Wednesday, September 19, 2012

12-மனக் கருவூலத்திலிருந்து

நல்ல/கெட்ட சகுனம்

    நல்ல சகுனம் பார்த்துக் காரியங்களைத் தொடங்குதல் என்பது மனதுக்கு ஒரு அமைதியை, சந்தோஷத்தைத் தருகிறது என்பது உண்மைதான். ஆனால் அபசகுனமாகத் தான் பிறரால் உணரப்படும்போது அந்த மனம் என்னபாடு படுகிறது என்பது அந்த நிலையை அனுபவித்தவருக்குத்தான் தெரியும்.

‘பல்லி' சகுனங்கள்

    முன்பு எப்போதோ ஒரு புத்தகம் படிக்கக் கிடைத்தது. அது பல்லி சாத்திரப் புத்தகம். படிக்க ரசமாக இருந்தது. அதில் ஒரு செய்யுள்:

முன்னாவது வலமாவது
மொழியின் திருவருளாம்
பினாவது இடமாவது
பேசும்குரல் பல்லி
சொன்னால் அதை
உமை கேளென
அரனார் மொழிகுவதால்
பொன்னாவது பொருளாவது
உயிராவது போமே
    இது தவிர, பல்லி விழுதலின் பலன், பல்லி எத்தனை முறை சப்தம் செய்கிறது என்ற எண்ணிக்கைக்குத் தக்க பலன் என்பதுபோன்ற பல விவரங்கள் செய்யுள் வடிவில் இருந்தன. ஒருநாள் என் தலையில் பல்லி விழுந்தது. பலன் பார்த்தேன். ‘தலை கலகம்' என்றும், ‘சிகை மரணம்' என்றும் எழுதியிருந்தது. சிகையில்லாமல் தலை இருக்கமுடியுமா? என்ன நடக்கிறது பார்க்கலாம் என்று காத்திருந்தேன். எதுமே நிகழவில்லை. பல்லிகள் வலப்புறச் சுவரில் அமர்ந் திருக்கும்போது சப்தமிட்டுவிட்டு இடப்புற சுவருக்கு நகர்ந்தும் சப்தமிடுகின்றன. ஒரே நாளில் சில மணி இடைவெளிகளில் சப்தமிடுகிறது. இதில் எதை எடுத்துக் கொள்வது? ஆக, இந்தப் பல்லி ஜோசியம் குழந்தைகள் விளையாட்டு என்று தீர்மானித்துக் கொண்டேன்.

    ஒரு முறை நான் பூக்காரியைக் கூப்பிட்டுப் பூ வாங்கினேன். என் மறுமகள் அந்தப் பூச்சரம் முழுவதையும் சுவாமி படத்திற்கு சாற்றி விட்டாள். நான், ‘நீ ஏன் பூ வைத்துக் கொள்ளவில்லை?' என்று வினவினேன். ‘நீங்கள் விதவைப் பெண்ணிடம் பூ வாங்கினீர்கள். அவள் எதிரில் அதைச் சொல்ல முடியாமல் பேசாதிருந்தேன். சுமங்கலிகள் விதவையிடம் பூவாங்கி வைத்துக் கொள்ளக் கூடாது அல்லவா?' என்று பதில் சொன்னாள் மறுமகள். எனக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. கணவனை இழந்த ஒரு பெண் ஒரு தொழில் செய்துகூடப் பிழைக்க முடியாதா? என்ற எண்னமும், நாம் இவ்வாறான பெண்களிடம் தானே பூ வாங்கி வைத்துக் கொள்கிறோம். நமக்கு ஒன்றும் நேர்ந்து விடவில்லையே! இந்தக் கிழவயதிலும் சுமங்கலியாகத்தானே இருக்கிறோம் என்றும் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

    மகனும் மறுமகளும் சம்பளம் வாங்கி வந்தால் என் கணவரையும் என்னையும் சேர்த்து நிற்கவைத்து தட்டில் சம்பளப் பணத்தை வைத்து எங்களிடம் கொடுத்து நமஸ்காரம்செய்து, பின் அதை வாங்கிக் கொள்வார்கள். என் கணவர் சற்று மூளைக் கலக்கமாக இருந்தார். தட்டில் இருக்கும் பணக் கட்டை எடுத்து எண்ணத் தொடங்கிவிடுவார். கடை முதலாளியாய் இருந்த போது பணம் புழங்கிய பழக்க தோஷம். என் மகன் அவர் கையிலிருந்து அதை வெடுக் என்று பிடுங்கிக் கொள்வான். நான் மனதிற்குள் ‘எண்ணிப்பார்க்க அனுமதித்தால்தான் என்ன? பணத்தைத் தின்றா விடுவார்?' என்று சிரித்துக் கொள்வேன். அவர் காலமான பிறகு அந்த நாடக அரங்கேற்றம் நின்று விட்டது.

    சாதாரணமாக சகுனம் பார்ப்பவர்களும் கூட, பெற்ற தாயிடம் சகுனம் பார்க்கக் கூடாது என்பதாக சாத்திரம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வீட்டின் சுபகாரியங்களின் துவக்கத்தில் மஞ்சள் பூசிய இரண்டு தேங்காய் களை விதவையானாலும் தாயாரிடம் கொடுத்து நமஸ்கரித்து வாங்கிக் கொள்வது வழக்கம். ஆனாலும் சகுன நம்பிக்கை உள்ளவர்களுக்கு அவ்விடத்திலும் சகுனம் பார்க்கத் தோன்றிவிடுகிறது.

No comments: