஆஸ்ரம வாழ்க்கையும்
அகமுடையான் சேவையும்
அகலிகைக்கு அமைந்தது- நிர்பந்தமாக;
ஆனாலும் என்ன?
அவள் அறியாக் குற்றத்துக்கு
கல்லாய் சபிக்கப் பட்டாள்.
+++++++++++++++++++++++++++++++++++









சீதையின் புலம்பல்

வில் வளைக்கும் மன்னருக்கே பெண் தருவேன் நான்என்று
சொல் முழக்கி சுயம்வரம் வைத்தார் தந்தை;
என் வயதோ பன்னிரெண்டு
என்ன கண்டேன் மணம் பற்றி?

ராமனைக் கரம்பற்றி ஸாகேதம் சென்றது
நான் ஒருத்தி மட்டுமா
மற்ற மூன்று சகோதரிகளும் கூட
ஒட்டுமொத்தமாய் தசரதபுத்திரர்களோடு திருமணம்.

மாமியார்களின் மௌனயுத்தம்
மாமனாருக்கோ கைகேயி இஷ்டம்
வனவாசம் சிறைவாசம்
என் வாழ்வே சர்வ நாசம்
என் தங்கை ஊர்மிளைதான்
என்ன சுகப்பட்டாள் கணவனிடம்
கணவன் வனம் போதல் அறிந்தவுடன் அவள் மூர்ச்சை
நெடுந்தூக்க வியாதியிலே
நினைவின்றிப் பிணம் போல
ஆண்டு பல நகர்ந்தாலும்
அவள் உறக்கம் தெளியவில்லை.


***********************************************

Thursday, November 8, 2007

06-மனக் கருவூலத்திலிருந்து

கால மாற்றம்

ஒரு எழுபது வருடங்களுக்கு முன்னால், இருந்த குடும்பஸ்தர் களுக்கு எட்டு, பத்து என்று குழந்தைகள் பிறந்தன. காரணம் குடும்பக் கட்டுப்பாட்டு முறை தெரியாது என்பது மட்டும் அல்ல. அக்காலத்திலும் அதற்கு சில வேறு விதமான முறைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால், பொதுவாக அந்தக்கால மக்கள் கடவுளையும், பாப புண்ணியத்தையும் நம்பினார்கள். கருக் கலைப்பு மஹா பாபம் என்று கருதினார்கள். ஆனால், செயலும் விளைவும் தவிர்க்க முடியாதது. நமக்கு முன்னோர்கள் விதித்த ஒழுக்க நெரியும், மனக் கட்டுப்பாடும் இல்லாத போது, விளைவை அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்ற நம்பிக்கையோடு, வறுமையிலும்கூட சகிப்புத்தன்மையோடு குழந்தைகளை வளர்த்தினார்கள்.
அந்தக் காலத்தில் ஏதோ ஒரு பத்திரிகையில் ஒரு பாட்டு, ஓகாதலுக்கு வழிவைத்து கருப்பத்துக்கு தடை வைத்துஔ என்பதான தலைப்பில். குழந்தைகள் பெறாமல் மனம்போல் உடலுறவுக்கு வழி கண்டுபிடிக்க வேண்டும் என்னும் பொருள் பற்றி எழுதியிருந்த பாட்டு அது. அன்று அந்தப் பாட்டை எழுதியவர் மீது எனக்கு அசாத்தியமான கோபமும் வெறுப்பும் உண்டானது.
ஆனால், எங்களைப் போன்றோரின் எண்ணத்தால் இன்று நம்நாட்டில் தாங்கமுடியாத ஜனத்தொகை, வறுமை காரணமாக இருக்க நிழல் வேண்டி ஏரிகளில் எல்லாம் குடிசை. அந்த மக்களின்மீது கொஞ்சம் பரிதாபமும், கொஞ்சம் பணம், ஓட்டு முதலிய ஆசையும் கொண்டு அவர்களுக்கு அதற்கு அனுமதியும், நிலப்பட்டாவும் மின்சார வசதியும் அளித்துவிட்டு, இன்று அசுரத் தனமாக வீடுகளை இடித்தல். இருக்க இடமில்லை, குடிக்க நீர் இல்லை, உண்ண உணவில்லை என்று பாமர மக்களின் தவிப்பு.
அன்று கருத்தடையைப் பாபமாகக் கருதிய என் போன்றவர்களே இன்று பேரன் பேத்திகளை முழுமனதோடு தடுத்துக்கொள்ள புத்தி சொல்கிறோம்.
இதே போல்தான், கால மாற்றத்தை உணராமல் கற்பு என்ற போர்வைக் குள் பெண்களை மூடிவைத்து ஆண்களின் சீக்கை வாங்கி அல்லலுர வைப்பதும். ஆண்கள் ஒழுக்கத்துக்குக் கட்டுப்பட மாட்டார்கள் என்னும்போது, பெண்கள் தடுப்பு செய்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும். இதில், கன்னியா சம்சாரியா என்னும் கேள்விக்கே இடமில்லை. சூழ்நிலை பாதகமாக இருந்தால் தற்காப்பு செய்துகொள்வது தப்பல்ல.
 முப்பது வயதிற்கு மேலும் முதிர் கன்னியாக வாழும் அவலம் இன்று பெண்களுக்கு வாய்த்திருக்கிறது. இந்நிலையில், உத்தியோகம் வேறு பார்க்க நேர்கிறது.

05-மனக்கருவூலத்திலிருந்து

முதுமை

'தாயும் பிள்ளையும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறு' என்பது பழ மொழி. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ரத்த பாசமும் அன்பும் உண்டுதான் என்றாலும், அதைவிடச் சற்று தூக்கலானதுதான் தன் நலன் பேணல். ஒவ்வொரு ஜீவனும் தன் வாழ்வின் பொருட்டுத்தான் உலகில் இயங்குகிறது. தனக்கு மிஞ்சிய பிறகுதான் தான தருமம் செய்யமுடியும். ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் திருமணம், குழந்தைப்பேறு, அவர்களுக்குச் செய்யவேண்டிய வளர்த்தல் படிப் பித்தல் போன்ற கடமைகள் எல்லாம் இயற்கையாக இருக்கிறது. ஆனால், அவர்கள் தமது பெற்றோருக்கு முதுமையில் செய்தல் என்பது கடமைக்காகவே அன்றி இயற்கையானது அல்ல என்றே சொல்லத் தோன்றுகிறது. உலகில் அனைத்து ஜீவராசிகளும் வளர்ந்தபின் தனித்துப் போவதுதான் இயற்கையாக உள்ளது.
உண்மையாகச் சிந்திப்போமானால், நம் குழந்தைகளை நாம் வளர்த்தது போல, அவர்கள் தாங்கள் பெற்றவைகளை வளர்த்து ஆளாக்க நினைப்பதுதான் ஞாயம். அதுதான் இயற்கை. ஆனால், மனித குலம் தனக்கென சில விதிமுறை களை வகுத்துக் கொண்டு, தன்னுடையது பிறருடையது என்னும் பாகுபாட்டை உண்டாக்கிக் கொண்டு செயல்படுவதால் ஏழை, செல்வந்தர் என்பன போன்ற பல இருமைகளை ஏற்றுச் செயல்படத் தேவைப்படுகிறது. பொருளாதார வசதி உள்ள சிலர் தமது முதிய காலத்தில் தாம் பெற்ற மக்களின் கையை எதிர் பார்க்காதவர்களாக இருக்க முடிகிறது. பலரால் அவ்வாறு இருக்க முடிவதில்லை.

வாய்விட்டுச் சொல்ல மனித நாகரீகம் இடம் தராவிட்டாலும் மனதில் சற்று பாரம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் பொருளாதார உரிமையற்ற வயோதிகப் பெண்களுக்கு இந்த நிலை மிகுந்த சிரமத்தைக் கொடுக்கிறது. முன் அறிமுகமாகாத ஆணாக இருந்தாலும் மணமானபின்பு கணவன் என்ற உரிமையில் தனது சம்பாத்யத்தை செலவு செய்வதில் சிரமம் இருப்பதில்லை. ஆனால், பத்து மாதம் சுமந்து பெற்று, வளர்த்தியிருந்தாலும் ஒரு தாய்க்கு மகனின் வருமானம் அன்னியமானதே. அதில் உரிமை பாராட்ட முடியாது. அதேபோல, குடும்பத்தில் மூத்தவளாக அவர்களோடு வாழ்ந்துவந்தாலும் சற்று அன்னியமாகி விடுகிறாள். விவேகியாக இருந்தால் உரசல் ஓசைப்படுத்துவது இல்லை. சராசரியான இடங்களில் ஒலியெழுப்பி அபஸ்வரத்தை உண்டாக்கி விடுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளிலிருந்து தப்பிப்பதற்கு அந்த நபர் கலை, இலக்கியம், இசை, ஆன்மீகம் போன்ற எதிலாவது ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டிருந்தால் நெருக்கடியைச் சமாளிக்க உதவிகரமாக இருக்கிறது. சராசரியாக வாழப் பழக்கப் பட்டவர்கள் அந்தத் தருணங்களில் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். தன்னை ஒரு அகதிபோல் உணர்ந்து அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.

இக்கால தர்மம் பணம் தேடல், சுயநலம் பேணல், என்னும் ஒரு சூழலில் சிக்குண்டு இருக்கிறது. மனித மனங்கள் இயந்திரத் தனமாக மாறி வருகின்றன. சூழ்நிலைகளின் கட்டாயத்தினால் பெண்களும் படிப்பையும் சுய சம்பாத்யத்தையும் விரும்பு கிறார்கள். ஆனாலும் இல்லத்தை பராமரிப்பது, வீட்டுக் கடமைகள் போன்றவற்றிலிருந்து விடுபடமுடிவதில்லை. விடிவதற்கு முன் எழுந்து, 'கிரைண்டர்' போன்ற பல மின் கருவிகளின் உதவியுடன் தானும் ஒரு இயந்திரமாக மாறி செயல்பட்டால்தான் அவளால் காரியாலயம் செல்லமுடியும் என்ற சூழ்நிலையில், மனதில் அமைதி, நேசம், அன்பு எல்லாம் வெளிப்பட முடியாமல் போய் விடுகிறது. ஆணும் பெண்னும் ஆய்ந்து ஓய்ந்து காரியாலயத் திலிருந்து திரும்பும் நேரத்தில் அவர்களுக்குள் சோர்வும் அலுப்பும் இருப்பதால் வீடு மௌனத்தில் ஆழ்ந்து கலகலப்பு இன்றி தோற்றமளிக்கிறது.

இதுபோன்ற பல மாற்றங்களால்தான் இந்தியாவிலும் முதியோர் இல்லம் பெருகி வருகிறது.

Thursday, October 18, 2007

04-மனக் கருவூலத்திலிருந்து

வீடு பெறுதல்
-----------------
வெட்ட வெளியில் வெறும் தரையில் மனிதன் வாழமுடியாது. வெயில், மழை, குளிர் போன்றவை களிலிருந்து தப்ப வீடு அவசியம். அந்த வீட்டை வெட்டவெளியில் தரையின் மீதுதான் கட்டியாக வேண்டும். சுவர் எழுப்பிக் கூரை வேய்ந்தாலும் அவைகளின்மீது வாழமுடியாது. அவற்றின் உள்ளே உள்ள தரைதான் உபயோகமாக அமையும். பின்னப்படாத இடம் மைதானம்; பின்னப் பட்ட இடம் வீடு. ஆக, பயன்படுதல் என்பது தரைதான்.
வெற்று வெளி போன்றது பரமாத்மா. ஏகமானது. ஐம்பூதத்தாலான உடலுக்குள் பின்னப் பட்டிருப்பது ஜீவாத்மா. ஜீவனற்ற உடல் செயலற்ற பிணம். மண்ணாலான பூமி ஒன்றேயானாலும் அதன் மண் துகள்களை அள்ளலாம், மறுபடி தரையில் போடலாம். சத்தியமான "நான்ஔ என்னும் ஒன்றுதான் பரமாத்மா. அது உடலால் பின்னப்படும்போது "ஜீவன்ஔ என்னும் பெயர் பெறுகிறது. உடல் வீழும்போது பரமனில் கலக்கிறது. மனதில் பதிந்துள்ள எண்ணப் பதிவுகள் மறு உடலில் புகுகிறது. செயலும் விளைவும் தொடர் கின்றன. ஜனன மரணம் அமைகிறது.
இளநீராக இருக்கும்போது ஓட்டோடு கலந்து ஒட்டியிருந்த தேங்காய் முற்றிக் கொப்பரையாக மாறிவிட்ட பிறகு ஓட்டிலிருந்து பிரிபட்டு விடுகிறது. ஓடு உடைபட்ட கொப்பரையை முளைக்க வைக்க முடியாது. அதுபோலப் பிறவி கள் மூலம் முற்றிப் பக்குவப்பட்ட ஜீவன் மரணத்துக்குப் பின் மறு பிறப்பு எய்துவதில்லை. இளநி கொப்பரையாவதும், ஜீவன் பரமன் ஆவதும் இயற்கை செய்விக்கும் கூத்து. அதற்கென்று ஒரு கால அளவு இருக்கிறது. இதை மாற்ற ஈசனாலும் முடியாது. பக்தனாகவே இருந்து கடவுளிடம் மோக்ஷம் தா என்று யாசித்தாலும் உரிய காலம் வரும்வரை ஒன்றும் நடக்காது.
ஒரு சிஸுவுக்கு வயது ஏற ஏற உடல் மாற்றம் வாலிபம், வயோதிகம் என்று எல்லாம் இயற்கையாக நிகழ்கிறது. உடல் வளர்ச்சிபெற பசி என்ற ஒன்று தோன்றி சாப்பிடச் செய்கிறது. பசித்த குழந்தைக்குப் பெற்றோர் அன்னம் இடுவ தோடு அவர்கள் கடமை தீர்ந்து விடுகிறது. உடலை இயற்கை வளர்க் கிறது. அதுபோல ஜீவ வளர்ச்சியிலும் பக்தி, அறிவு, ஆராய்ச்சி என்பன போன்ற பசி ஏற்படுகிறது. அப்போது நமக்குள் நாம் அறியாத ஒன்று இருந்து நமக்குப் பெற்றோர் போல வழிகாட்டுகிறது. இதிலும் இயற்கைதான் நம்மைப் பக்குவப் படுத்துகிறது.
ஒரு தானியத்தை வறுத்துப் பொடித்து உணவாக மாற்றுவதென்றால், முதலில் அடுப்பை எரியவிட்டு, வாணலியை அதன்மேல் ஏற்றி, தானியத்தை வாணலியில் இட்டு, ஓயாமல் அதைச் சட்டுவத்தால் கிளறிவிடல் தேவைப் படுகிறது. அப்படிச் செய்யாவிட்டால் அடிப் பகுதி கருகியும், மேல்பகுதி வறு படாமலும் வீணாகிவிடும். இதேபோல்தான் இயற்கை நம்மை இன்ப துன்பங் களில் புறட்டிப் பக்குவப் படுத்துகிறது. இயற்கையானது பகல்-இரவு, சுகம்-துக்கம் போன்று எல்லாவற்றிலும் இருமையை வைத்து எதிர்விளைவுகளை உண்டாக்கி பக்குவப்படுத்துகிறது. நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லையே ஒழிய வாழ்க்கையின் விளைவுகள் எல்லாமே ஏதோ ஒரு காரண காரியத் தொடர்ச்சியாகத்தான் நடந்துவருகிறது
.

உடை

உணவு இல்லாமல் இரண்டொரு நாள் வாழ்ந்துவிட முடியும்; ஆனால் உடை அணியாமல் இருக்க முடியாது. வயதுக்கு ஏற்பவும், கால நிலைகளுக்கு ஏற்பவும் உடை தயார்செய்து அணிகிறோம். குழந்தைகளுக்கும் அணிவிக் கிறோம். உடல் வளர்ச்சி அடையும்போது உடை கிழியாதபோதும் அதை ஒதுக்கி விட்டு வேறு வாங்கி அணிகிறோம். சரீரத்தில் அணியும் உடைக்கு ஒப்பானது தான் இந்த சரீரமெனும் உடையும் என்று நம் முன்னோர்கள் விளக்குகின்றனர். உடல் என்பது ஜீவன் அணிந்திருக்கும் உடைதான். ஜீவனும் தன் சரீரமாகிய உடையை அடிக்கடி மாற்றிக்கொள்கிறது.
சிசு ஒன்று வளர வளர அதன் உடையும் அளவிலும் தரத்திலும் மாற்ற மடைகிறது. அதே போல, மனித ஜீவனும் அறிவிலும் அனுபவத்திலும் வளர்ச்சி அடையும்போது உடலை மாற்றிக்கொள்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நாம் அறியமுடியாதபடி ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு பகலும் உடல் வளர்ச்சி அடைகிறது. நாம் பெற்றுப் பெயரிட்ட குழந்தை வருடங்கள் செல்லச் செல்ல வளர்ந்து வாலிபமாகிறது. சிசுவான நம் குழந்தைதான் அது என்று உணர்ந்து கொள்கிறோமே ஒழிய சிசு தோற்றம் காணாமற் போய்விடுகிறது.
உயிர்களுக்கு உறக்கம் என்பது இரவில் தினசரி நிகழ்கிறது. மரணமும் ஒரு உறக்கம்தான். உயிர் வேறு உடல் பெற்றுக் கொள்கிறது. சிசு வளர்ச்சி புரிந்து கொள்ளும் மாற்றம். உயிர் வளர்ச்சி என்பது புரிந்துகொள்ள முடியாத ஒரு மாற்றம். இந்த வளர்ச்சி புழு, பூச்சி என்னும் உயிர்களாக ஆரம்பித்து, மன, அறிவு வளர்ந்து வளர்ந்து (பல ஜன்மத் தொடரில்) பிரும்ம நிலை வரையிலும் உயர்வு அடைவதாக நம் முன்னோர் சொல்கிறார்கள்.
1) தூக்கம் விழிப்புத் தொடரின் மூலம் உடலும் மனமும் வளர்ச்சி அடைகிறது.
2) மரண ஜனனத் தொடர்ச்சி மூலம் மனமும் அறிவும் வளர்ச்சி அடைகிறது.
3) அதன்பிறகு அறிவு எல்லையற்றதாக உயரும்போது மனம் நாசம் அடைகிறது.
ஆக, காற்புள்ளி, அரைப்புள்ளி, முற்ருப் புள்ளியாகத் தொடர்ந்து கதைகள் முடிவடைந்து விடுவதுபோல, தூக்கம் என்ற அரைப்புள்ளியும், மரணம் என்னும் முற்றுப் புள்ளியும் மோக்ஷம் அல்லது விடுதலை என்னும் முடிவில் கொண்டு போய் விடுகிறது.

Tuesday, October 16, 2007

03-மனக் கருவூலத்திலிருந்து

சாக்ஷி
ஒரு ஊரில் ஒரு கோமுட்டி செட்டி இருந்தான். அவன் மிகவும் நேர்மையான வன். திருப்பதி வெங்கடாசலபதியிடம் பக்தி கொண்டவன். அவனுக்கு ஒரு முறை கொஞ்சம் பணத் தேவை உண்டாயிற்று. அந்த ஊரில் வட்டிக்குப் பணம் கொடுப்பவனிடம் கடன் வாங்கினான். கடன் வாங்கும் போது அங்கு ஒருவன் சாக்ஷியாக நின்றிருந்தான். சில மாதங்களில் அவன் வாங்கிய கடனைத் திருப்பி அடைத்துவிட்டான். ஆனால் அப்போதும் சாக்ஷி வைத்துக் கொள்ளவேண்டும் என்பது அவனுக்குத் தோன்றவில்லை. கடன் கொடுத்தவன் அதைப் பயன்படுத்திக் கொண்டான். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து விட்டான்.
செட்டி அதிர்ந்து போனான். நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. கடன் கொடுத்ததை தக்க சாக்ஷியோடு உறுதிப்படுத்தினான் வட்டிக் கடைக்காரன். செட்டியை நீதிபதி விசாரித்தபோது அவன் அழுதுகொண்டே கடனைத் திருப்பிச் செலுத்தி விட்டதாகச் சொன்னான். அது உண்மையாக இருக்கக்கூடும் என்றே நீதிபதிக்குத் தோன்றியது. அவர் செட்டியிடம் கேட்டார், "நீர் கடனைத் திருப்பிக் கொடுத்தபோது அங்கு யாராவது சாக்ஷியாக இருந்தார்களா?" செட்டி, "சாக்ஷியா? வெங்கடாசலபதிதான் சாக்ஷி" என்று கண்ணீர் விட்டபடி கூறினான்
கோர்ட்டார் அது ஒரு மனிதன் என்று எண்ணிவிட்டார். உடனே 'வெங்கடா சலபதி!' என்று மூன்று முறை உரத்த குரலில் அழைக்கப் பட்டது. ஒரு உயரமான மனிதன் நெற்றியில் பெரிய நாமத்தோடும், பஞ்சகச்ச வேட்டி யோடும், மேலே மஞ்சள் அங்கவஸ்திரதோடும் சாக்ஷிக் கூண்டில் வந்து நின்றான். அவனைப் பார்த்த செட்டிக்கு ஆச்சர்யமாக இருந்தது. அந்த மனிதனை செட்டி இது வரை பார்த்ததே இல்லை. செட்டி கடனைத் திருப்பிக் கொடுத்தபோது தான் சாக்ஷியாக அங்கு இருந்ததாக அவன் சொல்லிவிட்டு கூண்டைவிட்டு அகன்று போனான்.
தீர்ப்பு செட்டி பக்கம் ஆனது. நீதி மன்றத்தை விட்டு வெளியில் வந்த செட்டி எங்கு தேடியும் தனக்கு சாக்ஷி சொன்ன மனிதனை கண்டுபிடிக்க முடியவில்லை.
வேண்டுதல்
----------------
தர்மசீலை என்று ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு அன்பான நல்ல கணவனும், தரவான மாமன் மாமியும், வளமான வாழ்வும் அமைந்திருந்தன. அவர்கள் திருப்பதியில் வசித்து வந்தனர். ஆனால் வருடங்கள் பல ஆன போதும் அவளுக்குப் பிள்ளைப் பாக்கியம் கிடைக்க வில்லை. எத்தனையோ வேண்டுதல்கள், மருந்து மாத்திரைகள் என்று செலவு செய்தும் பலனில்லை.
நாட்கள் செல்லச் செல்ல கணவனின் அன்பும் மற்றவரின் ஆதரவும் குறையலாயின. அவளை மலடி என குறை சொல்லத் தொடங்கி விட்டனர். இந்த 'மலடி' என்ற சொல் அவளை மிகவும் பாதித்துவிட்டது. அவள் மிகவும் உருக்கமாக "வெங்கடாசலபதியே என் மலட்டுக்குறை தீரும்படி எனக்கு ஒரு குழந்தையைக் கொடுத்து அருள். எனக்கு குழந்தையைக் கொஞ்சும் பாக்கியம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அந்தக் குழந்தையை உன் தேர் வீதியில் பவனி வரும்போது தேர்சக்கரத்தின் முன்னால் பலி கொடுத்துவிடுகிறேன்" என்று வேண்டிக் கொண்டாள்.
விரைவில் அவள் கர்ப்பம் தரித்தாள். வீட்டில் அவளுக்கு ஏக உபசரிப்பு, மரியாதை. அவளும் அதீதமான மகிழ்ச்சியில் இருந்தாள். தன் பிரார்த்தனை பற்றி அவள் பெரிதாக நினைக்க வில்லை. அனேகமாக மறந்தேபோனாள். உரிய காலத்தில் அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு ஆறு அல்லது ஏழு மாதங்கள் ஆன சமயம் தேர் திருவிழா வந்துவிட்டது. தேர் வீதியில் அவள் வீட்டின் முன்பு வந்து நின்றுவிட்டது. எத்தனையோ முயன்றும் அதை மேலே இழுக்க முடியவில்லை. யானை பின்புறமாக தேரை மோதியும் அது அசைய வில்லை. நாளெல்லாம் அங்கேயே நின்றது. இது ஊர் மக்களுக்கு அதிசயமாகவும் கலவரமாகவும் இருந்தது. ஒருவருகொருவர் அதுபற்றி பேசிக் கொண்டனர்.
தருமசீலை ஒரு முடிவுக்கு வந்தாள். தன் குழந்தையைத் தோளில் சாய்த்த படி வீதியில் இறங்கினாள். சட்டென்று தேர் சக்கரத்தின் முன்பு குழந்தையைக் கிடத்தித் தானும் படுத்துவிட்டாள். அதே சமயம் ஒரு பயங்கரமான புயல் வீசத் தொடங்கியது. தேரின் பின்புறம் நின்றிருந்த யானை விரைந்துவந்து தேரை பக்க வாட்டில் ஒரு உந்து உந்தியது. தேர் தடம் மாறி நகர்ந்து கொஞ்சம் விலகி ஓடத்தொடங்கியது. புயலும் நின்றுவிட்டது. குழந்தையும் தாயும் எவ்வித சேதாரமுமின்றிப் பிழைத்துக் கொண்டனர்.