Thursday, December 27, 2012

14-மனக் கருவூலத்திலிருந்து

செடி ஆசை


நான் மிகச் சிறியவளாக, நாலைந்து வயதாக இருக்கும்போது எங்கள் குடும்பம் எதிர்ச்சாரியில் உள்ள ஒரு வீட்டிற்குக் குடி போனது. அந்த வீட்டின் முன்புறம் கொஞ்சம் மண்தரை காலியாகவும், வீட்டின் முன்புறம் அந்தக் காலியிடத்தை வளைத்து சற்று உயரமான சுவரும் மூங்கில் கதவும் இருந்தன. என் தாய் அந்தக் காலியிடத்தில் அவரை, புடலை, பூஷிணி,பறங்கி, பீர்க்கு விதைகளை நட்டு அவற்றுக்கு தினமும் நீர் ஊற்றவும் சில நாட்களில் அவை முளைத்து இலைவிட ஆரம்பித்தன. இது எனக்குப் புதிய செய்தி. தினமும் காலையில் எழுந்தவுடன் செடிகள் அருகே சென்று அமர்ந்து கொண்டு வாஞ்சையுடன் அவற்றைத் தொட்டுத் தொட்டுப் பார்ப்பேன். அவை வளர்வதை ஒரு அதிசயமாகப் பார்த்து மகிழ்வேன். அவற்றுக்கு சிறு சிறு பந்தல் போட்டதும் அவை பந்தலில் ஏறின.

என் அம்மா எந்தச்செடியில் எந்தக்காய் காய்க்கும் என கடையிலிருந்து வாங்கிவரும் காயைக் காட்டி விளக்குவார். வீட்டுச் செடிக்காய் சாப்பிட வேண்டும் என மிகுந்தஆசையோடு இருந்தேன். ஆனால் என் தகப்பனாருக்கு சோழவந்தானென்னும் ஊரில் வேலைகிடைத்து பழநியிலிருந்து புறப்பட நேர்ந்தது. என் ஏமாற்றமும் அழுகையும் என்தாயையும் பாதித்தது. அவர் என்னை சமாதானப்படுத்தி அந்தக் கொடிகளிலிருந்து இளந் தளிர்களைப் பறித்து கூட்டு செய்து உண்ணச்செய்தார். இன்றும் அக் கூட்டு வழக்கமான கீரைக் கூட்டைவிட ருசியாக இருந்ததாகவே தோன்றுகிறது.

பிறகு, நான் வசிக்க நேர்ந்த வீடுகள் எதிலும் செடி போட வசதி இருக்க வில்லை. ஆனால் எனக்கு செடிகளின் மீது அளவற்ற ஆசை. வாசலிலும் கொல்லையிலும் வளரும் குப்பை செடிகளைப் பார்த்து மகிழ்வேன். திருமணம் ஆனபின் கணவன் வீடுவந்து சொந்த வீடு கட்டிய பின் வாசலிலும் கொல்லையிலும் நிறையச் செடிகள் வைத்தேன். மல்லிகைப் பந்தல் நிறைய மல்லிகை மலர் பூத்துக்குலுங்கும். அக்கம் பக்கத்தில் எல்லோருக்கும் கொடுப்பேன். கொல்லையில் பல்விமான காய்கள் ஏராளமாகக் காய்த்தன.

சொந்தவீட்டை விற்றபின் வசித்த எந்த வீட்டிலும் செடி வைக்க முடிந்த தில்லை. சைதாப்பேட்டை புஜங்கராவ் தெருவில் ஏழு குடித்தனத்துக்கு நடுவில் குடியிருந்தபோது கொல்லையில் அடுக்கு மல்லிசெடி ஒன்றை நட்டேன். அது பூக்க ஆரம்பிக்கும் சமயம் வீடு மாற்ற நேர்ந்துவிட்டது. அந்த மல்லிகைப் பூக்களை தொடுத்து அங்கு வசித்த மற்ற வீட்டுக் குழந்தைகள் எங்கள் வீட்டிற்கு என் பேத்தியுடன் விளையாட வந்தன. மனதில் ஒரு மெல்லிய வலி.

நங்கநல்லூரில் பிளாட்(flat) இல் வசித்தபோது (மகனின் சொந்த வீடு) வெளிச்சுவரில் காலியாக இருந்த மண்ணில் என்பேத்தியிடம் வாடிய ‘துலுக்க ஜவந்தி' பூவைக் கசக்கிக் கொடுத்து ‘அந்தக் குழியில் போட்டு தினமும் ஜலம் ஊற்றி வாருங்கள் செடி முளைத்துப் பூக்கும்' என்று சொன்னேன். அவ்வாறே அவர்கள் செய்யவும் செடி முளைத்து பூக்கவும் தொடங்கியது. அது நாள் வரை மற்றவர்களால் திரும்பியும் பார்க்கப்படாத அந்த இடம் கவனம் பெற்றது. மற்ற குடித்தன வீட்டுக் குழந்தைகள் அந்தப் பூக்களைப் பறித்துக்கொண்டு செடிக்கு சொந்தமும் கொண்டாட ஆரம்பித்தனர். பெரியவர்களும் அதற்கு துணைப் போயினர்.
பிளாட்டை விற்றுவிட்டு சிட்லபாக்கத்தில் நிலம் வாங்கி வீடு கட்டிய பிறகு வீட்டை சுற்றி நிறையச் செடிகள். பலவண்ண செம்பருத்தி பூ செடிகள். ரோஜா, நித்திய மல்லி, கனகாம்பரம், நந்தியாவட்டை, துளசி போன்ற செடிகளுடன் தென்னை, கொய்யா, ரஸ்தாளி வாழை, சாதா வாழை என்று எங்கும் பசுமையாக இருந்தது. ஆனால் வருடம் செல்லச் செல்ல பராமரிப்பும் கவனமும் குறைந்து அலட்சியம் மேலிட்டது. பாம்பு நடமாட்டம் அதிகரித்து விட்டது, உதிரும் இலை தழைகளால் நடப்பது இடைஞ்சலாக இருக்கிறது என்று சொல்லி என் மகன் எல்லா மரங்களையும் வெட்டிவிட்டான். இப்போது மிஞ்சுவது ஓரிரு தென்னையும், ஒரு வெள்ளைப்பூ செடியும்தான்.

No comments: